இன்று 24/09/2021 தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 34ம் ஆண்டின் 10வது நினைவு நாளை நாம் கடந்து செல்லும் இவ்வேளையில், இன்றும் விடுதலைப் பசி தீராத எம் திலீபனின் கனவும் அர்ப்பணிப்பின் நோக்கமும் நிறைவேற வேண்டும் என்றால் தமிழ் மக்களும் தமிழ்த் தேசிய கட்டமைப்புகளும் தாம் வாழும் நாடுகளில் தொடர்ந்தும் எமது தாயக விடுதலைக்கும், இன அழிப்பிற்கான நீதிக்குமாகப் போராட வேண்டும். அந்த வகையில், இன்று இத்தாலியின் பலெர்மோ மாநகராட்சியும், இத்தாலி தமிழர் ஒன்றியமும் இணைந்து தமிழின அழிப்பை உறுதிப்படுத்துவதற்கும், இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளவிருக்கும் அரசியல் நகர்வுகளுக்குமான ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கையொப்பமிட்டுள்ளனர்.
இப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் பலெர்மோ மாநகராட்சி இத்தாலி தமிழர் ஒன்றியத்துடன் இணைந்து பின்வரும் விடயங்களை முன்னெடுக்கும்:

- 1948ம் ஆண்டு முதல் இன்று வரை சிறீலங்கா அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடாத்துவது இனப்படுகொலையே என்பதை உறுதிப்படுத்துதல்.
- தமிழினப்படுகொலை மற்றும் உலகின் ஏனைய இனப்படுகொலைகள் சார்ந்து பலெர்மோவின் குடிமக்களுக்கு அறிவிப்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், தமிழ் தேசிய அமைப்புகளுடன் இணைந்து, பாடசாலை மற்றும் பொது சூழல்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 11 முதல் 18 வரை “தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்” நியமித்தல்.
- சமூகங்களுக்கிடையே ஒருங்கிணைப்பையும் பரஸ்பர அறிவையும் மேம்படுத்துவதற்காக பலெர்மோ நகரத்திற்கும் தமிழ் சமூகத்திற்கும் இடையே ஒரு திடமான தகவல் தொடர்பு மற்றும் ஒற்றுமை வலையமைப்பை தொடர்ச்சியான முறையில் வளர்த்தல்.
- ஈழத்தமிழர் வரலாறு, கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை பலெர்மோ குடிமக்களுக்குக் கொண்டு செல்வதற்காக முயற்சிகளை ஊக்குவித்தல்.

Piazza Pretoriaவில் அமைந்திருக்கும் Palazzo delle Aquile என்னும் பலெர்மோ மாநகராட்சி மன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பலெர்மோ மாநகரின் முதல்வரான Leoluca Orlando தலைமையில், குடியுரிமைக்கான மதிப்பீட்டாளர் Maria Cinzia Mantegna, இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழர் ஒன்றியம், ஈழத்தமிழர் மக்களவை, தமிழ் இளையோர் அமைப்பு சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

12 மே 2021 நடாத்தப்பட்ட “இன அழிப்பிற்கும் மறக்கப்படும் நிலையிற்கும் இடையில் ஓர் தேசம்” எனும் இணையவழி மாநாடடில் பலெர்மோ மாநகரின் முதல்வரான Leoluca Orlando அவர்கள் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வருவது இனப்படுகொலை தான் என்பதையும் போர் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பான சர்வதேச விசாரணையைக் கோருவதற்கும் உத்தியோகபூர்வ நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்ள விரும்புவதாக அறிவித்திருந்தார்.

1948ம் ஆண்டு முதல் சிறீலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது ஒரு கட்டமைப்பு சார் இனப்படுகொலையை நடத்தி வருகின்றது. இது பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளுடன் 2009ல் உச்சக்கட்டத்தை எட்டியது. போரின் இறுதிக்கட்டத்தில் சர்வதேச சட்டங்களை மீறி தமிழர்கள் மீது கொடூரமான இனப்படுகொலையை நிகழ்த்தி ஏராளமான அழிவை ஏற்படுத்தியது. 2009ல் போர் முடிவடைந்த போதிலும், ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை, அவர்களின் அடையாளத்தை வேரோடு அழிக்கும் நோக்கத்தில், பல்வேறு வடிவங்களில் தடையில்லாமல் தொடர்கின்றது. 2009 முதல் சிறீலங்கா அரசாங்கம் தாயகத்தின் வடகிழக்கில் உள்ள தமிழர் பிரதேசங்களை இராணுவமயமாக்குதல் மற்றும் அபகரித்தல் போன்ற நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இழைத்து வரும் குற்றங்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்காக விடுக்கப்படும் எந்தவொரு கோரிக்கையையும் சிறீலங்கா அரசாங்கம் நிராகரித்து வருகின்றது, மேலும் இது குறித்து சர்வதேச சமூகத்தின் தாமதம், ஆதாரங்களை அழிப்பதற்குப் போதுமான கால அவகாசத்தைக் கொடுக்கின்றது.

இத்தாலியில் மிகப்பெரிய ஈழத்தமிழ்ச் சமூகம் பலெர்மோ மாநகரில் இருக்கிறது என்பதையும் சமீபத்திய தசாப்தங்களில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு, ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு எதிராக மேற்கொள்ளும் அனைத்துக் கண்டன ஆர்ப்பாட்டங்களிலும் பலெர்மோ மாநகரமானது ஒத்துழைப்புக் கொடுத்து ஒரு நீண்ட உறவை தமிழ் மக்களுடன் ஏற்படுத்தியுள்ளது என்பதையும் கருத்தில் கொண்டு, ஈழத்தமிழர்களின் நீதிக்கான பயணத்தில் தோளோடு தோள் நின்று இப் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையொப்பமிடுவது, அனைத்து ஈழத்தமிழர்களுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

“இன்றைய தினம் பலெர்மோ மாநகரத்திற்கு வரலாற்று ரீதியான நாளாக தமிழ் மக்களோடு இணைந்து அமைந்துள்ளது. இப் புரிந்துணர்வு உடன்படிக்கையூடாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டது இன அழிப்பு என்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு பலெர்மோ மாநகராட்சியின் தொடர்ச்சியான ஆதரவை வழங்கி சர்வதேச ரீதியிலான நீதிக்கான பயணத்தில் நாமும் இணைந்து பயணிப்போம்” என இன்றைய நிகழ்வின் போது பலெர்மோ மாநகராட்சியின் முதல்வர் Leoluca Orlando தெரிவித்துள்ளார்.

மாவீரர்களுடைய கனவு நனவாகும் வரை நாம் அனைவரும் தொடர்ந்து பயணிப்போம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

