தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத, சந்தித்திராத சவால்களோடும், சாதனைகளோடும், இழப்புக்களோடும் நடந்தது ~ ஆனந்தபுர பெரும் சமர். அனைத்து உலக நாடுகளின் உதவியுடனும்,பாரிய படைக்கலன்களுடனும், எம் இனத்தை அழித்துக் கொண்டிருந்த சிங்கள இனவெறியர்களை முழுப் பலத்தையும் பிரயோகித்து புதுக்குடியிருப்பு ஆனந்தபுரப்பகுதியில் இடை மறித்தார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.
ஆக்கிரமிப்பாளர்களின் அரக்கத்தனமான கொடும் யுத்தத்தை மனோபலத்துடன் எதிர் கொண்டார்கள் விடுதலைப்புலிகள். யுத்தகளங்களில் பயன்படுத்த, தடை செய்யப்பட்ட பல விதமான ஆயுதங்களாலும், போர் விமானங்களாலும், ஆட்லெறிகளாலும் பரவலாகத் துடைத்தெறிந்து முன்னேறியது சிங்கள இராணுவம்.
விடுதலை அல்லது வீரச்சாவு என்ற தாரக மந்திரத்தை உச்சரித்தபடி ஒவ்வொரு போராளிகளும்,பொறுப்பாளர்களும், தளபதிகளும் அக்களத்தில் சாதனை படைத்தனர். பல நூற்றுக்கணக்கான இராணுவத்தைக் கொன்று குவித்தனர். உண்ண உணவு இல்லை, குடிக்க தண்ணீர் கூட இல்லை அனைத்து உதவிகளும் தடை செய்யப்பட்ட நிலையில் தமக்கேற்பட்ட சோர்வைக் கூட மறந்த நிலையில் தம்மிடம் இருந்த வளங்களை வைத்து சாவின் உச்சகட்டத்தில் கூட தர்மயுத்தம் நடத்தினார்கள். அக்களத்தில் போரிட்ட ஒவ்வொரு வீரர்களுடைய அழிக்க முடியாத வரலாறுகளும் அவர்களுடைய செங்குருதிகளால் அந்த மண்ணில் பதியப்பட்டது .
பிரிகேடியர் தீபன்

“என்னைக் காப்பாற்ற வேண்டாம், என்னை விடுங்கோ இந்த சிங்களவனை பழி வேண்டணும்”என வீரச் சாவடையும் தருணத்தில்க் கூட ஒலிக்கிறது தளபதி தீபனின் குரல். போர்க்களகளில் போராளிகளோடு வாழ்ந்த அந்த தளபதி ஆனந்தபுரத்தில் ஆவேசமானார். அதர்ம யுத்தம் நடந்தும் அரக்கர் கூட்டத்தை அழித்தொழித்து சாவேனே தவிர மண்டியிட மாட்டேன் என சபதம் பூண்டார். சிங்கள இராணுவம் நடத்தும் யுத்த மழையை எதிர்த்து ஒரு பகுதியால் தீபனும் அவர் போராளிகளும் சண்டை செய்து கொண்டிருக்கிறார்கள். இயங்கவே முடியாத அளவுக்கு தீபன் பலத்த காயம் அடைகிறார். அவரைக் காப்பாற்ற முயல்கிறார்கள் போராளிகள். தன்னைக் காப்பாற்ற வேண்டாம் என கத்தியபடி எதிரியை நோக்கி ஆவேசமாகத் தாக்குதல் நடத்தி வீரச்சாவடைகிறார் பிரிகேடியர் தீபன்.
எதிரிக்குத் தலைவலியாக இருந்த தீபனை, போராளிகளுக்குப் பக்க பலமாக இருந்த தீபனை, தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. போர்க்களங்களில் ஓயாத புயலாக சுழன்றடிக்கும் தீபனை எதிரி நன்கறிவான். தீபனின் கட்டுப் பாட்டில் இருக்கும் பிரதேசத்தை எட்டிப் பார்க்கவே பயப்படுவான் எதிரி. போராளிகளை ஊக்குவித்து அவர்களை யுத்த களத்தில் எப்பவுமே மகிழ்ச்சியாக வைத்திருக்கும் தளபதி தீபனை அனைத்துப் போராளிகளுக்கும் பிடிக்கும். அவருடைய கட்டளைக்காகக் காத்திருப்பார்கள் போராளிகள் .
கள நிலவரங்களை அதி வேகமாகப் புரிந்துகொண்டு அதிரடி முடிவுகளை எடுத்து, எதிரியை திணறடிக்கும் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வழிகாட்டலைப் பின்பற்றி வளர்ந்த தீபன் அவர்கள், சாள்ஸ் அன்ரனி படையணியை வழிநடத்தி நல்ல வழிகாட்டியாக , நல்ல போர்த்தளபதியாக உயர்ந்து , கட்டளைத்தளபதியாகப் பணிபுரிந்தார் .பல சாதனைகளுக்கும்,பல வெற்றிகளுக்கும் காரணமாய் இருந்த தீபனுக்கு தமிழீழத்தில் தனி வரலாறுண்டு . எதிரிக்கு சவால் விட்டு, போர் புரியும் தீபன் சந்தித்த களங்கள் பற்பல. சாதனைகளோடு வாழ்ந்த அந்த வீரனின் சாதனைகள் என்றென்றும் பதியப்பட வேண்டியவை. தமிழினத்தால் படிக்கப்பட வேண்டியவை.
சாதனை வீரனே பிரகேடியர் தீபன்

உங்கள் கனவு நனவாகும் வரை
தொடர்வோம் உங்கள் தடம் ………
பிரிகேடியர் விதுஷா,
பிரிகேடியர் துர்க்கா

பெண் என்னும் மரபுக்கு முடிசூட்டும் முகமாக, அடக்கப்படும் பெண்ணே நீதான் அதற்கு எதிராகப் போரிடு,என தட்டிக்கொடுத்து சிங்களத்தை முட்டி போட வைத்த எம் தேசத் தலைவரின் வழி தோன்றலால்… ஈழத்துப் பெண்களின் வீரத்து நிகழ்வுகள் உலகையே பலதடவை உலுக்கி வைத்துள்ளது. இவ்வழியில் அடியெடுத்து ஆரம்பித்த வரிவடிவப்புலித் தளபதிகள்தான் பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா,
ஆணுக்கு நிகராய் போருக்கு எதிராய் நேருக்கு நேர் நின்று போரிடும் வலிமை , இவர்களைப் போல, ஈழத்துப் பெண்களை மிஞ்ச யாருண்டு, என நெஞ்சுரம் கொண்டு நிமிர்ந்து களங்கள் பல கண்ட ஈழக்கண் ஒளிகள்.
ஒவ்வொரு வித்துடல் எதிரியிடம் விடுபட்ட வேளையிலும் அக்காவின் இரவுகள் விடிகாலைப் பொழுதுகளே, அக்கா உங்களையே நாம் விதைத்த பின்பு இன்றுவரை எமக்கு விடியவில்லை காலைகள், இணைபிரியாத தோழிகளாய் தமிழீழம் காத்தவர்கள். காப்பரனில் நடந்தவர்கள். கடுகளவு யோசனையும் பகிர்ந்த பின்பே கடமை செய்வார். காடு , நாடு,கடல் , வானம் தொட்ட எம் தமிழ் மறத்திகள் கண்ணாகக் கடமையேற்று, கருத்தோடு களமாடிய பெண்ணினத்தின் முதுகெலும்பு இவர்களென்றால் மிகையில்லை.
ஆனந்தபுரத்தில் கடுஞ்சமர் மூண்டபோது தலைமைதனைப் பாதுகாத்தும் சண்டையிட்ட போதுகூட, களமுனையும் பிரிக்கவில்லை இவர்களை.களத்திடை வீழ்ந்த வேளை துர்க்காக்கா வீழ்ந்த செய்தி விதுசா அக்கா செவிவந்து சிறிது நேரம் செல்லவில்லை அனலாகி விரைகிறார் அக்காவும் முன்னோக்கி, அடுத்தநொடி பாரிய சண்டை. திணறுகிறான் எதிரி. போர்க்கோலம் கொண்டவளை துளைத்த ரவை எவனதுவோ ? சிங்களமே இனி உனக்கு பெருமெதிரி நாங்களடா.

