04.01.2021 அன்று Strasbourg மாநகரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயணம் இன்று 08.01.2021 Paris ல் அமைந்துள்ள நாடாளுமன்றத்தின் முன்றலினை வந்தடைந்தது.
பின்னர், கவனயீர்ப்பு போராட்டத்தினையும் நடத்தி தமிழின அழிப்பு சான்றுகள் தாங்கிய பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து வரும் வழி நெடுகிலும் Paris மாநகரத்தில் அமைந்துள்ள மாநகரசபைகளுக்கு காவல்துறையின் பாதுகாப்போடு சென்று தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்த வேண்டும் என்பதனை பிரான்சு அரச அதிபர் மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சுக்கு அழுத்தம் தெரிவிப்பதாக அனைத்து மாநகரசபை முதல்வர்களும் உறுதி தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவற்றினை வரும் 46 வது மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடரிற்கு முன்னர் விரைவாக செயலாக்கப்படும் என்பதனை உறுதிமொழியாக தந்து எமது நியாயமான போராட்டத்திற்கு தாம் உறுதுணையாக இருப்பதாக நினைவுப்பரிசும் தந்து ஊக்குவித்தார்கள். எமது போராட்டத்திற்கு பிரஞ்சு ஊடகங்களும் முக்கியத்துவப் படுத்தியிருந்தார்கள்.
புலம்பெயர் தேசத்திலே எம் உறவுகள் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு போராடும் இதே நேரத்தில் தாயகத்தில் 08.01.2021 அன்று தமிழின அழிப்பின் அடையாளமாக விளங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியினை அழித்து தன் அடக்குமுறையினை வெளிப்படுத்தியுள்ளது பெளத்த சிங்களப் பேரினவாத அரசின் இந்த நிலமை தமிழீழத்தில் மேலும் தொடருமானால் தமிழினம் முற்றாக இல்லாதொழிக்கப்படும். எனவே, இக்கால சூழலினை எமது புலம் பெயர் மக்கள் நன்கு புரிந்து கொண்டு எதிர் வரும் 46 மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடரினை முன்னிட்டு வீதிகளில் இறங்கி அறவழியில் போராடி உண்மைகளை உலகறியச்செய்வதன் ஊடாக தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை தேவை என்பதனையும் உரக்கச் சொல்லி தமிழீழ மக்களையும் தமிழீழ நிலத்தையும் பாதுகாக்க போராடுவோம்.
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்”
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.