14. 12. 2020 நண்பகல் 12.30 மணிக்கு சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சர் மாநிலங்களின் சுகாதரத்துறை ஒருங்கிணைப்புத் தலைவருடன் ஊடகங்களைச் சந்தித்தார். எதிர்வரும் வெள்ளி 18. 12. 2020 சுவிஸ் நடுவனரசு தமது புதிய நோய்த்தடுப்பு நடவடிக்கையினை அறிவிக்க உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள நடவடிக்கையினை விடவும் இவை இறுக்கமானதாக அமையலாம் எனும் எதிர்பார்ப்பினை இச் சந்திப்பு உணர்த்தியுள்ளது.
கடந்த வெள்ளி சுவிஸ் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தும் மகுடநுண்ணி (கோவிட்-19) தொற்றின் விகிதம் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 72 மணிநேரத்திற்குள் சுவிற்சர்லாந்து சுகாதாரத்துறையின் கணக்கெடுப்பின்படி 10 726 ஆட்கள் நோய்த்தொற்றிற்கு ஆளாகி உள்ளார்கள். கடந்த திங்கள் கிழமையை விட இது அதிகமாகும். கடந்த திங்கள் 9809 ஆட்களும், அதற்கு முந்திய திங்கள் 8282 ஆட்களும் நோய்த்தொற்றிற்கு உள்ளானது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இன்று ஊடகங்கள் முன்தோன்றிய சுவிசின் சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே அவர்கள் மக்கள் அரசின் அறிவிப்பினை ஒழுகாதுவிடின் அது சட்டமுரண் மட்டுமல்ல, பெரும் குற்றமும் பொறுப்பில்லாத் தன்மையும் என விமர்சித்தார். எதிர்வரும் நாட்களுக்குள் தொற்றின் விகிதத்தினை 0.8 வீதத்திற்குள் குறைப்பதற்கு அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டே கடந்த முறை தனிவகை முடக்கத்தினை அறிவித்திருந்ததென்றும் தெரிவித்தார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18.12.2020) புதிய முடக்கம் அறிவிக்கப்படுமா?
அடுத்த அறிவிப்பில் சுவிஸ் அரசு நாட்டின் இயக்கத்தினை மேலும் மட்டுப்படுத்திக்கொள்ள அறிவிப்புக்களை வெளியிடும் என்ற சுகாதார அமைச்சர், அதனை முழுமையான முடக்கமாகக் கொள்ளமுடியாது என்றார். சுவிற்சர்லாந்தின் பிரெஞ்சுமொழி பேசும் மாநிலங்கள் கடந்த சில காலமாக ஏனைய சுவிசின் பகுதிகளைவிடவும் இறுக்கமான நடைமுறைகளைக் கைக்கொண்டதால் அப்பகுதியில் தொற்றின்விகிதம் குறைவாக உள்ளது. ஆகவே முடக்கம் நோய்த்தொற்றினைக் கட்டுப்படுத்துவது உறுதியாகத் தெரிகின்றது. எதிர்வரும் நாட்களில் பண்டிகை காலத்தைப் பெருந்தொற்று கவ்விக்கொள்ளாது இருக்க நாம் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக அனைத்துத் தரப்புக்களுடனும் தகவல்களைப் பரிமாறவுள்ளோம் என்றார் சுகாதார அமைச்சர்.
பிரித்தானியவைத் தொடர்ந்து கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தடுப்பூசியை மக்களுக்கு இடுவதற்கு தயாராகி வருகின்றன. சுவிற்சர்லாந்து தடுப்பூசி வழங்குவதற்கான இசைவினை சுவிஸ்மெடிக் எனும் எவரது கட்டிற்கும் உட்படாத சுவிசின் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் பெறவேண்டி உள்ளது. இது பேரிடர் காலமாக இருந்தாலும் உரிய ஆய்வினை மேற்கொண்டு, தடுப்பூசி முழுமையான பலனை அளிக்கும் எனும் உறுதிப்பாட்டுடன் மட்டுமே மக்களிடம் சென்றடைய அனுமதிக்கும் என்றார் சுகாதார அமைச்சர். நடுவனரசு மாநில அரசிடம் தடுப்பூசியைக் கையளிக்கும். தை 2021 முதல் நாம் வீரியம் உள்ள தடுப்பூசியினை இடமுடியும் எனவும் சுகாதார அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். இத்தடுப்பூசிக்கு சுவிஸ்வாழ் மக்கள் கட்டணம் செலுத்தத்தேவையில்லை. இது அரசின் பொறுப்பாகும் என்றார் சுகாதார அமைச்சர் அலான் பெர்சே.
உற்றுழி (அவசரசிகிச்சை) மற்றும் மருத்துவதாதியர் பாதிப்பு
சுவிசின் பல அவசரசிச்சைத் துறைசார் பணியாளர்கள் கடந்த நாட்களில் பணிச்சுமை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தம் உச்சவலுவரை பணியாற்றி வருகின்றார்கள். ஆகவே மேலும் கட்டில்களை தயார்செய்வதை விடுத்து, பணியாளர்கள் நலன் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும், அவர்கள் தற்போது களைத்துப்போயுள்ளார்கள் என்றார் சுகாதார அமைச்சர். இக்கருத்திற்கு சுவிஸ் மாநிலங்களின் சுகாதரத்துறை ஒருங்கிணப்புத் தலைவர் திரு. லுக்காஸ் எங்கெல்பெர்க்கெர் நாம் எமது சுகாதாரத்துறையின் திறனை இப்போது இறுக்கி எதிர்வரும் தை 2021ற்குள் சரிந்து தகர்ந்துபோய்விடக்கூடாது என்றார்.
விரைவுப் பரிசோதனை
சுகாதார அமைச்சர் விரைவுப் பரிசோதனையினை தொடர்ந்தும் முழு வலுவுடன் நடைமுறைப்படுத்த உள்ளதாகத் தெரிவித்தார். மூதாளர் இல்லங்களில் நோயிற்கான சமிக்கைகள் இல்லாதவர்களிடத்திலும் இப்பரிசோதனையினை மேற்கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என பேரிடர் முகாமை ஆணையாளர் திரு. பத்திறிக் மத்தீஸ் தெரிவித்தார். மேலும் அவர் கடந்த நாட்களில் கிறபுந்தன் மாநிலத்தில் இவ்வாறு மாநிலம் முழுவதும் பரந்த பரிசோதனை ஆற்றப்படுகின்றது. இது பரவலை முற்கூட்டிக் கண்டறிந்து, தொற்றினைக் கட்டுப்படுத்த வழிசெய்வதாகத் தெரிவித்தார்.
மாநிலங்களின் தகவல்பரிமாற்றம்
சுவிற்சர்லாந்து நடுவனரசின் அமைச்சர்களுக்கும், மாநிலங்களின் சுகாதார அமைச்சர்களுக்கும் மற்றும் சுகாதாரத்துறை மேலாண்மை இயக்குநர்களிடையிலும் ஆழமான திறந்த உரையாடல்கள் கடந்த நாட்களாக நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. சுகாதார அமைச்சர் திரு. பெர்சே அவர்களும் மாநிலங்களின் சுகாதாரத்துறை ஒருங்கிணைப்பாளர் திரு. எங்கெல்பெர்க் அவர்களும் தம்மிடையில் இசைவான கருத்தொருமிப்பு நிலவுவதாகத் தெரிவித்தனர். பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த வெள்ளி (11.12.20) அறிவித்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. கூடியளவு இறப்புக்களைத் தடுத்துப்பதுடன் சமூகத்தைக் காயப்படுத்தாத, பேரிடர் நேராது காக்கின்ற பயனுள்ள நடவடிக்கையினை நாம் விரைந்து நடைமுறைப்படுத்தவேண்டும். அது எமது பண்டிகை நாட்களை பாதிக்காததாகவும் இருக்க வேண்டும் என்றார் திரு. எங்கெல்பெர்க்.
இவரது வாசகத்துடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிப்பினை நாமும் எதிர்பார்த்திருப்போம்!
தொகுப்பு: சிவமகிழி