பல ஆயிரக்கணக்கான வீரர்களை ஈழயுத்த களங்களில் இருபத்தைந்து வருடங்களாக நேர் நின்று வழிநடத்தி சாதனைகள் படைத்தவர்கள். உடல் முழுவதும் காயமுற்ற நிலையிலும் பருத்தியாடை போல் உடலை மீண்டும் பொருத்தி, ஈழவிடுதலைக்காய்த் தம்மை வருத்திய கட்டளை தளபதிகள்
உயிர் விடும் உச்சக் கட்டத்திலும் உயிரற்ற எம் உடல் கூட எம்தாய் மடியில் எருவாக வேண்டுமென்ற கொள்கையில் தவறாது நின்ற களங்களில், கடைசிக் களம்தான் ஆனந்தபுரம் ,ஈழத்துக்கான பாரிய யுத்தம்.
இதில், தலைவன் தலைமையில் தலை நிமிர்ந்து சென்றவர்கள், கரும்புலிகளுக்குச் சமனாக பெரும் படையை எதிர்த்து சாவு வரும் வரை சிந்திக்க முடியாத துன்பங்களை எல்லாம் சந்தித்து, இறுகிய தொண்டையின் இறுதி ஓசை வரை, பெருகிய இரத்த ஆற்றின் நடுவினில் உயிர் விட்டவர்கள் .

அக்காக்கள் இருவருடன் ஆனந்தபுரத்தில், பல நூறு தோழர்களும் தோழியரும் வீச்சோடு சண்டையிட்டு வீரச்சாவு எய்திவிட்டார். இவர்களுக்காய் நாம் எப்பொழுதும் அழுதாலும் எம் உணர்வு குன்றிடாது. முப்பொழுதும் உமை நினைந்து உரமேற்றி நடக்கின்றோம். மிகவிரைவில் அண்ணன் அணி நடையேற்க ஆனந்தபுரத்திலே உங்கள் உடல் வீழ்ந்த மண்ணெடுத்து ஈழவிடுதலை பெற்று உடையணிந்து தேசியக்கொடி போர்த்தி தலைவன் கை பூத்தூவி உங்கள் தாகம் தீர்த்த பின்பு உறங்கவைப்போம் நீர் துயிலும் இல்லங்களில். உறுதி கொள்வோம் எண்ணங்களில். கல்லறைச் செல்வங்களே! நீங்கள் களத்திலும் உறங்கவில்லை,உணவின்றி,நீரின்றி உரமேற்றி வாழ்ந்தீர்கள். உங்கள் உறக்கம் தொலைத்தவர்கள் இனி ஒருபோதும் கண்ணயர முடியாது. உறுதிகூறி வீச்சோடு நடைபோட்டு, வீழ்த்திய சிங்களத்தின் உடல் ஏறி வந்து உரமிட்டுக் கல்லெடுத்து கட்டிய கல்லறைக்குப் பூத்தொடுத்து பூசிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதுவரை பற்றைகள் போர்த்திய உம் விதைகுழிகள் பதுங்கி இருக்கட்டும்.
பெண் போராளிகளுக்கு “இரு தாய்களாக, இரு தளபதிகளாக” இருந்து படை நடத்திய பெரும் தளபதிகளே ! உங்கள் கனவு நிச்சயம் நனவாகும்.
பிரிகேடியர் ஆதவன்

“எங்கட உயிரைக் கொடுத்தாவது அண்ணையைக் காப்பாற்றணும்” ஆனந்தபுரத்தில் பிரிகேடியர் ஆதவன் போராளிகளுக்குக் கட்டளை வழங்கினார்.
போராளிகளில் ஒருவனாக மாறி, கட்டளைகளைப் பிறப்பித்த வண்ணம் பல தடைகளை உடைத்து, தானே குறிபார்த்துச் சுட்டு, எதிரிகளை வீழ்த்திய வண்ணம் முன்னேறுகிறார் ஆதவன்.
எப்பணி ஆற்றினாலும் தலைவரை பாதுகாப்பதே தன் முதற்பணி என எண்ணும் ஆதவனால் கள நிலைமைகளை அறிந்து கொண்டு பொறுமை காக்க முடியவில்லை, தலைவர் அருகிருந்து தலைவரைப் பாதுகாப்பதில் தன்னுடைய வாழ்நாட்களில் கூடிய காலங்களைக் கழித்த ஆதவன், கதி கலங்கி நின்றார். “எம் தலைவருக்கு சிறு இன்னல் நேருமாயின் அதைப் பார்க்க நான் உயிருடன் இருக்க கூடாது ” என தன் போராளிகளிடம், தன் பிள்ளைகளிடம் அடிக்கடி கூறும் ஆதவனால் சினம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. பகை மேல் சீற்றம் கொண்டு சீறி எழுந்தார். படைகொண்டு தடையுடைத்து எதிரியை அழித்து தலைவரை காப்பற்றினார்.
அக்களத்தில் இருந்து தலைவரைப் பாதுகாத்த பின்பும், தான் நேசித்த மண்ணுக்காக, தான் வளர்த்த போராளிகளுக்காக அக்களத்தை விட்டு அகலாது கலங்காது போரிட்டார். போராளிகளை உற்சாகப் படுத்தி புயலாகப் போரிட்ட ஆதவன் அவர்கள் இயங்கவே முடியாத அளவுக்கு பலத்த காயம் அடைகிறார் . காப்பாற்ற முயன்ற போராளிகளைப் பார்த்து “எதிரி அண்மித்து விட்டான், என்னை விட்டுட்டுப் போங்கோ “எனக் கூறிய இறுதி வார்த்தைகளுடன் அவருடைய மூச்சு அடங்கிப் போனது.
தலைவரை உயிராக நேசித்த அந்த வீரத்தளபதி தன் இறுதி மூச்சை விடும் போது கூட தலைவரைப் பற்றியே நினைத்தார். தலைவருக்கு சிறு துன்பம் கூட நேரக் கூடாது என எண்ணினார்.
பல காலங்கள் தலைவரோடு நின்ற அந்த அற்புதத் தளபதியின் சாதனைகள் வியக்கத்தக்கது. எப்பணி ஆற்றினாலும் அப்பணியில் அத்தனை நேர்த்தி இருக்கும் . மிகவும் கடினமான நிர்வாகப் பணியை சுலபமாக்கிய ஒரே தளபதி ஆதவன் அவர்களே. அனைத்துத் தளபதிகளுக்கும், அனைத்துப் பொறுப்பாளர்களுக்கும், தலைவர் கூறும் வார்த்தை “நிர்வாகத்தை எப்படிச் செய்வது என்று கடாபியிடம் படித்து விட்டு வாருங்கள். “அது போலவே போராளிகளின் திறமைகளை இனம் கண்டு அவர்களை ஊக்குவித்து வளர்ப்பதிலும், அவர்களுடைய உள்ளத்துச் சிந்தனைகளைப் புரிந்து கொண்டு செயல்ப்படுத்துவதிலும் அவருக்கு நிகர் அவரே. குறி வல்லுணரான ஆதவனைப் பார்த்து வியக்காதவர்களே இல்லை. சொல்லிவைத்துச் சுடுவதில் அவருக்கு நிகர் அவரே. கரும்புலி வீரர்களை உருவாக்கி அவர்களை வழி நடத்திய அந்த அற்புதத் தளபதியும் இவரே, புதிய வீரர்களை போராட்டத்துக்குள் உள்வாங்கி புத்துணர்ச்சியோடும், கருத்துச் சுதந்திரத்துடனும் பயில்வித்த வித்தகரும் இவரே .
பல பணிகளை நேர்த்தியாகச் செய்து, பல சாதனைகள் புரிந்து, தலைவர் மனதில் தனியிடத்தைப் பிடித்த பிரிகேடியர் ஆதவனே! என்றென்றும் உங்கள் நினைவுகளைச் சுமந்து கொண்டு உங்கள் கனவு நனவாகும் வரை உம் தடம் தொடர்வோம்………………
கேணல் அகிலேஷ்,

