தாயகத்தில் சாவைத் தழுவிக்கொண்ட வைத்தியான் சூசைப்பிள்ளை அவர்களை தேசத்தை நேசித்த தேசப்பற்றாளர் என ஊடகமையம் கௌரவித்துள்ளது.
பிரான்ஸ் ஊடக மையத்தில் வைத்தியான் சூசைப்பிள்ளை அவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஐந்து மணிக்கு நடைபெற்றது. ஊடக மையத்தின் தலைவர் ஈகைச்சுடரை ஏற்றிவைக்க அகவணக்கத்துடன் மலரஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. தற்போதைய சுகாதார அவசர நிலைமைக்கேற்ப குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களுடன் சமூக இடைவெளியைப் பேணியவாறு இடம்பெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில், ஊடகமையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…
நாள்: 09.06.2020
தேசத்தை நேசித்த தேசப்பற்றாளர் வைத்தியான் சூசைப்பிள்ளை!
ஈழமுரசு தன் பயணத்தில் இன்னொரு உறவை இழந்து நிற்கின்றது. சூசை அண்ணை என எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட வைத்தியான் சூசைப்பிள்ளை அவர்கள் கடந்த 5ம் திகதி வெள்ளிக்கிழமை தாயக மண்ணில் சாவைத் தழுவிக்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் குருநகரைப் பிறப்பிடமாகவும் பிரான்சை தற்காலிக வாழ்விடமாகவும் கொண்டிருந்த சூசைப்பிள்ளை அவர்கள், ஈழமுரசு நிறுவக ஆசிரியர் கப்டன் கஜன் காலத் தில் இருந்து ஈழமுரசு பணியகத்தில் நீண்ட காலமாக வரவேற்பாளராகப் பணியாற்றியவர். பணியகத்திற்கு வருகின்றவர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பதில் பலரதும் நன்மதிப்பைப் பெற்றவர். நேரில் வருபவர்களை விட தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்பவர்களுக்கு கூட இவரது குரல் நன்கு பரிச்சயமாக இருந்தது.
வரவேற்பாளராக மட்டுமன்றி ஈழமுரசின் பல்வேறு பணிகளையும் தன் தோள் மீது சுமந்து, தேச விடுதலைப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். ஆங் கில அறிவு நிரம்பப் பெற்றிருந்த இவர், ஈழமுரசிற்காக மொழி பெயர்க்கப்படும் கட்டு ரைகள் சரியாக மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றனவா என்பதில் இருந்து, ஈழமுரசில் வரும் எழுத்துப் பிழைகளைத் திருத்துவது வரை இவரது பங்கு காத்திரமானது. இளவயதில் கால்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கிய இவர், பிரான்சில் நடைபெறும் ஈழத் தமிழர்களின் கால்பந்தாட்டப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியதுடன், கால்பந்தாட்டம் தொடர்பான செய்திகளையும் ஈழமுரசு இதழில் பதிவாக்கியுள்ளார்.
இதனைவிட ஈழமுரசு விநியோகத்தில் இவரது பங்கு காத்திரமானது. இதழ்களை விநி யோகிப்பதில் இருந்து அதற்கான நிதியைச் சேகரிப்பது வரை அவரது பணி விரிவானது. இதன்மூலம் லாச்சப்பல் வர்த்தகர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒருவராகவும் திகழ்ந்தார். தாயக விடுதலைப் போரில் வெற்றிச் செய்திகள் வந்துவிட்டால் இவரது மகிழ்ச்சியை அளவிட முடியாது. அந்தச் செய்தியுடன் வரும் இதழ்களை எடுத்துச்சென்று விநியோகிப்பதிலும் இவருக்கு அலாதிப்பிரியம். தேசத்தின் மீதும் தேசியத் தலைவர் மீதும் பெரும் பற்றுக்கொண்ட ஒரு தேசப்பற்றாளாராக வாழ்ந்தவர்.
சிங்களம் கற்றால்தான் வேலையில் பதவி உயர்வு வழங்கப்படும் எனக் கூறியபோது அதனை ஏற்க மறுத்து, வேலையை உதறித்தள்ளிவிட்டு புலம்பெயர்ந்து பிரான்சிற்கு வந்த தாகக் கூறிய இவர், தன் முதுமையான வயதிலும் தேச விடுதலைக்காக தளராது பணியாற் றியவர். சமாதான காலத்தின் பின்னர் தன் முதுமைக் காலத்தை தாயகத்தில் கழிப்பதற் காகச் சென்ற இவர், முள்ளிவாய்க்கால் பேரவலத்தினால் பெரும் வேதனையடைந்தார். மீண்டும் சூரியன் எழும், தமிழர்கள் வாழ்வில் விடியல் பிறக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தார். 83 வயதினைக் கடந்தும், மிதிவண்டி ஓடி தன் பணிகளைத் தானே செய்து சுயமாக வாழ்ந்துகொண்டிருந்த நிலையில், அதிரடியாக நிகழ்ந்த இவரது சாவு அவரது குடும்பத்தினரைப் போலவே எமக்கும் அதிர்ச்சியளிப்பதாக அமைந்துவிட்டது.
எனினும் தாயக மண்ணிலேயே தன் இறுதிக் காலத்தைக் கழித்து அந்த மண்ணிலேயே தனது உடல் புதைக்கப்படவேண்டும் என்ற இவரது தீவிரமான எதிர்பார்ப்பு இன்று நிறை வேறியுள்ளது. இது எமக்கு சற்று ஆறுதலைத் தருகின்றது.
இந்தவேளையில், இவரது இறப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரின் துயரத்தில் ஈழமுரசு இதழும் அதனை வெளியிட்டுவரும் தாயக அமைப்பான ஊடகமையமும் பங்கெடுத்துக்கொள்கின்றது. இவரதும், இவரைப் போன்றவர்களதும் கனவுகளைச் சுமந் தபடி தாயக விடுதலை நோக்கி ஈழமுரசு தொடர்ந்து பயணிக்கும் என்று இந்த வேளையில் மீண்டும் உறுதியயடுத்துக்கொள்கின்றது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
ஊடக மையம்