யேர்மனியின் Münster நகரில் 24.07.2021 நேற்று, கறுப்பு யூலை தமிழினப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வும், சிறப்பு நிகழ்வாக கலாநிதி சு.சேதுராமலிங்கம் அவர்கள் எழுதிய “தமிழ்த்தேசிய எழுச்சி” நூல் வெளியீடும் இடம்பெற்றது.

நிகழ்வில் பொதுச்சுடரை திரு.பரமானந்தம் (நாடுகடந்த தமிழீழ அரசின் யேர்மனிய நிர்வாக இயக்குநர்) மற்றும் திருமதி பிரபாவதி ஆகியோர் ஏற்ற, தமிழீழத்தேசியக் கொடியை திரு.றோய் அவர்கள் ஏற்றினார். பொது ஈகைச்சுடரை திரு. சதீஸ் அவர்கள் ஏற்ற, அகவணக்கத்தோடு நிகழ்வு ஆரம்பமானது. தொடர்ந்து; இனப்படுகொலையில் உயிரிழந்த உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் விதமாக சுடர் மற்றும் மலர்வணக்கம் இடம்பெற்றது.


தமிழின உணர்வாளரும் அறிவிப்பாளருமாகிய திரு. வலன்ரைன் உரைநிகழ்த்தியதோடு மட்டுமன்றி, ௧லாநிதி சு.சேதுராமலிங்கம் அவர்கள் எழுதிய “தமிழ்த்தேசிய எழுச்சி” – தடைகளும், பாதைகளும், உத்திகளும், எனும் நூலையும் வெளியிட்டு வைத்தார்.

சிறு சிறு கட்டுரைகளாக, விவாதங்களையும் சிந்தனைத்தூண்டலையும் ஏற்படுத்தும் விதத்தில் எழுதப்பட்டிருக்கும் இந்நூல் தமிழ்த்தேசியப்பரப்பில் சிந்தனைத்தூண்டலை உண்டுபண்ணும்.திராவிடத்தின் தற்கொலை , தத்துவ உள்ளடக்கம், கட்டுக்கதையா துப்பாக்கியா, எதிரும் புதிரும், உயிரா இயந்திரமா, மொழி அழிவு, போரா அமைதியா… என பல்வேறுபட்ட தலைப்புகளில் தமிழ்த்தேசிய எழுச்சியின் வடிவம் ஆராயப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது. 170 பக்கங்கள் கொண்ட இந்நூல் உலகம் முழுவதும் 24.07.2021 முதல் கிடைக்கப்பெறுகிறது. பல உறவுகள் நிகழ்வில் கலந்துகொண்டு, தமிழ்த்தேசிய எழுச்சி நூலைப் பெற்றுக்கொண்டனர்.