லெப் கேணல் ராஜேஷ்,

லெப் கேணல் நளன்

பிரிகேடியர் ஆதவனோடு ஆனந்தபுரத்தில் அருகிருந்த பொறுப்பாளர்கள் இவர்கள். ஆதவனால் பல்லாண்டுகளாக பயில்விக்கப்பட்ட பண்பாளர்கள் இவர்கள். பல போர் வீரர்களை வளர்த்தெடுத்து, தேசக்கடமை ஆற்றிய சேவகர்கள் இவர்கள். வரலாறே பிரமித்து நிற்பதாக சிலரின் வரலாறுகள் அமைந்து விடுகின்றன. அத்தனை அர்ப்பணமும், ஈகமும், தியாகமும் அவர்களின் வரலாறுமுழுவதும் நிறைந்தே கிடக்கும். அப்படியான ஒரு வரலாற்றுக்கு உரியவர்களாகவே இவர்கள் செயலாற்றினார்கள் .
தேசவிடுதலைப் போரில் ஒரு காலை இழந்திருந்த அகிலேசை தளபதி ஆதவன் அவர்கள் தளப்பணிக்காக அமர்த்திய போதும், “இல்லை அண்ணை நான் உங்களோடு சண்டைக்கு வாறன் , என்னாலை சண்டை பிடிக்க முடியும்.”எனக் கூறி, போட்டிருந்த பொய்க் காலுடன் களம் புகுந்தவன் .
தன்னை வளர்த்த தளபதியோடு இணைந்து தன் தேசத்தையும், தலைவரையும் காப்பாற்றப் போராடினான். பல்லாண்டுகளாக பல பணிகள் ஆற்றிய கேணல் அகிலேஷ் ஆனந்தபுரத்தில் விதையாகிப் போனான் .
அகிலேசுடனான எனது முதற்சந்திப்பு முள்ளியவளையில் ஒரு முகாமில் அகிலேசும் அவனது உற்ற தோழனும் அங்கு வந்திருந்தார்கள்.பார்ப்பதற்கு பெரியவர் பாவனையில் இருக்கும் இவனோடு, பழகியபின் புரியும் அவனுடைய குழந்தைத்தனமான பேச்சும் பணிவும், வயது வேறுபாடின்றி அனைவரையும் மதித்து நடக்கும் பண்பு மிக்கவன்.அவனுடைய போராட்ட வாழ்க்கையில் அதிக காலத்தை பிரிகேடியர் ஆதவன்/கடாபி அருகிருந்து பணி செய்தவன். இறுதி நாள் வரை அவனுடைய இறுதிக்கணம் வரை அவர் அருகிருந்தவன்.
மெல்லிய பேச்சுத் தடுமாற்றம் இழையோடும் இவன் பேச்சில் சுவாரசியமிருக்கும். பேசும் வேளையெல்லாம் கண்ணைச் சிமிட்டியபடியே பேசுவது அவனுடைய இயல்பு ஆதலால் ஒரு சிலர் பிழை நினைத்திருக்கவும் கூடும். என்னையே சிலர் கேட்டதுண்டு.ஆனால் அடுத்தவர் மனம்நோக இவன் வாழ்நாளில் என்றும் நடந்திருக்கமாட்டான். அப்படியொரு சாந்தம் குடிகொண்டவன். என்னை அன்பாக அவன் அழைக்கும் வார்த்தைக்காக என் மனம் இன்றும் ஏங்கி நிற்பது நீ அறிய வாய்ப்பில்லை.
பிரிகேடியர் ஆதவன் படுகாயமடைந்த நிலையில் அகிலேஷ் அவ்வணியை செவ்வனே வழிநடாத்தினான். அவர் அருகிருந்து அறிவுரை கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கான திட்டம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். அந்த வேளையில் தான் அது நடைபெற்றதாக ஏனைய தோழர்கள் சொன்னபோது உங்கள் இருவரின் கடைமைக்கு அப்பாற்பட்ட அன்பை பார்த்து வியந்து நின்றேன். எங்கிருந்தோ வந்த எதிரிரவை ஒன்று உன் நெற்றியை துளைத்துவிட ஆதவன் அண்ணா மடிமீது நீ சரிந்து வீழ்ந்ததாக! உனை ஊட்டி வளர்த்தவர்,உரிமையோடு ஏசுபவர், உணவு கூடி உண்டவரின் குடும்பமும் உன் உறவாய் ஏற்றிருந்த உந்தனை அணைத்தபடி அழுதாராம் அந்தத்தளபதி.
27.03.2009 அன்று நீயும் உன் பொறுப்பாளரும் பச்சைப் புல்வெளியூடாக இறுதிப்பயணம் வந்தீர்கள். உன் வீட்டில் சொல்லி வைத்து கோழிசமைத்து இருவரும் சேர்ந்து உன் அம்மாவின் கையால் கடைசிச் சோறு உண்டதாக உன் துணைவி சொல்லி அழவே தெரிந்து கொண்டேன். யார் வீட்டிற்கும் அலுவலின்றி போகாத நீங்கள் இருவரும் அன்று நேசமாக அணைத்து விடை பெற்று சென்றதுவும் முன் ஏற்பாடான திட்டம் என்று பின்பு நாம் உணர்ந்து கொண்டோம். சிறு குழந்தைகள் என்றால் அகிலேஸ்மாமா ஆச்சுமாமா ஆகிடுவார். அது அவனுடைய செல்லப் பெயர். அனைவருக்கும் பார்த்தவுடன் இவனை பிடித்துக் கொள்ளும் பணிவு மிக்கவன். ஆனால் கடமையில் கண்ணயராது உழைத்தவன்.
