ஏறக்குறைய இதுவரை 80 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். பல இடங்களில் “நிரந்தர வதிவிடஉரிமை” தருவதாகப் பொய்சொல்லி அழைக்கப்பட்டே பலர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.
இலங்கையில் பொறுப்புக்கூறலுக்கான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான வரைபைத் தயாரித்து ஐ.நாவில் வாக்கெடுப்பிற்குச் சமர்ப்பித்ததில் யேர்மனிக்குப் பெரும்பங்கு உண்டு. சிறிலங்கா மீது இப்பொழுது கடும் அழுத்தம் தரப்படுவதாக யேர்மனி மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட துணைநாடுகள் எண்ணுகின்றன.
ஆனால் ; 2009 இல் முள்ளிவாய்க்காலில் இனஅழிப்பு நடைபெறும்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்தவரே இன்றைய சனாதிபதியாக இருக்கிறார். கடத்தல்களுக்கும் கொலைகளுக்கும் காணாமலாக்கப்- -பட்டவர்களுக்குமான பொறுப்புக்கூறல் கோத்தபாயவிடமே இருக்கிறது. அவற்றிற்கே இன்னமும் தீர்வுகாணப்படாமல், அரசியற்புகலிடம் கோரிய தமிழர்களைத் திருப்பியனுப்புதல் முறையல்ல.
கீழே இணைக்கப்பட்டுள்ள விழியமும், அதனோடிணைந்த செய்தியும் விராஜ் மென்டிஸ் தலைமையிலான பிறேமன் மனித உரிமைகள் அமைப்பினரால், யேர்மனியின் வெளியுறவுத்துறை மற்றும் உட்துறை அமைச்சர்களுக்கு நேற்றிரவு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.