18. 12. 2020 சுவிற்சர்லாந்து அரசின் அறிவிப்பு

0 0
Read Time:12 Minute, 51 Second

வெள்ளிக்கிழமை 18. 12. 2020  பேர்ன் நகரில் 15.15 மணிக்கு சுவிற்சர்லாந்து அரசு கூடியிருந்தது. சுவிஸ் மக்கள் எதிர்பார்த்திருந்த அவிறிப்பினை சுவிஸ் அதிபர். திருமதி சிமொநெற்ரா சொமொறுக்கா, சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்செ, பொருளாதார அமைச்சர் திரு. குய் பர்மெலின் அவர்கள் ஊடகங்கள் முன்தோன்றி அறிவித்தனர்.


சுவிஸ் அதிபர் திருமதி. சொமொறுக்கா அவர்களின் பார்வையில் சுவிசின் தற்போதைய சூழல் முன்னர் இருந்ததுபோல் இன்னமும் மிகவும் நெருக்கடியான உய்யநிலையில் உள்ளது. ஆகவே மாநிலங்களுடன் சந்திப்புக்களை நடாத்திய நடுவனரசு மாநில அரசுகளை இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கேட்டிருந்தது. சில மாநிலங்கள் உடனடியாக இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டன, சில இழுபறிநிலையில் உள்ளன. சுவிஸ் அரசின் பார்வையில், நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த மேலும் இறுக்கமான நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படவேண்டும். இப்போது இதே கருத்தை மாநில அரசுகளும் எம்முடன் பகிர்ந்துள்ளன. இந்த இணக்கம் எமக்கு மகிழ்வினை அளிக்கின்றது. மருத்துவமனைப் பணியாளர்கள் மற்றும் பராமரிப்பு இல்லங்கள் தமது பணியிச் சுமையின் உச்சத்தை தொட்டுள்ளார்கள். ஆகவே அவர்தம் சுமைகளை குறைப்பதற்கு நோய்த்தொற்றின் பரவலை உடன் கட்டுப்படுத்த புதிய நடைமுறைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. விருந்தோம்பல் துறையில் உள்ள உணவகங்கள் உடன் மூடப்படுகின்றன. கடைகள் திறந்திருக்கலாம், ஆனால் அதன் இயங்குதிறன் மட்டுப்படுத்தப்படும்.
இந்த ஆண்டின் நிறைவில் சுவிஸ் நடுவனரசு பெறுபேறுகளை சீர்தூக்கிப் பார்க்கும். உரிய மாற்றம் உணரக்கூடியதாக இல்லாவிடின் புதிய நடவடிக்கைகளை சுவிஸ் அரசு அறிவிக்கும். அரசு மேற்கொள்ளும் சமூக இடைவெளி பேணும் நடவடிக்கைகள் மக்களை தனியாக்கி மீண்டும் தனிமைப்படுத்தும் என்பதை அறிவோம். ஆகவே மக்களிடையில் ஒருவருக்கு ஒருவர் புரிதலையும் ஒற்றுமையினையும் வளர்த்துக்கொள்ள வேண்டுகை விடுக்கின்றோம்.
எமது நடவடிக்கை நிறுவனங்களின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்பதையும் உணர்வோர். ஆகவே பாதிக்கப்படும் நிறுவனங்களுக்கு உரிய உதவி நடவடிக்கைகளையும் அறிவித்துள்ளோம்.

சுகாதரஅமைச்சரின் கருத்துப்பதிவு
சுகாதார அமைச்சர் திரு. பெர்செ தனது கருத்தினை இவ்வாறு தெரிவித்தார்:«மகுடநுண்ணித் தொற்று நாம் எதிர்பார்த்த பரவல் விகிதத்தை விடவும் மிகவும் அதிகமாகப் பரவி வருகின்றது. நோய்த்தொற்றின் பரவலும் விரிவாக்கமும் மிகவும் நெருக்கடியான உய்யநிலையில் உள்ளது. கடந்த கிழமை நொய்யென்பூர்க் மாநிலத்தில் மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் தமது பணிச்சுமையின் உச்சத்ததில் இருந்ததை நான்  நேரில் கண்டேன்».
அடுத்த சில நாட்கள் சுவிசின் மலைகளில் பனிசறுக்கும்  திடல்களிலும்; கடைகளிலும் மிக நுண்ணியமாக கண்காணிக்கப்படும். நாம் தற்போது உள்ள சூழல் மேலும் பாதிப்படைய விடலாகாது என்றார் சுகாதார அமைச்சர்.