இவனுடைய பல பணிகள் இன்றுமென்ன இனியும் இனிவரும் காலங்களில் கூட வெளித்தெரிய வாய்ப்பில்லை. இவன் தன் விசுவாசமான பணியால் மட்டுமே தலைமையின் அருகு சென்றவன். அண்ணனே அகிலேசின் வேலை என்றுதான் கதைத்ததை என் காதால் கேட்டிருக்கிறேன். இரகசியம் காப்பதில் நீ மகா கெட்டிக்காரன். உன் மனைவிக்கும் கூட மூச்சு விட மாட்டாய். அண்ணனால் பெரிதும் விரும்பபட்டவர்களில் நீ முக்கியமானவன்.
கடல் நடுவில் ஒரு திட்டமிட்ட தாக்குதலுக்காக ஆதவனோடு நீ சென்றிருந்தாய், அங்கு திட்டத்துக்கு மாறாக எதிரி உலங்குவானூர்தி சடுதியாக மிக அண்மையில் தோன்றி தாக்குதலை ஆரம்பிக்க இருபகுதிக்கும் கடுஞ்சமர் மூண்டது. உடனடியாக பிரிகேடியர் ஆதவனின் கட்டளைக்கு, அகிலேஸ் உலங்குவானுர்தி நோக்கி சற்றும் பதட்டம் இன்றி உந்து கணையை ஏவி விட உலங்குவானூர்தி வெடித்துச் சிதறியது. சற்றும் எதிர் பாராமல் கள நிலைமை மாறிவிட இவர்கள் வெற்றியோடு தளம் திரும்பினார்கள். இந்த வரலாற்றுச் சாதனைக்கு கேணல் அகிலேஷ்தான் சொந்தக்காரன் என்று யாரும் அறிய வாய்ப்பில்லை. அன்று மட்டும் துணிந்து இவன் கணப்பொழுதில் அவ் உலங்கு வானுர்தியை அழித்திருக்காவிட்டால் அனைவரும் படகோடு மூழ்கும் நிலையே இருந்ததாக ஆதவன் பெருமையாக கூறிக்கொண்டார்.
பல சந்தர்பங்களில் அவர் அருகிருந்தும் , உன் கால் ஒன்றை இழந்த பின்னும் சளைக்காது பணி செய்தவன். அவரைக் காப்பரனாய்க் காத்து நின்றவன். உன் அருகிலேயே அவரும் உறங்கியதை நீ அறிய வாய்ப்பு இல்லை. உங்கள் அனைவரையும் விட்டு வர மனமின்றி கண்டல் காட்டுக்குள் தன் கல்லறையை அமைத்துக் கொண்டார். இனி நீ அமைதியாக சேர்ந்துறங்கும் உன் தோழர்களும் அங்குதான் உன்னருகில் துயில்கின்றார். அனைவரையும் இந்நாளில் மனதிருத்தி வணங்குகிறோம்.
தமிழீழ விடுதலைப் போரில் பல களங்கள் கண்ட ராஜேஷ் களத்தில் ஒருகண்ணை இழந்திருந்தார். கடமையை கண்ணியத்துடன் செய்யும் ஓர் அற்புத வீரனாகவும், பல போராளிகளை வளர்த்தெடுத்து அவர்களுக்கு முன் உதாரணமாகவும் திகழ்ந்தார். நீண்ட காலங்களாக தேசவிடுதலைப் போரில் பங்காற்றியவர், களங்களில் மட்டுமின்றி தளங்களிலும், சிறப்புறப் பணியாற்றினார். தேசத் தலைவரைக் காக்கும் பணியிலும் பல வருடங்கள் ஈடுபட்டான்.
தமிழ்த் தேசத்தின் விடிவுக்காக அயராது உழைத்த லெப் கேணல் ராஜேஷ் ஆனந்தபுர பெருஞ்சமரில் வீர காவியமானான். இந்த வீரனை என்றென்றும் மனதில் இருத்தி இவன் தடம் தொடர்வோம்.
மூர்க்கத்தனத்தோடு முன்னேறிய இராணுவத்தைக் கொன்று குவித்து விதையானவன் இவன் .தன்னுடைய இரண்டு வயதுக் குழந்தையை சிங்கள அரக்கர்களின் விமானத்தாக்குதலுக்குப் பலிகொடுத்து, அத்துயரில் இருந்து மீழமுன்பே களம் நோக்கி விரைந்தவன் நளன். ஆனந்தபுரத்தில் நடந்த உக்கிரப் போரில்
தேச விடுதலைக்காக பல பணிகள் ஆற்றிய இவன் இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புப் பொறுப்பாளராக சில காலம் பணிபுரிந்தான். மிகவேகமாகவே அனைவரது தேவைகளையும் அனைவரது கோரிக்கைகளையும் உள்வாங்கி படையணியை நிர்வகிக்கும் ஒருவனாக ஆகிப்போனான். நிர்வாகப் பணிகளை அழகாக போராளிகளுக்குக் கற்று கொடுத்தான்.
அனைவராலும் விரும்பப்படும் பொறுப்பாளனாகச் செயலாற்றிய லெப் கேணல் நளன் அவர்களை என்றுமே மறக்க முடியாது .
இவர்களோடு கப்டன் குட்டியருவி, கப்டன் இசைப்பிரியன், கப்டன் அமர்முரசு, கப்டன் நெடியவன், மேயர் ஈழச்செல்வன் இவர்கள் எம் இனத்தின் இருள் நீக்கிகள் ,எம்மனங்களில் சுடர் விட்டெரியும் சுடர் மணிகள். தூக்கம், சோர்வு, உணவு என்று எல்லாம் மறந்து எந்நேரமும் இயங்கியவர்கள். ஆனந்தபுரத்தில் பிரிகேடியர் ஆதவனோடு இறுதிவரை உறுதியுடன் உழைத்தவர்கள். கட்டளைக்குக் கீழ்ப் பணிந்து அனைத்துக் கடினமான பணிகளையும் அர்பணிப்புடன் ஆற்றியவர்கள். இந்தத் தியாகச் செம்மல்களை என்றும் எம் மனங்களில் இருத்திப் பூசிப்போமாக.
கேணல் தமிழ்செல்வி

உலகத்தில் வாழும் தாய்களுக்கெல்லாம் பெருமை தேடித்தந்தாள் ஆனந்தபுரத்தில் எங்கள் தமிழ்செல்வி. உக்கிரமான போர்க்களம் என்று தெரிந்து கொண்டும் இரண்டு வயதுக் பெண்குழந்தையை அருகிருந்தவர்களிடம் விட்டுக் களம் புகுந்தவள் இவள். கள நிலவரங்களைத் தெரிந்து கொண்டும் தான் பெற்ற பிள்ளையை விட்டு தன் தாய் நிலம் காக்க ஓடியவள் இவள். களத்தில் தன் தளபதி பிரிகேடியர் விதுசாக்காவிற்குப் பக்கதுணையாக நின்று போர் புரிந்தவள் இவள். தளபதிகளான பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா அக்களத்தில் வீரச்சாவைத் தழுவிய போது, அனைத்துப் பெண் போராளிகளையும் ஒழுங்குபடுத்தி, வழிநடத்திப் போர் புரிந்தவள் இவள் . களத்தில் தான் வீரமரணம் அடைவது உறுதி எனத் தெரிய வந்த போது, தன் தோழிக்கு தொலைத்தொடர்பு மூலம் சொன்னாளாம்

“நான் இந்தச் சண்டையிலை இருந்து நிச்சயம் உயிரோடு வரமாட்டன். என்ரை பிள்ளையை நீங்கதான் எல்லாரும் பார்க்கணும். நீங்க எல்லாரும் பார்ப்பீங்கள் என்ற நம்பிக்கையோடு நான் போறன்”

அவள் தோழி ” தினமும் அவள் வார்த்தைகள் தன் காதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது” எனக் கூறி கண்கலங்கி நின்றபோது…….. அவள் வார்த்தைகள் அனைவரையும் புல்லரிக்கச் செய்தது. அவளுடைய அந்தச் சாதனைகள் விண்ணைத் தொட்டு நிற்கின்றது.
சிறுவயதில் போராட்டத்தில் இணைந்த இவள் மணலாற்றில் தன்னுடைய பயிற்சியினை எடுத்து முடித்தவள். மணலாற்றில் உள்ள மண்கிண்டி மலையில் ஓர் தாக்குதலில் தன் திறமையை வெளிக்காட்டி அனைவராலும் இனம் காணப்பட்ட ஒரு போராளி ஆனாள். கனரக ஆயுதங்களைக் கையாள்வதில் இவளுக்கு நிகர் இவளே. அனைத்துக் கனகர ஆயுத பயிற்சிகளையும் இலகுவாகப் பயின்றது மட்டுமின்றி, பிரதான கனரகப் பயிற்சி ஆசிரியருமானாள். ஜெயசிக்குறுவில் அவளுக்கென்று தனி வரலாறு உண்டு. அனைத்துக் காலநிலைகளிலும் நடந்த இச்சமரில் அவளுடைய பாதம் படாத இடமே இல்லை. மாலதி படையணியின் தளபதியாக பல களங்களை வழி நடத்தி, சாதனையாளராகப் தலை நிமிர்ந்து நின்றாள்.

விதையாகிப் போன கேணல் தமிழ்செல்வியே ! விழி மூடித் துயில் கொள்ளு….. உன் கனவு நனவாகும். அதுவரையும் ஓயோம்.
பிரிகேடியர் மணிவண்ணன்
இயல்பாகவே அமைதியான சுபாபமும், கனிவான பேச்சும் நிறைந்த மணிவண்ணன், போர்க்களங்களில் புயலாக மாறிவிடுவார். பல போர்க்களங்களைச் சந்தித்து விழுப்புண் அடைந்த போதிலும் போர்க்குணம் மிக்க வீரனாகவே செயற்பட்டார். களநிலவரங்களை உடனுக்குடன் புரிந்துகொண்டு மோட்டார் செல்களை விரையப்படுத்தாமல் சரியான இலக்குக்கு செல்களை அடிக்க கட்டளைகள் பிறப்பிப்பார். “வருகுது பார் “என மணிவண்ணன் களத்தில் உள்ள தளபதிகளுக்கு கட்டளை பிறப்பிக்கும் போது களத்தில் போரிடும் போராளிகளின் மகிழ்ச்சியைப் பார்க்கவே தேவையில்லை. போர்க்களங்களில் இறுக்கமான சூழ் நிலைகளிலெல்லாம் மணிவண்ணனைத்தான் போராளிகள் தேடுவார்கள். பல இறுக்கமான இடங்களில் எல்லாம் செல்களை விழுத்தி தடைகளை உடைத்து பல வெற்றிகளுக்குக் காரணமாய் இருந்தவர் மணிவண்ணனும் அவருடைய போராளிகளும் தான்.
கேணல் ராயு அவர்களால் வழிநடத்தப்பட்ட மணிவண்ணன், கேணல் ராயு அவர்கள் வீரச்சாவடைந்த பின்னர் ராயு அவர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றி, சிறப்பாக, மோட்டார் படையணியை வழிநடத்தினார். அனைவருடனும் அன்பாகப் பழகும் மணிவண்ணன் அவர்கள் எளிதில் அனைத்துப் போராளிகளின் மனதிலும் இடம் பிடித்து விடுவார். அனைவராலும் “மணியண்ணை ” என அன்பாக அழைக்கப்படும் தளபதியாவார்.

ஆனந்தபுர பெருஞ்சமரில் செல்களை சரியான முறையில் சரியான இலக்குகளில் பயன்படுத்தி எதிரிகளைக் கொன்று குவித்தவர்.வீரச்சாவடையும் தருணத்தில் அவரும் அவருடைய போராளிகளும் இணைந்து எதிரியிடம் பிடிபடாதபடி அனைத்து மோட்டார்களையும் அழித்துவிட்டு அன்னை மண்ணை முத்தமிட்டார் பிரிகேடியர் மணிவண்ணன்.
கேணல் கோபித் , லெப் கேணல் அமுதாப்

சாள்ஸ் அன்ரனி படையணியின் தளபதிகளாகாக களம் பலகண்டவர்கள். இறுதி முச்சு வரையும் போர்களங்களில் போராடிய இளம் தளபதிகள், சொல்லி வைத்து செயலாற்றுவதில் இவர்கள் உத்தமர்கள். ஆனந்த புரத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட இவர்களை நெஞ்சில் இருத்தி தியானிப்போம்.
கேணல் கோபித்


