‘புலிகளின் குரல்’ வானொலியின் பிதாமகனுக்கு கண்ணீர் அஞ்சலி!

0 0
Read Time:6 Minute, 9 Second

25.09.1992 அன்று நான் கலைபண்பாட்டுக் கழகம் பணிமனையில்
எனது பணிகளைச் செய்து கொண்டிருந்தேன்.
‘புலிகளின் குரல்’ பொறுப்பாளர்
திரு.பரதன் அவர்களிடமிருந்து
தொலைபேசி அழைப்பு வந்தது.


“தேவர் அண்ணை நீங்கள்
யூனிபோர்ம் போட்டுக் கொண்டு
எங்கடை நல்லூர் அலுவலகத்துக்கு
வாங்கோ” எனத் தெரிவித்தார்.
நான் நாம் தங்குமிடத்திற்குச்
சென்று சீருடையை அணிந்து கொண்டு
பரதனின் புலிகளின் குரல்
அலுவலகத்திற்கும் சென்றேன்.
அங்கு BBC தமிழோசை தயாரிப்பாளர்
ஆனந்தி அவர்களும் அவரது குழுவினரும் நின்றிருந்தார்கள்.90களில்
இருந்து தேசியத் தலைவர் அவர்களின்
நேர்காணல் உட்பட போராளிகளின்
அனுபவங்களையும் நேர்காணல்
செய்திருந்தார்.அன்று புலிகளின் குரல்
வானோலி பற்றி ஒரு விவரணத்
தயாரிப்புக்கான வந்திருந்தார்.
“வாங்கோ அண்ணை, ஆனந்தி
அக்கா புலிகளின் குரல் வானொலி
பற்றி ஒரு விவரணம் செய்வதற்காக
வந்திருக்கின்றார்.நீங்கள் எங்கள்
செய்தியறிக்கையை வாசிப்பதை
அவர்கள் படமாக்க வேண்டும் என்று
நான் விரும்புறன்.அதுதான்
யூனிபோர்மை போட்டுக்கொண்டு
வரச் சொன்னனான்” என்று கூறி
என்னை கலையகத்தின் உள்ளே
அழைத்துச் சென்றார்.
அந்தக் கலையகம் நிலத்தின்
கீழேயே அமைக்கப்பட்டிருந்தது.
சிறீலங்கா விமானப் படையின்
குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு எதுவித
பாதிப்பும் ஏற்படாத விதமாக
அந்தக் கலையகம் அமைக்கப்
பட்டிருந்தது.
‘புலிகளின் குரல்’ வானொலி
1990 ஆண்டு நவம்பர் 21 ஆம் நாள்
தேசியத் தலைவர் அவர்களால்
ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அப்போது அதன் பொறுப்பாளராக
திரு.பரதன் நியமிக்கப்பட்டிருந்தார்.
கலையகத்தின் உள்ளே சென்றபோது
அங்கு ஒரு நீக்ரோ இனத்தைச்
சேர்ந்த படப்பிடிப்பாளர் தனது
ஒளிப்பதிவுக் கருவியோடு தயாராக
இருந்தார்.
பரதன் அவர்கள் நான் உட்கார்ந்து
செய்தி வாசிக்கும் இடத்தில் என்னை
உட்கார வைத்து,அன்றைய
செய்தியறிக்கையை என்னிடம்
கையளித்தார்.அதனை வாங்கி
முழுமையாக ஒரு முறை வாசித்துப்
பார்த்தேன்.
அன்றைய தினம் பூநகரி-பள்ளிக்குடாப் பகுதியில்
அமைந்திருந்த சிறிலங்காப் படைகளின்
இரு மினி முகாம்கள் உட்பட 62 காவல்
அரண்கள் தாக்கி அழிக்கப்பட்டதோடு,
அந்தத் தாக்குதலில் மன்னார் மாவட்ட
சிறப்புத் தளபதி லெப்டினன்ட் கேணல்
சுபனும் மற்றும் 5 போராளிகளும்
வீரச்சாவினைத் தழுவிக்கொண்டிருந்
தனர்.25 இராணுவத்தினர் கொல்லப்
பட்டிருந்தனர்.30 க்கும் மேற்பட்ட
ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என செய்தி தொடர்ந்து சென்றது.
நான் என்னைத் தயார்ப்படுத்திக்
கொண்டேன்.என்னைப் பொறுத்த
வரையில் எந்த விடயத்தை எடுத்துக்
கொண்டாலும் சிறப்பாகவும்,
திறமையாகவும் செய்ய வேண்டும்
என்பதில் மிகுந்த அக்கறையோடு
செயற்படுபவன்.உலகமெங்கும் பரந்து
செல்லப் போகின்ற அந்த ஒளிப்பதிவு
சிறப்பாக அமைய வேண்டும் என
எனக்குள்ளேயே முடிவெடுத்துக்
கொண்டேன்.
எனக்கு இடப்புறமாக ஒளிப்பதிவாளர்
நின்றபடி தனது கருவியை இயக்கத்
தொடங்கியதும் மிகவும் நீண்ட
அந்த செய்தியறிக்கையை நான்
வாசிக்கத் தொடங்கினேன்.குரலில்
எந்த விதமான பிசிறும் இன்றி,இடையில்
எந்தவித தடங்கலும் இன்றி
20 நிமிடங்களுக்கான அந்தச்
செய்தியறிக்கையை வாசித்து முடித்து
ஒரு நெடுமூச்சினை விட்டுக்
கொண்டேன்.
பரதன் உடனடியாக அங்கு வந்து
என்னைப் பாராட்டினார்.ஒளிப்பதிவாள
ரும் ஒரு புன்முறுவலோடு என்னிடம்
இருந்து விடைபெற்றார்.
புலிகளின் குரல் வானொலியில்
அன்றைய இரவு செய்தியறிக்கையாக
அதனையே ஒலிபரப்பியிருந்தார்கள்.
புலிகளின் குரல் வானொலிக்காக
ஒலிச்சித்திரங்கள்,நாடகங்கள் என
நான் பங்களிப்புச் செய்திருந்தாலும்
அன்றைய அந்தச் செய்தியறிக்கை
வாசிப்பு என்பது என்னால் மறக்க
முடியாத ஒன்றாகும்.
பரதன் அவர்கள் அன்று என்னை
அழைத்து செய்தி வாசிக்கச் செய்தது
இன்னும் என் நெஞ்சத்தில் நிழலாடிக்
கொண்டிருக்கிறது.
இன்றைய தினம் தன் மூச்சை
நிறுத்திக்கொண்ட புலிகளின் குரல்
வானொலியின் ஆரம்பகாலப்
பொறுப்பாளர் திரு.இராஜநாயகம் பரதன்
அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்
முகமாக ‘என் நினைவில் தமிழீழம்’
நூலில் இருந்து மீள்பதிவு செய்யப்
படுகின்றது.

தேவர் அண்ணா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment