கண்முன்னால் நடந்த அந்த பேரவலங்களை மறக்க முடியாமல் மனம் குமுறுகிறது . பல லட்சக் கணக்கான எமது மக்கள் அனுபவித்த அந்த பேரவலத்தை வார்த்தைகளால் சொல்வது கடினம்.
அழகுக்கே அழகு சேர்க்கும் வன்னி நிலப்பரப்பை அதர்மம் என்ற கார் இருள் சூழ்ந்து சூனியமாக்கியது
இழப்பும் ,பிரிவும்,வேதனையும்,பசியும் வாட்ட எமது இனம் கதறிக் கதறியே அழிந்து போனது.சாவுக்குள் வாழ்ந்து கொண்டிருந்த எமது மக்கள் ,எஞ்சி இருப்பவர்களையாவது யாராவது காப்பாற்றுவார்கள் என்று புத்தி பேதலிச்சு புலம்பினார்கள்.

பச்சிளங் குழந்தைகள் பலர் பசியால் துடித்து இறந்து போனார்கள்.பலர் சிங்கள வெறியனின் இரைக்கு பலியாகி துண்டங்களாக்கப்பட்டு முண்டங்களாக வீதியெங்கும் சிதறிக்கிடந்தார்கள்.எம் இனத்தின் அழகிய குழந்தைகளின் அங்கங்களை பொறுக்கி எடுத்து மார்போடு அணைத்து கதறி துடித்தார்கள் உறவினர்கள்.

தமிழ் மக்களின் பசியைப் போக்க விடுதலைப்புலிகள் அளித்த கஞ்சியை வாங்கி பசியாற வரிசையாக நின்ற அனைத்து சிறுவர்களையும்,பெண்களையும்,முதியோரையும் ,அந்த இடத்திலையே கொன்று குவித்தது சிங்கள அரசு .
கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் குடும்பமே சிங்களவன் ஏவிய செல் மழையில் இறந்து போக தப்பிய ஒருவயசுக் குழந்தை தனது தாய் இறந்து பலமணி நேரம் ஆனது தெரியாமல் தவழ்ந்து சென்று தனது தாயின் மார்பில் பால் குடிக்கிறது .இப்படி பல லட்ச கொடுமைகளை தாங்கி எம் தமிழினம் துடிதுடித்தது .
கணவன்களை இழந்த மனைவிகளும்,மனைவிகளை இழந்த கணவன்களும்,பிள்ளைகளை இழந்த தாய் ,தந்தைகளும்,தாய் ,தந்தைகளை இழந்த பிள்ளைகளும்,என பல லட்சம் தமிழர்களின் கதறல்கள் வன்னி மண்ணை சூனியமாக்கியது.சிங்கள அரசின் சுறாவளி தாக்குதலால் காயமடைந்த பல்லாயிரம் தமிழர்கள் துடித்து துடித்து இறந்து போனார்கள் ,

சர்வ தேச உலகத்தால் தடை செய்யப்பட்ட அனைத்து ஆயுதங்களையும் பயன் படுத்தி தமிழினத்தை அழித்து, தமிழருடைய பாரம்பரிய நிலத்தை அபகரித்தது சிங்கள அரசு .
உலக நாடுகளின் அனுசரணையுடன் சிங்கள அரசு நடாத்திய சதி வலைக்கு எதிராக தமிழீழ விடுத்தலைப் புலிகள் தர்ம யுத்தம் நடத்தினார்கள் ,உலகமே திரண்டு எதிர்த்த போதும் விடுதலை அல்லது வீர மரணம் என்ற உறுதியோடு பல்லாயிரம் இராணுவத்தை கொன்றழித்து வீர மரணம் அடைந்தார்கள்.

சிங்கள அரசும் ,உலக நாடுகளும் இணைந்து நடாத்திய துரோகத்தனத்துக்கு தமிழினமே பலியாகியது.

18.05.2009 அன்று” முள்ளி வாய்க்கால்” தமிழினத்தின் செங்குருதியால் குளித்தது.தெருத்தெருவாக வீதிவீதியாக தமிழர்களின் இறந்த உடலங்கள் பரவிக்கிடந்தது.தெரு நாயை சுடுவது போல தமிழர்களை கொன்று குவித்தது சிங்கள அரசு.தமிழ் பண்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த தமிழ் பெண்களை சீரழித்து சின்னாபின்னம் ஆக்கியது சிங்கள அரசு .

லட்சக் கணக்கான மக்களை கொன்று குவித்து, லட்சக் கணக்கான பெண்களை விதவைகள் ஆக்கி,லட்சக் கணக்கான சிறார்களை அங்கவீனர் ஆக்கி ,அனைத்து தமிழினத்தையும் அடிமைகள் ஆக்கி விட்டு ,சிங்கள அரசு பட்டாசு கொளுத்தி வெற்றி விழா கொண்டாடியது .

எமது இனம் அடிப்படை உரிமைகள் அனைத்தையும் இழந்து கம்பியால் அடைக்கபட்ட சிறைக்குள்
வாடி வதங்க நாய்க்குப் போட்டது போல் உணவை வீசி எறிந்து விட்டு ,வெற்றிக் களிப்பில் வெறியாட்டம் ஆடியது சிங்கள அரசு ,

இரத்தத்தால் எழுதப்பட்ட இந்த கொடுமையான நிகழ்வை,தமிழின அழிப்பை ,தமிழர் பட்ட அவலத்தை,அங்கு சிங்கள அரசால் நாசமாக்கப்பட்ட நகரங்கள் ,தீயிட்டு கருகிய வயல் வெளிகள்,இரத்தமாகிக் கிடக்கும் நதிகள்,என எல்லாமே கதை கதைகதையாகச் சொல்லும் ,

சிங்கள ஆக்கிரமிப் பாளர்களால் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட அனைத்து தமிழ் மக்களையும் இந்நாளில் நினவு கூரு வதோடு ,தமிழ் மண்ணை மீட்க போராடி வீரமரணம் அடைந்த அனைத்து மாவீரர்களையும் நெஞ்சிருத்தி ,தமிழீழத்தை சூழ்ந்திருக்கும் அதர்மம் என்ற கார் இருள் நிச்சயமாக ஓர் நாள் விலகும் .அன்று தமிழீழம் மலரும்.அது வரையும் உங்கள் நினைவுகளுடன்.
-.கலைவிழி-