இவன் ஒரு வேவுப்புலி வீரனாகவே எனக்கு அறிமுகம். மெலிந்த உயரமான இவன் கண்களில் மட்டும் தேடலுக்கான ஒளி கூர்ந்த பார்வை நிறைந்திருக்கும். ஆம் இவன் புகாத எதிரி முகாம் இல்லை எனலாம்.தனது போராட்ட வாழ்க்கையில் பெரும் பகுதியை வேவுப்பணிக்காகவே செலவிட்டவன். பிரிகேடியர் பால்ராஜ், கேணல் தீபன், கேணல் ஜெயம் இவர்களோடு அருகிருந்து தன் பணியை சிறப்பாகச் செய்து தலைவர் வரை விரும்பப்ட்டவன். இவனது பொறுப்பில் வேவுபார்த்து நடாத்தப்பட்ட பல இராணுவமுகாம் தகர்ப்புக்கள் எமக்கு முழுமையான வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளது. எதிரியின் குகைக்குள் சென்று பட்டி தொட்டியெல்லாம் புகுந்து விளையாடியவன்.
அத்தோடு நின்றுவிடாது சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறந்த சண்டைக்காரன், ஒரு பொறுப்பாளன் இவ்வாறு வளர்ந்தவன் இறுதியில் சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத்தளபதியுமானான். அன்று தொட்டு இறுதிவரை கட்டளைத் தளபதியாகவும் இருந்து பலநூறு வீரர்களை வழிநடத்தியவன். இவனுடைய தியாகமும், வீரமும், நற்குணமும் நிறைந்து கிடக்கும் வீரவரலாற்றை என் பேனாவுக்குள் அடக்கிவிட முடியாது. இறுதிவரை நின்று கடுஞ்சமர் புரிந்தவன். ஆனந்தபுர ஆரம்பச்சமர்க்களத்தில் தனது படையணியை வழிநடத்தி சண்டையில் எதிரியை திணறடித்து வீரமரணம் அடைந்தாலும் எமது தமிழீழ வரலாற்று பதிவில் இவனுக்கு தனியிடம் உண்டு.
லெப் கேணல் மெய்யறிவு
இம்ரான் பாண்டியன் படையணியில் பல பணிகள் ஆற்றிய இந்த வீரர்கள் பிரிகேடியர் ஆதவனோடு ஆனந்தபுரத்தில் களமாடி காவியமானார்கள்.நீண்ட வரலாறுகளைத் தந்த இந்த வீரர்களை மனத்திருத்தி தியானிப்போம்.
கேணல் அமுதா

பெண்ணாக பிறந்து புலியாக மாறி புயலாக எழுந்து பல களம் கண்ட வீரத் தளபதி இவள். ஆனந்தபுரத்தில் மோட்டார் அணியின் பெண் போராளிகளை வழிநடத்தி களத்தில் காவியமானவள். அமுதா பயிற்சிமுகாம் முடிந்த கையோடு கனரக ஆயுதப்பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள். அங்கு 60mm மோட்டார் அணியில் ஒரு காப்பாளராக பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும் போதே எனக்கு அறிமுகம்.நிறத்த மெல்லிய நெடுத்த அவளது தோற்றம் கனரக ஆயுதத்திற்குப் பொருத்தமில்லாதவாறே பார்ப்பவர்கள் கணிப்பிடுவர்.முகத்தில் என்றும் அமைதி குடிகொள்ள யாரை கண்டாலும் ஒரு சிரிப்பே இவளது பதிலாக இருக்கும். கதைப்பது குறைவு ஆனால் பயிற்சி வேளையில் உருவத்திற்கு பொருத்தமில்லாதா சுமையை 60mm செல் பெட்டியை நிறைத்த மணலோடு தூக்கி கடின பயிற்சிகளை எல்லாம் இலாவகரமாகச் செய்து முடித்தாள். படிப்படியாக 60mm மோட்டார் கண்ணர், இரண்டு மோட்டார்களின் பொறுப்பாளர் என இவளுடைய பயிற்சி ஆசிரியர்களின் அரவணைப்பில் வளர்ந்தாள் எனலாம்.

மேஜர் சௌதினி,மேஜர் கோகிலா இவளுடைய பெரும் வழிகாட்டிகள். தொடர்ந்து 82mm மோட்டார் தொட்டு 5 இன்சி வரை வைத்து இலகுவாகச் சண்டை செய்தவள். தனது ஒரு காலை இழந்த பின்பும் பல மோட்டார் அணிகளின் ஒருங்கிணைப்புப் பொறுப்பாளராய் சிறப்பாகச் செயல்ப்பட்டு ஆனந்தபுரத்தில் கேணல் அமுதாவாக விதையாகிப் போனாள்.
கரும்புலி லெப் கேணல் கிந்துஸ்தானி
வெடிகுண்டை உடம்பில் கட்டி கண் இமைக்கும் நேரத்தில் பல எதிரிகளை கொன்று குவித்து ஆனந்தபுரத்தில் சாதனை படத்த தமிழினத்தின் தடை நீக்கியே உன்னை மறந்துடுமா நெஞ்சம்.
ஆனந்தபுரக்போர்க்களத்தில் போராடி வீரமரணம் அடைந்த புனிதா, லெப்-கேணல் மோகனா, மேஜர் தென்னரசி, மேஜர் குலமதி, கப்டன் தமிழினி, கப்டன் தமிழ்முகில் ,கப்டன் அமுதினி, கப்டன் இசைஎழில், கப்டன் காவேரி, கப்டன் மதியொளி, கப்டன் அலையரசி, கப்டன் அகல்மதி ஆகியோரையும் இன் நாளில் நினைவு கூருகிறோம்.

சித்திரை மாதம் , 05ம் திகதி மட்டும் நடந்த இந்தச் சமரில் இறுதிவரை எதிரியோடு சமரிட்டு . பல. பிரிகேடியர் தரத் தளபதிகள்/ பல. கேணல் தரத் தளபதிகள்/ பல. லெப் கேணல் தர தளபதிகள் உட்பட 450க்கு மேற்பட்ட மாவீரர்களையும் இந்நாளில் நெஞ்சிருத்தி நினைவு கூறுகிறோம்.
ஆண்டுகள் பல ஆனாலும் அழியாது உங்கள் நினைவுகள் என்றென்றும் உங்கள் நினைவுடன் ………………..
தொகுப்பு,
சி.கலைவிழி -ஆதவி.
எரி சுமந்து நடப்போம்
தணலாய்த் தகிக்கும் தாய் நிலமே!
தமிழீழத் தாயவளே
கனலேந்தி நீ காத்திருக்கிறாய்
பெருமழை பொழியாதோ என்று…
ஐயெட்டு ஆண்டுகளாய்
அடிக்கொரு அடியாய் வளர்த்த போராட்டம்
பொய்பட்டுப் போய் விடுமோ என்று
புலம்பித்தவிக்குதம்மா நெஞ்சம்
கைப் பிடித்து நீ வளர்த்த பிள்ளைகள்
எத்தனை ஆயிரம் பேர்கள் – தம்
மெய்யை உரமாக்கித் துயில
மெய்யான விடுதலைக்காய் நடக்கிறோம்..
சுதந்திரக் காற்றுவீசாதோ என்று
உறுதி குலையா மனத்தோடு உழைத்த
எமதருமை மக்கள் லட்சம் பேர்..
உன் திருமேனியில் நீள்துயில் கொள்ள
ஐயகோ என்றுஅழுது புலம்பி..
ஆவதென்ன இங்கே — அடிமைத்தனம்
அழித்தே தீரவேண்டும் இதுவிதி — பொய்யாரை
ஒழிக்கத் தேடுவோம் வழி.
ஆயிரம் ஆயிரம் உயிர்களின் விதையில்
ஆலமரமானது விடுதலைப்போர் விருட்சம்
குருதிநீரும் நெஞ்சுக் கூட்டின்
வலிகளாலான உரமும் கொண்டேதான்.
நீண்டு வந்த நிறைவான விடுதலை
வேண்டிப் பெருவேள்வி இரண்டாயிரத்தெட்டுஒன்பதில்
வேங்கைத் தலைவன் வழி நடந்து
விளாசி எரித்தோம் போர்த் தீயை.
ஆடவர் பெண்கள் என்ற பேதமில்லை
வீரர்கள் யாவருமே விரைந்துகளமாட
வீரியம் தந்தவன் உன் பிள்ளை
கூரிய அறிவுடைய எங்கள் அண்ணன்.
பூக்கள் பிஞ்சுகளும் மனமுவந்து
தீயாய் போயினதேசம் காத்திட
தாய்மார்கள் கூட களமாடிய வரலாறு
தமிழீழ மண்ணின் பெருமிதம்.
கணத்திற்கு ஓர் உயிரென
பறித்தது சிங்களம்
உணவுக்குப் பதில்
சன்னங்கள் உயிரில் ஏற.
மக்களின் அவலங்கள் சொல்லிமாளாது
மாக்களை விடக்கேவலம் சொந்தமண்ணில்
ஒவ்வொரு நிமிடமும் துப்பாக்கி சீற
ஓட ஓட விரட்டிய இராணுவம்.
நீரில்லை, உணவில்லை, நேரான வாழ்வில்லை
தூக்க மில்லைக்கண்ணில், துயர்சொல்ல யாருமில்லை
பேய்கள் உறைந்தன எங்கள் முகங்களில் — நடைப்
பிணங்களாய் நடந்தோம் — தாயே
நாம் செய்த பிழையென்ன?…
உரிமை கேட்டது குற்றமா?…
உயிரோடு வாழ்வது குற்றமா?..
தமிழனாய் இருப்பது குற்றமா?..
தன்மானம் மதிப்பது குற்றமா?..
பரம்பரையாய் எம் முன்னோர்கள் ஆண்ட நிலம்
பைந்தமிழ்க் கலைகள் சிறந்துவாழ்ந்தநிலம்
பாரினில் தமிழரின் வரலாற்று வழி நிலம்
போரில் எரிந்து சுடுகாடாய் ஆனது.
இரத்த ஆறு பிணங்களின் காடு
இவை கதைகளில் கேட்டிருந்தேன் சிறுவயதில்
எனது மண்ணிலே இந்நிலை தன்னை
பன்னிரு கண்களினாற் பார்க்க நேர்ந்ததே
‘ஆனந்தபுரம்’ என்னும் அழகிய ஊரை
ஆருக்குத் தெரியும் அழிவுக்கு முன்னர் ?
‘முள்ளிவாய்க்கால்’ என்னும் முல்லையின் ஓர் பகுதியை
முன்னர் இவ்வுலகம் அறியுமா ?
ஆசையாய் நாம் ஆடிக்களித்த ஆனந்தபுரத்திலே
ஓநாய்ச் சிங்கள ஆமியின் ஊளைகள்
ஒருலட்சம் குண்டுகள் போட்டு
பேயாட்டம் ஆடியதை என்னசொல்ல
நெஞ்சிலுறுதிகொண்டு தானைப் புலித் தளபதிகள்
அஞ்சாது படைநடத்தி ஆனந்தபுரத்தினுள்ளே
துஞ்சாது துணிந்து களமாடியவாறே
வெஞ்சமர் அக்கினிக்குள் வெந்தனர் அன்று.
உலகத்தில் காணவொண்ணா உறுதிமிக்க பெண் புலிகள்
தலைவன் வளர்த்தெடுத்த தனித்தமிழ் மறப்புலிகள்
ஒன்றாய் இணைந்து முற்றுகைக்குள் மூசினர்
மூர்க்கரைதுடைத்தழித்து முறியடித்த வியூகங்கள் பற்பல
பயந்து நடுங்கினர் சிங்களப் படைகள்
எரிந்தது பகைவரின் படைக் கலங்கள்
தடைசெய்தஆயுதம் கொண்டே சிங்களம் — போரைத்
தடுத்திடத் தீட்டினர் வஞ்சகத் திட்டம்
முப்பது நாடுகளின் மூலோபாயங்கள்
தப்பாத ராஜபக்சவின் கொலை வெறித்தனங்கள்
பதினைந்து விமானங்கள் போட்டனகுண்டுகள்
பல் குழல் எறிகணைகள் பாய்ந்தன ஒரேநேரத்தில்
பங்குனி தொடங்கி சித்திரை ஜந்துநாள் வரை
கொத்தாக மாவீரர் ஆகுதியாகினர்
ஆனந்தபுரத்திலே அன்னைமண் கலந்தனர்
அணைந்தன உயிர்கள் எரிந்தன எம் மனங்கள்
முத்தானபல மூத்ததளபதிகளோடு
ஜந்நூறு வீரர்கள் அங்கேமௌனிக்க
முடியவில்லை, போர் மூசிஎழுந்தது
முள்ளிவாய்க்கால்க் கரைவரை நீண்டது..
இன்னும் பலவீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்
இதுவரை அவர்கள் செய்தியேதும் எங்களின்
செவிகளுக்கு எட்டவில்லை
தேடிக் களைத்து நலிந்தன உறவுகள்.
சித்திரவதைகளால் அவர்கள்
செத்திருக்கக் கூடுமோ………..இல்லை
சிறுகச் சிறுக அவரை இராணுவம்
சிதைத்தழிக்கின்றனரோ?……….யாரறிவார்?
பத்தி எரியுது நெஞ்சம் துயரினால்
பாராமுகமாய் இன்றும் உலகநாடுகள்
ஜ.நா சபையில் அரங்கேறும் நாடகங்கள்
நீதிகேட்டு ஓலமிடும் புலம்பெயர்ந்த எம் மக்கள்
இன்றும் தொடருது எங்கள் போராட்டம்
இனியும் தொடரும் தாய் மண்ணைமீட்கும் வரை
ஆயுதமா, அகிம்சையா என்பதல்ல முக்கியம் — தமிழீழம்
அடையும்வரை தீசுமந்து நடப்போம் இது சத்தியம்
விடுதலைப் பசி வேகம் கொள்ள
விரைகிறோம்………….
விதையாகி வீழ்ந்த எங்கள் — மா
வீரர்களின் நினைவு சுமந்து…..
ஆனந்தபுரத்தில் ஆகுதியானமாவீரர்களுக்கும்,தமிழீழவிடுதலைக்காய் உயிரீந்த அனைத்து மாவீரர்களுக்கும் எம் இனிய மக்களுக்கும் இக் கவிதைசமர்ப்பணம்
~ கலைமகள் ~
01.03.2009 தொடக்கம் 05.04.2009 வரை
ஆனந்தபுரத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும்
வீரச்சாவைத் தழுவிக்கொண்ட இந்த மாவீரர்களுக்கும் இதில் பெயர் குறிப்பிடத் தவறிய ஏனைய அனைத்து மாவீரர்களுக்கும் இன்றைய நாளில் எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
- பிரிகேடியர் தீபன்
- பிரிகேடியர் ஆதவன் (கடாபி)
- பிரிகேடியர் விதுசா
- பிரிகேடியர் துர்க்கா
- பிரிகேடியர் மணிவண்ணன்
- கேணல் தமிழேந்தி அப்பா
- கேணல் நாகேஸ்
- கேணல் தமிழ்ச்செல்வி
- கேணல் அமுதா
- கேணல் சேரலாதன்
- கேணல் அன்ரன்
- கேணல் அகிலேஸ்
- கேணல் கோபால்
- கேணல் ஐயனார்
- கேணல் இளங்கீரன்
- லெப். கேணல் நளன்
- லெப். கேணல் பாரதி
- லெப். கேணல் அகநிலா
- லெப். கேணல் அறிவரசி
- லெப். கேணல் குயில்வேந்தன்
- லெப். கேணல் நசீர்
- லெப். கேணல் வாகீசன்
- மேஜர் சித்தா
- மேஜர் ஒளிவாணன்
- பூங்குயிலன் புலனாய்வுத்துறை (நிலை தெரியாது)
- லெப். கேணல் குமரச்செல்வன் (சிறி)
- மேஜர் கெங்கா (சங்கீதன்)
- லெப். கேணல் அமிர்தாப்
- லெப். கேணல் மொழி
- லெப். கேணல் சசி
- மேஜர் செங்கையாழினி
- மேஜர் கலைமகள்
- மேஜர் செஞ்சுரபி
- லெப்டினன்ட் அகல்மதி
- 2ம் லெப்டினன்ட் அலையரசி
- கில்லியரசன்
(ராதா படையணி) நிலை தெரியாது - லெப். கேணல் புரட்சிநிலா
- மேஜர் எழில்வேந்தினி
- மேஜர் யாழிசை
- கப்டன் அருளரசி
- கப்டன் யாழரசி
- கப்டன் நந்தா
- 2ம் லெப்டினன்ட்
முகிளினி - கப்டன் தமிழருவி
- கப்டன் மகிழன்
- மேஜர் குரலமுதன்
- லெப். கேணல் மாயவன்
- லெப். கேணல் மகேந்திரம்
- குமணன் (நிதித்துறை) நிலை தெரியாது
- அமுதினி (நிதித்துறை) நிலை தெரியாது
- லெப். கேணல் மெய்யறிவு
- லெப். கேணல் நிலான்
- லெப். கேணல் பிரபு
- நீலவாசன் (வடபோர்முனை கட்டளைப்பணியகம்) நிலை தெரியாது
- லெப். கேணல் வீஸ்மன்
- லெப். கேணல் இளமாறன்
- மேஜர் அழகு
- மேஜர் தமிழேந்தி
- மேஜர் தவம்
- மேஜர் எழிச்சி
- மேஜர் பாரதி
- மேஜர் செங்குமரன்
- மேஜர் செம்முகிலன்
- மேஜர் தமிழ்பிரியன்
- மேஜர் கவியாளன்
- கப்டன் மெய்யாளன்
- கப்டன் கொடைவெற்றி
- கப்டன் இனியவன்
- கப்டன் வீரக்கொடி
- கப்டன் இகழ்
- கப்டன் தூயவன்
- லெப்ரினன்ட் இசைமலை
- லெப். கேணல் அருந்தா
- லெப். கேணல் புனிதா
- மேஜர் சுரேந்திரா
/அன்புமதி - மேஜர் இந்துமதி
- லெப். கேணல் கிந்துஸ்தானி
- லெப். கேணல் அன்பு
- லெப். கேணல் ஆனந்தன்
ஆனந்தபுர முற்றுகைச் சமர்
[களத்தில் நேரடியாக நின்ற போராளியின் பதிவு]
{லெப்.கேணல் ராதா வான்காப்புப் படையணி}
ஆனந்தபுர முற்றுகைச் சமரில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த சகல படையணிகளும் பங்குபற்றியிருந்தன. அதைப்போன்று லெப்.கேணல் ராதா வான்காப்புப் படையணியில் பின்கள பணியிலிருந்த எமது அணி போராளிகள் 40 பேர் ஆனந்தபுர முற்றுகை முறியடிப்புக்காக கணினிபிரிவின் 100ற்கு மேற்பட்ட பெண்போராளிகளை உள்ளடங்கிய தாக்குதல் அணியாக சென்றோம். எமது அணியை தாக்குதல் திட்டத்தின்படி மூன்று அணியாக பிரிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஒரு அணி தடையை உடைக்க மற்ற இரு அணிகளும் உள்நுழைவதே திட்டமாக இருந்தது. மார்ச்சு மாதம் 31 ம்திகதி எங்களது இரு அணிகள் ஆனந்தபுரத்தினுள் சென்றது ஒரு அணி ஆனந்தபுரத்திற்கு வெளியே பச்சைபுல்வெளியில் நிலை எடுத்தது. ஆனந்தபுர முற்றுகையிற்குள் எமது அணியினை சேர்ந்த 25ற்கு மேற்பட்ட நண்பர்களும் அதைபோன்று முற்றுகையை உடைப்பதற்கான முயற்சியில் 5ற்கு மேற்பட்ட நண்பர்களும் வீரச்சாவடைந்திருந்தனர். அதைப்போன்று எமது அணியுடன் வந்த பெண்போராளிகளில் பெரும்பாலானோர் வீரச்சாவடைந்தும் விழுப்புண் அடைந்திருந்தனர். இந்த ஆனந்தபுர முற்றுகைச் சமரில் வீரச்சாவடைந்த எமது அணியினர் விபரங்கள்,
1.லெப்.கேணல் அனுஷன்
2.லெப்.கேணல் கபிலன்
3.லெப்.கேணல் அந்தியாஸ்
4.லெப்.கேணல் இளவரசன்
- லெப்.கேணல் ஆற்றலோன்
- லெப்.கேணல் பெருங்கீரன்
- லெப்.கேணல் ஏழிசை
- லெப்.கேணல் மதிவர்மன்
- லெப்.கேணல் வல்லவன்
- லெப்.கேணல் குலம்
- லெப்.கேணல் கண்ணன்
- லெப்.கேணல் நிறஞ்சன்
- லெப்.கேணல் தயாபரன்
- லெப்.கேணல் மைந்தன்
- லெப்.கேணல் வண்ணம்
- மேஜர் வாணவன்
- மேஜர் சோலையப்பன்
- கப்டன் சுடரவன்
கால நீட்சியில் எமது நினைவுகளில் 18 நண்பர்களின் பெயர்களே நினைவில் உள்ளது. அதைபோன்று சில நண்பர்களின் புகைப்படங்களே எம்மால் சேகரிக்க முடிந்தது ஆனந்தபுர முற்றுகைச் சமரின் பதிவுகளை பதிய முற்பட்ட போதே காலம் பல நினைவுகளை அழித்துள்ளதை உணரமுடிகிறது. எம்மை போன்று வாழும் சகமுன்னால் போராளிகள் உங்களுடன் உடன் களமாடிய நண்பர்களின் நினைவுகளையும் தியாகங்களையும் பதிவிடுங்கள் ஒரு போராளியின் சாவு சாதாரண சாவல்ல அது தமிழீழ விடுதலைக்கான வரலாறு.