உணவகங்கள்
உணவகங்கள், பொழுதுபோக்கு- மற்றும் விளையாட்டு பண்பாட்டு நிலையங்கள் 22. 12. 2020 முதல் முழுமையாக மூடப்படுகின்றது. இம் முடக்கம் 22. 01. 2020 வரை அறிவிக்கப்படுகின்றது. உணவகங்கள் பண்டிகை நாட்களிலும் மூடியிருக்க வேண்டும். எடுத்துச் செல்லும் மற்றும் நேரில் சென்று அளிக்கப்படும் விரைவுணவகங்கள் () இயங்கலாம். அதுபோல் தொழில் நிறுவனங்களில், பாடசாலைகளில் உள்ள சிற்றுண்டிச்சாலைகளும் தங்கு விடுதிகளுடன் உள்ள உணவகங்களும் திறந்திருக்கலாம். பண்பாட்டு நிலையங்கள் எனும் சொற்பதத்திற்குள் அருங்காட்சியகங்கள், திரையரங்குகள், நூலகங்கள், களியாட்டவிடுதிகள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் விலங்குக்காட்சியங்கள் என்பனவும் அடங்கும். சிறுகுழுக்களில் பண்பாட்டு செயற்பாடுகள் பார்வையாளர்கள் அற்று நடைபெறலாம்.

கடைகளின் இயங்களவு மட்டுப்படுத்தப்படும்
கடைகளின் பரப்பளவிற்கு ஏற்ப ஒரே நேரத்தில் உள்நுழையும் வாடிக்கையாளர்களின் தொகை மட்டுப்படுத்தப்படும். கடைகள் திறப்பதற்கான காலம் முன்னர் அறிவித்தபடி மட்டுப்படுத்தப்பட்டே இருக்கும். மாலை 19.00 மணிமுதல் காலை 06.00 மணிவரை கடைகள் திறக்கப்படலாகாது. அதுபோல் ஞாயிறு மற்றும் பண்டிகைநாட்களி;ல் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.

கடைகள் முழுமையாக மூடப்படவில்லை.
தற்போதைய சூழலில் அனைத்துக் கடைகளையும் முழுமையாக மூடவேண்டிய சூழல் நிலவவில்லை. துறைசார் வல்லுணர்களின் கருத்திற்கமைய நாம் எமது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம். மேலும் நிலைமை பாதிப்படைந்தால் அதற்கேற்ப மாற்று நடவடிக்கையினை நாம் அறிவிப்போம் என்றது சுவிஸ் அரசு.

நத்தார் காலத்தில் கடைகள்
கடந்த 7 நாட்களாக சுவிசில் உள்ள தொற்றுப் பரவலும் விகிதமும் ஸ்பெயின் அல்லது பெல்ஜியத்துடன் ஒப்பிட்டால் மிகவும் அதிமாக உள்ளது. 25 முதல் 27 மார்கழி வரை எரிபொருள்நிரப்புநிலையம் முதல் அனைத்துக் கடைகளும் முழுமையாகப் பூட்டப்பவேண்டும்.  நத்தார் கால கொள்வனவுகளை மக்கள் திட்டமிட்டு நடாத்துங்கள் என்றார்கள் சுகாதார அமைச்சர்.

மாநிலங்கள் விலக்களிக்க முடியும்
தொற்றின் பரவல் குறைவாக உள்ள இடங்களில் அரசு அறிவிக்கும் முடக்கத்தில் இருந்து மாநிலங்கள் விலக்கினை அறிவிக்க உரிமை உண்டு. விலக்குப் பெறக்கூடிய இடங்களுக்கான வரையறையாக தொற்றின் பரவல் விகிதம் 1 குறைவாகவும் கடந்த 7 நாட்களில் சுவிற்சர்லாந்து நாட்டின் தொற்றின் சராசரியைவிடக் குறைவாகவும் இருத்தல் வேண்டும்.

வீடுகளில் இருங்கள்
சுவிற்சர்லாந்து அரசு மக்களை வீடுகளில் இருக்க அழைப்பு விடுக்கின்றது. அனைத்து மக்களும் தமது சமூகத் தொடர்பாடல்களைக் குறைத்துக்கொண்டு வாழ்வாதார செயல்களில் மட்டும் ஈடுபட்டு பயணம் மற்றும் உலாவுதல் தவிர்த்து வீடுகளில் இருக்க சுவிஸ் அரசு பொது அழைப்பினை விடுக்கின்றது. இப்போது அறிவிக்கப்படும் நடவடிக்கை உரிய பலன் அளிக்காதுபோனால் சுவிஸ் அரசு மீண்டும் கடுமையான நடவடிக்கையினை அடுத்த கிழமை அறிவிக்க வேண்டி வரலாம்.

பனிசறுக்கும் திடல்கள்
பனிசறுக்கு விளையாட்டுத் திடல்கள் தொடர்பான நடவடிக்கைத் தீர்மானங்களை மாநில அரசுகளே மேற்கொள்ளும். பனிச்சறுக்கு நிறுவனங்களுக்கு நோய்த்தொற்றுச்சூழலில் மருத்துவனைகளில் உள்ள கொள்திறன் வாய்ப்பு, மகுட நுண்ணித் தொற்றினைக் கண்டறியும் பொறிமுறைத் தடம் மற்றும் நோய்த்தொற்று பரிசோதனை செய்யும் திறன் ஆகியவை ஆயப்பட்டு அனுமதி அளிக்கப்படும்.  மேலும் பாதுகாப்பு காப்பமைவு உரிய நெறிகளுடன் எழுதப்பட்டு, மாநில அரசு அனுமதியினை அளிக்கும்.  

விரைவுப் பரிசோதனை
நடுவனரசு விரைவுப் பரிசோதனை முறைமைகளை விரிவாக்க உள்ளது. சுவிஸ் அரசு அறிவித்துள்ள வரையறைத் திறன்கொண்ட மருந்தகங்களில், மருத்துவமனைகளில் மற்றும் மருத்துவர்கள் அதுபோல் பரிசோதனை நிலையங்களில் அனைத்து வகை விரைவுப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். இதுவரை நோய் எதிரணு (Antigen) வகை பரிசோதனைகள் மட்டும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. ஆனால் இனிவரும் காலங்களில் விரைவுப் பரிசோதனைகளும் ஏற்றுக்கொள்ளப்படும். அப்படிப் பரிசோதனையில் நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் தொடர்வினை („PCR“Polymerase chain reaction) பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

வேலைநேரம் குறுக்கப்பட்ட தொழிலாளர்கள்
நடுவனரசின் நடவடிக்கைகாரணமாக பாதிக்கப்பட்ட துறைகள் தமது பணியாளர்களின் வேலை நேரங்களைக் குறுக்கி இருப்பின் அதற்கான இழப்பீட்டினை நடுவனரசு தொடர்ந்து வழங்கும். அதற்கான விண்ணப்பத் திகதியின் கால வரையறையின 31. 03. 2020 வரை நடுவனரசு நீடித்துள்ளது.
பொருளாதர அமைச்சர் திரு. பார்மெலின் தெரிவிக்கையில் பணிநேரம் குறுக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் ஈடு நீடிக்கப்படுகின்றது. அதுமட்டுமல்லாது 3470 பிராங் வரை ஊதியம் பெறுவோர்களுக்கு முழுமையான ஈட்டுத்தொகை கழிவின்றி அளிக்கப்படும் என்றார். இதன்படி 01. 12. 2020 முதல் 31. 03. 2021 வரை நேரம் குறைக்கப்பட்ட மேற்காணும் தொகை ஊதியம் பெறுவோருக்கு முழுமையான இழப்பீடு கிடைக்கும்.

மாநில அரசுகள் அளிக்கும் விலக்குகள்
தற்போது சுவிஸ் அரசு தொற்றுக் குறைவான பகுதிகளில் மாநில அரசுகள் விலக்குளை அறிவிக்கலாம் என்று சொல்லியிருப்பது சுவிசின் மேற்குப்பகுதி மாநிலங்களுக்கும் அப்பன்செல் மாநிலத்திற்கும் மட்டுமே பொருத்தமாக உள்ளது.
சுவிற்ரச்லாந்து அரசு மகுடநுண்ணித் தொற்றுத் தடுப்பு நடடிவக்கைக்கான தமது அடுத்த ஒன்றுகூடலை 30. 12. 2020 நடாத்தவுள்ளது. நிலைமை சீராகாவிடின் அப்போதும் புதிய அறிவிபபுக்களையும் மேலும் முடக்கத்தினையும் எதிர்பார்க்க வேண்டியிருக்கும்!

தொகுப்பு: சிவமகிழி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment