
நாங்கள் தமிழீழத்தில் வசிக்கிறோமா அல்லது வேறெங்கும் வசிக்கிறோமா என்பது விடயமல்ல,நமக்குள தமிழீழம் இருக்கிறதா?என்பதுதான் முக்கியமான கேள்வி.
தமிழர்களாகிய நாம் நம்மைப்பார்த்து இந்தக்கேள்வியைக் கேட்டுக்கொண்டால் நம்மை நாமே சரிசெய்து கொள்ளலாம்.ஆக நமக்குள்ளேதமிழீழம் இருக்குமானால் நாம்நிச்சயமாக அதன் விடுதலை பற்றிச் சிந்திப்போம்.அதை நோக்கி ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணுவோம்.முடிந்தவரை அதற்காகச் செயற்படுவோம் அல்லது செயற்படஎத்தனிப்போம்.
“முள்ளிவாய்க்கால் எப்போதும் முற்றுப்புள்ளி ஆகாது”என்ற பாடலை எல்லோரும் பாடிக்கொண்டு கவலையுணர்விற் கரைந்து போதல் மட்டுமே போதுமானதா? நாம்கடந்துவந்த அவலங்களைத் திருப்பி ஆக்கபூர்வமான செயல்களூடாக எதிரிக்குப்பாடம் சொல்ல வேண்டாமா? காயங்களின் வடுக்களில் வலிக்கும் போதெல்லாம் தாயகப்போரிலே மாண்ட எங்கள் உறவுகளின், மாவீரம் எழுதிச்சென்ற எங்கள் மாவீரர்களின் உள்ளக்கிடக்கைகள் உலுப்பவில்லையா?
பதினொரு ஆண்டுகள்ஆகிவிட்டன.நாம் தமிழீழத்திற்கான பாதையில் ஏதாவது முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறோமா? என்ன செய்துகொண்டிருக்கிறோம்?இந்தக்கேள்விகளை நமக்கு நாமே கேட்டுப்பார்த்தால் நமது உளச்சான்றே எம்மைக் கொன்றுவிடும்.
நாம் ஏன் உயிர்காவி வந்தோம்?நாய்மாண்டாலென்ன,பூனை சிம்மாசனம் ஏறினால்நமக்கென்ன நாங்கள் வாழ்ந்தாற்சரி என்று எண்ணி வாழ்வதற்கா?அதற்குப் பெயர் வாழ்க்கையா?அப்படியாயின் மனிதம் என்பதன் பொருள்தான் என்ன?இனவழிப்பு இன்னுமின்னும் தீவிரமாக்கப்பட்டுத் தமிழீழத்தாயகம் சீரழிந்து போய்க்கொண்டிருப்பதை நாம் உணராதவர்களாக ,எமது உணவையும் உடல்நலத்தையும் மட்டும் கவனித்துக்கொண்டு ,மற்றவர்களைவிடவும் அதிகமாக எப்படிப் பணம் தேடுவது என்று யோசித்துக்கொண்டு விழாக்களிலும், கேளிக்கைகளிலும் நேரத்தை ஓட்டிக்கொண்டு எப்படித்தான் இருக்க முடியும்?அவரவர் செய்யமுடிந்த பணிகளைச் செய்தாலே நாம் பெரியமாற்றத்தைக் கொண்டுவரமுடியும்.போர் ஓய்ந்திருக்கிறதே ஒழிய,போராட்டம் என்றைக்கும் ஓயாது. நாம் நமக்குள் தமிழீழத்தைக் கொண்டிருந்தால் மட்டுமே அடுத்த தலைமுறைக்கும் தமிழீழத் தாயகத்தின் அவசியத்தை முழுதாக உணரவைக்க முடியும்.அவர்களும் தமிழீழத்தை அவர்களுக்குள்ளே பத்திரப்படுத்தி அதற்கான வேலைத்திட்டங்களில் மும்முரமாக இறங்குவார்கள்.
ஏனெனில் இன்றையகாலப்போராட்ட வடிவம் அறிவியற் தொழிநுட்பமயமானது.அதைச் சரியாகக் கையாளும் வல்லமை அவர்களிடம் உண்டு. அவர்களிடம் சரியான முறையில் எமது போராட்டத்தைக் கையளிக்கவேண்டிய கடப்பாடு எமது தலைமுறைக்கு இருக்கிறது.சரியான முறையில் நாம் அந்தச் செயலைச் செய்தால் மட்டுமே அடுத்தடுத்த தலைமுறைகள் விடுதலைப்பயணத்தைத் தொடர்வார்கள்.எமதுபோராட்டத்தின் உறுதிமிக்கஇடையறாத் தொடர்ச்சியே தமிழீழ விடுதலையின் பாதை. அதைவிடுத்து நான்பெரிதாநீ பெரிதா, நான் சரி நீ பிழை,என்று ஆளாளுக்கு மல்லுக்கட்டி ஒருவர் செய்ய முயலும் பணிக்கு முற்றுப்புள்ளி வைப்பதிற் குறியாயிருந்தால் தமிழீழத்தை நாம் மறந்துவிட்டு நடக்கிறோம்என்று அர்த்தம்.
நமக்குள் தமிழீழம் இருந்தால் நாம் ஒரு செயலை விமர்சிக்க முதல் உண்மையுடன் ஆராயமுற்படுவோம். மனிதர்களைச் சரியாகக்கையாள நினைப்போம்.தமிழீழத்தை நோக்கிய எந்தச்செயலையும் விடுதலைக் கண்ணோட்டத்தோடு அளக்க முயலுவோம். எமது வழியொற்றித்தானே அடுத்த பரம்பரை நடக்கும் என்பதை நாம் புரிந்துகொண்டு அவர்களை இப்போதே சரியாக வழிநடத்த, நம்மை நாமே சரிபார்த்துக்கொள்ள வேண்டும். தலைவர் அவர்களின் தெளிந்த சிந்தனைகளை எமது எண்ணக்கருக்களில் பதிவிட்டு எமது பயணத்தைத் தொடர நாம் எம்மைக் கேட்கவேண்டியகேள்வி “நமக்குள்ளே தமிழீழம் இருக்கிறதா?
தலைவரின் சிந்தனையிலிருந்து இரு துளிகள்:
:1: “எமது தேசத்தின் எதிர்காலச்சிற்பிகளாக ஒரு புதிய இளம்பரம்பரைதோற்றங்கொள்ள வேண்டும்.ஆற்றல்மிகுந்தவர்களாக,அறிவுஜீவிகளாக,தேசப்பற்றாளர்களாக,போர்க்கலையில் வல்லுனர்களாக,நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்றவேண்டும். இந்தப்பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக,நிர்வாகிகளாக, ஆட்சியாளர்களாக உருப்பெறவேண்டும்.”
2:எமது விடுதலைப் போராட்டத்தின் பழுவை அடுத்த பரம்பரைமீது சுமத்த நாம் விரும்பவில்லை.எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும். எமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம்.அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போராட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.”
முள்ளிவாய்க்கால் கற்றுத்தந்த பாடங்களோடு வேதனைகளை விசைகளாக்கி மாவீரத்தில் உறுதிகொண்டு மீண்டெழுந்து தமிழீழ விடுதலைக்காகவே நடப்போம்.
கலைமகள்
17.5.2020