கடந்த 12ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு ராஜாங்க அமைச்சர் சென்றிருத்தவேளை, அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளில் அமர்த்தி அனாகரிகமாக நடந்துள்ளதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுதிப்படுத்துகிறது.
இராஜாங்க அமைச்சர் தனது பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியை இரண்டு அரசியல் கைதிகளது தலைமீது வைத்து அச்சுறுத்தியும் உள்ளார். இச் சம்பவத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
மேலும்,
ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவை (UNHRC ) அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, இலங்கையின் ஒரு அமைச்சர் இது போன்ற மிக மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதென்பது, ஐநா மனித உரிமை பேரவையை இலங்கை அரசாங்கம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.
ஐ.நா மனித உரிமை பேரவையை ஒரு பொருட்டாகக் கருதாத இலங்கையை தொடர்ந்தும் ஐநா மனித உரிமைப் பேரவைக்குள் வைத்திருப்பது அர்த்தமற்றது, அதற்கு அப்பால் குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

