“மொழியாகி எங்கள் மூச்சாகி” பாடல் ஒலிப்பதிவு அனுபவம்

0 0
Read Time:16 Minute, 49 Second

இசையோடு வாழ்தல் தமிழரின் வாழ்வியல் மரபு. தமிழீழவிடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பதில் இசையின் பங்கு உன்னதமானது. அந்தவகையில் மண்ணிலே விதையாகும் மாவீரக்கடவுளரை வணங்கி வழிபடுவதற்கென்று ஒரு பாடலை உருவாக்கவேண்டும் என்று தமிழீழத்தேசியத்தலைவர் அவர்கள் எண்ணங்கொண்டார். அதன்படியே மாவீரர்துயிலுமில்லத்தில் வீரர்களை விதைக்கின்றபோதிலும், மாவீரர் நாளன்று ஊர்கூடி உறவுகள்கூடி மாவீரர்களுக்கு விளக்கேற்றும் அந்தப்பொழுதிலும் அப்பாடலை ஒலிபரப்பி இசையால் மாவீரர்களின் நினைவுகளை மீட்டி ,அவர்களை உளம் நிறைத்து உணர்வேற்றிக்கொள்ளும் பெருமைக்குரிய பாடல் பிறந்தது.


1992 ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இப்பாடல் உருவாக்கத்திற்கான வேலைகள் நடந்தேறின. அவ்வேளை நான் செஞ்சோலையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.சில மாதங்களின் முன்புதான்”செஞ்சோலை இசைமாலை” எனும் இசைநிகழ்வில் பாடுவதற்காக நான் களமுனையிலிருந்து செஞ்சோலைக்குக் கூட்டிவரப்பட்டிருந்தேன்.

கேட்பதை அப்படியே பாடும் வல்லமை இயல்பிலேயே எனக்கு இருந்தது.அதனால் பாசறையில் நடைபெறும் நிகழ்வுகளில் என்னைப்பாடச்சொல்லி அக்காக்கள் கேட்பார்கள்.அன்றையகாலத்தில் வெளிவந்திருந்த எழுச்சிப்பாடல்களைப் பாடுவேன்.அப்போது இசையை நான் முறைப்படி கற்றிருக்கவில்லை.ஆனால் பாடுவதில் பேரவா இருந்தது. போராளிகள் சிலரும்,செஞ்சோலைப்பிள்ளைகளும் “செஞ்சோலை இசைமாலை”எனும் இசைநிகழ்ச்சில் பாடியிருந்தோம் .யாழ்மாவட்டத்தின் 16 ஊர்களில் மேடையேற்றப்பட்ட பாடல்கள் மக்களின் வரவேற்பைப் பெரிதும் பெற்றது. தமிழீழத்தின் புகழ்பெற்ற பாடலாசிரியர்கள் பலரால் புதியபாடல்கள் செஞ்சோலை பற்றிய அறிமுகத்துடன் எழுதப்பட்டு ,அவை எமக்குப் பயிற்றுவிக்கப்பட்டு தேர்ந்த இசைக்கலைஞர்கள் இசைவழங்க நாம் பாடினோம். இளம் இசையமைப்பாளர் முரளி அண்ணா அவர்கள் (இசைவாணர் கண்ணன் மாஸ்ரர் அவர்களின் மகன்) அப்பாடல்களுக்கு இசையமைத்து எம்மை நெறிப்படுத்தினார்.அந்தப் பாடல்கள் உருவான வரலாறு பெரியது.அதனை வேறொரு முறை விவரிக்கின்றேன். ஆயினும் எப்படி எனக்குத் துயிலுமில்லப் பாடலைப் பாட அழைப்பு வந்தது என்பதனைக்கூற இச்சிறு அறிமுகம் தேவை என்பதால் சிலவற்றைப் பதிவுசெய்துள்ளேன்.
ஒரு காலைப்பொழுது ,வழமையான எனது பணிகளின் நடுவே பொறுப்பாளர் ஜனனி அக்காவின் அழைப்பு. “மாவீர்களுக்கான ஒரு பாடல் ஒலிப்பதிவுக்காக கலைபண்பாட்டுக்கழகத்தினர் உன்னைக் கூப்பிட்டிருக்கிறார்கள்.நீ தமிழோசை ஒலிப்பதிவுகூடத்துக்குப் போகவேணும்”என்று அக்கா சொன்னா.அதுஎதிர்பாராத ஒரு மகிழ்ச்சியானசெய்தி. உற்சாகம் மனதுக்குள்ளே…நான் உடனே தயாராகிப் புறப்பட்டுவிட்டேன். ஏற்கனவே செஞ்சோலைப்பாடல்கள் ஒலிப்பதிவு யாழ்- கொக்குவிலில் இருக்கும் “தமிழோசை”ஒலிப்பதிவு கூடத்தில்தான் நடைபெற்றது. விரைந்து அக் கலையகத்தைச் சென்றடைந்தேன்.
அங்கே கலையகத்தின் முன்கூடத்தில் இசைக்க கலைஞர்கள்(வித்துவான்கள்) பலர் குழுமியிருந்து அவரவர் இசைக்கருவிகளின் இசைப்பகுதியைப் பயிற்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.
கீபோட் இசையமைப்பாளர் முரளி அண்ணா, மிருதங்கவிற்பன்னர் கண்ணதாசன் அண்ணா , தப்லாக் கலைஞர் வரதன் அண்ணா, வயலின் கலைஞர்கள் ஜெயராம் அண்ணா,கேசவமூர்த்தி அண்ணா, கோபிதாஸ் அண்ணா,யாழோசைக் கண்ணன் அண்ணா பேஸ்கிற்றார் கலைஞர் தோமஸ் அண்ணா ,கிற்றார்கலைஞர் வாசன் அண்ணா,றம்பற்கலைஞர் சண்முகராஜா அண்ணா,ஒக்ரபாட் கலைஞர் நந்தன் அண்ணா இன்னும் சிலர்…

தமிழீழத்தின்முதுபெரும் இசையமைப்பாளர் இசைவாணர் கண்ணன் மாஸ்ரர் அவர்கள் ஆர்மோணியத்துடன் அமர்ந்திருந்தார்.அவரின் முன்னே அமரர் வர்ணராமேஸ்வரன் அண்ணாவும் மேஜர் சிட்டண்ணாவும் அமர்ந்திருந்து பாடிக்கொண்டிந்தனர். அங்கே இன்னுமொரு பெண்பிள்ளையும் அமர்ந்து பாடிக்கொண்டிருந்தார்.அவர் பெயர் அபிராமி என்று பின்னர் தெரிந்துகொண்டேன்.அவர் இசைபயின்றுகொண்டிருந்த ஒரு மாணவி.

எங்கள் அன்புக்குரிய மூத்த கவிஞர் தமிழீழக்கலைபண்பாட்டுப் பொறுப்பாளர் புதுவையண்ணா அவர்கள் அன்றைய ஒலிப்பதிவிற்கான ஒழுங்குநடவடிக்கைகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்.
நான் கலைக்கூடத்தின் உள்ளே நுழைந்தபோது கண்ணன் மாஸ்ரர் என்னை இருக்கச்சொன்னார்.அவருக்கு என்னைத்தெரியும். அபிராமியின் அருகே அமர்ந்தேன்.இசையமைப்பாளர் முரளிஅண்ணாவும் மிகவும் தெரிந்தவர் ஆதலால் என்னை நலம் விசாரித்தார்.நான் சற்றுப் பயத்துடனும் படபடப்புடனும் இருக்கிறேன் என்பதை அவர் புரிந்துகொண்டுவிட்டார். என்னை இயல்பாக்கவே அவர் பேச்சுக்கொடுக்கிறார் என்பதை உணர்ந்தேன்.

மாஸ்ரர் பாட்டை எங்கள் நால்வருக்கும் பழக்கிவிட்டு சில நுணுக்கங்களையும் புரியவைத்தார்.அப்போதுதான் அந்தப்பாடல் ஒருசிறப்புப்பாடல் என்றும் மிகவும் நீளமான பாடல் என்றும் தெரிந்துகொண்டேன்.பயிற்சிசெய்யும்போதே மனங்கனத்துப்போயிருந்தது.
அடுத்த ஓர் அறையில் ஒலிப்பதிவுக்கான தயார்ப்படுத்தலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் மூத்த ஒலிப்பதிவாளர் நாட்டுப்பற்றாளர் நித்தியண்ணா அவர்கள்.அவருக்கும் “செஞ்சோலை”ஒலிப்பேழை ஒலிப்பதிவின்போது நான் அறிமுகமாயிருந்தேன்.நித்தியண்ணாவும் ஓரிருவார்த்தைகள் என்னுடன்பேசியமை எனக்குப் பெரும் தெம்பைத்தந்தது. தொழில்நுட்பவசதிகள் மிகவும் சொற்பமாகவே இருந்தபோதிலும் அவற்றின் உதவியோடு நேர்த்தியாக வேலைகள் நடைபெற்றன. அப்போதெல்லாம் spool எனப்படும் சுருள் ஒலிநாடாவிலேயே ஒலிப்பதிவுகள் செய்யப்பட்டன. பாடகர்களின்குரல்களையும் இசைக்கருவிகளின் இசையையும் ஒரே நேரத்தில் ஒலிப்பதிவு செய்ய வேண்டும்.யாராவது ஒருத்தர் தவறுவிடுகின்றபொழுது மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்கவேண்டும். அதனால் முடிந்தவரை எல்லோரும் சிரத்தையோடு செயற்பட வேண்டப்பட்டோம்.
பாடல் பலதடவைகள் ஒத்திகை பார்க்கப்பட்டபின் குரல் ஒலிப்பதிவு அறையினுள் நாங்கள் நால்வரும் போவதற்கு முன்னதாக அங்கே நின்ற பெரியவர் ஒருவர் கண்ணன் மாஸ்ரரிடம் என்னைப்பற்றி ஏதோ கேட்டறிந்துவிட்டு என்னைக் கூப்பிட்டார் நான் பணிவுடன் அவர் முன்னே போய்நின்றேன். “தெரியும்தான இந்தப்பாட்ட நீர் சரியாப் பாடாட்டி உம்மை நீக்கிப்போட்டு வேற ஆரயும் எடுத்திடுவம்.”என்று சற்று இறுக்கமாக அவர் என்னிடம் சொன்னார்.நான் இந்தத்துறைக்குப்புதியவள் என்பதால் முன்னர் அவர் என்னை அறிந்திருக்க வாய்ப்பில்லை.எனக்குச் சற்று நடுக்கமெடுத்தபோதும் சிரிக்கமுயன்று தலையாட்டிவைத்தேன்.அந்தப் பெரியவர் யாரென்றால் சங்கீதவித்துவான் பத்மலிங்கம் ஐயா அவர்கள்.அவரும் அங்கு வந்திருந்தார்.
குரல் ஒலிப்பதிவு அறையினுள் நால்வரும் நுழைந்தோம்.சிட்டண்ணா,வர்ண ராமேஸ்வரன் அண்ணா,அபிராமி,நான் இந்த ஒழுங்கில் ஒலிவாங்கிக்கு முன்னின்றோம். நித்தியண்ணா ஒலிவாங்கிகளைச்சரிசெய்துவிட்டு,ஒவ்வொருத்தராகப்பாடச்சொல்லி குரலைச் சரிபார்த்தார். பின்பு வெளியே கூடத்தில் அமர்ந்திருந்த வித்துவான்களிடம் இசைக்கருவிகளை ஒவ்வொன்றாக இசைக்கச்சொல்லிச் சரிபார்த்தார்.கண்ணன் மாஸ்ரரிடம் சரிதானே என இறுதியாகக்கேட்டபின் புதுவையண்ணாவைப்பார்த்தார்.அவர் சரி என்று தலையாட்ட முதலாவது தடவை ஒலிப்பதிவு தொடங்கியது.ஆண்களுக்குப் பொருத்தமான சுதியில் பெண்கள் நாங்கள் உச்சஸ்தாயியில் பாடவேண்டியிருந்தது,பாடினோம்.

முதலில் நான்குபேரும் இணைந்து “மொழியாகி எங்கள் மூச்சாகி….என்று தொடங்கி இனிமேலும் ஓயோம் உறுதி…என்று முடியும் வரிகளைப்பாடவேண்டும். பின்பு இசைக்கோர்வை. பல்லவியைத்(தாயகக்கனவுடன்) தனிக்குரலில் வர்ணராமேஸ்வரன் அண்ணா பாடவேண்டும்.பல்லவிமுடியும்போது “எங்கே எங்கே ஒருதரம் விழிகளை…..
என்று தொடங்கும் வரியை அவர் பாடிவிட்டுவிட நாம் மூவரும் அதனைப் பாடவேண்டும்.பின்பு இசைக்கோர்வை.சரணம் ,எங்கே எங்கே… வர்ணாண்ணாவைத் தொடர்ந்து நாங்கள் மூவரும்…
இப்படிப்பாடிக்கொண்டிருக்க எங்கோ ஒரு தவறு…cut சொல்லி
இடையில் நிறுத்தப்பட்டது.இப்படி பலதடவைகள்மீண்டும்மீண்டும் ஒலிப்பதிவு நடைபெற்றது.

கிட்டத்தட்ட ஒன்பதரை நிமிடப்பாடலைப் பிழை விடாமல் தொடர்ச்சியாக நகர்த்திச்செல்வது என்பது பெரும் சவாலான செயலாக இருந்தது. இடையிடையே சிற்றுண்டியுடன் உற்சாகம் தரும் வார்த்தைகளுடன் பணி தொடர்ந்தது. அனைவரும் கருமமே கண்ணாயினர். ஒரு மாலை வேளை தொடங்கிய ஒலிப்பதிவானது இரவிரவாக நகர்ந்து அடுத்தநாள் அதிகாலை 3.30மணியளவில் நிறைவுற்றது.
என்னால் பாடிமுடிக்கமுடியுமா எனத்தெரியாதிருந்தேன்.காரண‌ம் ஒவ்வொருதடவையும் பாடும்போது மனங்கனத்து கண்கள் குளமாகி குரல் தளதளத்துவிடுமளவு மாவீரர்கள்பற்றிய நினைவுகளால் ஏற்பட்ட உணர்வுக்கொந்தளிப்பு …இறுதியில் ஒலிப்பதிவு சரியாகவந்துவிட்டது .நாம் நால்வரும் வெளியே வந்தோம்…புதுவை அண்ணாவின்கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன.அத்தோடு ஓரு நிறைவும் அவர்முகத்தில் தெரிந்தது. நான் எதிர்பார்க்காத சில நிகழ்வுகளும் நடந்தன.
நித்தியண்ணா விரைந்துவந்து “மணிமொழி கலக்கிட்டியள் என்றார்.”எப்பொழுதும் அமைதியே உருவான அவரிடமிருந்து அந்த மகிழ்ச்சிப்பூரிப்பு நான் எதிர்பார்க்காத ஒன்று.. அடுத்த நிமிடம் ” பிள்ளை சும்மா சொல்லேல்ல உண்மையாவே சிறப்பு. நான் எதிர்பார்க்கேல்ல நீர் இப்பிடிப் பாடுவீரென்று”இப்படிச்சொன்னபடி என்கையைப்பற்றிக் குலுக்கியவர் யார் என்று நினைக்கிறீர்கள் ! ?
இசைமேதை பத்மலிங்கம் ஐயா அவர்கள்.
எனக்கு மகிழ்வு என்பதைவிட பெருவியப்பாக இருந்தது. மாவீரர்களே மனதில் நின்றார்கள்.பாடிய எல்லோரும் பாராட்டப்பட்டோம். நான் சிறியவள் ஆகையாலும் இசைத்துறைக்குப்புதியவள் என்பதாலும் வாழ்த்து ஒருபடி மேல்….

ஒரு “பிக்கப்”ஊர்தியில் என்னைச் செஞ்சோலைக்கு அழைத்துவந்து விட்டார்கள்…
அங்கே என்ன ஆச்சரியம்.. அதிகாலை 4மணிக்கு பொறுப்பாளர் ஜனனி அக்கா எனது வருகைக்காகக் காத்திருக்கின்றா .நான் அவரின் அலுவலகத்துள் நுழைந்தேன் . “வாம்மா,எப்பிடிப்போச்சுது ஒலிப்பதிவு?ஒருக்கால் அந்தப் பாட்டப்பாடிக்காட்டு..” என்றா.நான் பாடினேன்.அடக்கிவைத்திருந்த கண்ணீர் ஆறெனப்பாய்ந்தது.அக்காவுக்குப்புரிந்துவிட்டது .என்னை அணைத்து ஆறுதல் சொல்லி, வாழ்த்துச்சொன்னா…

பின்னர் ,1995 ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் அப்பாடலில் சிறிய மாற்றம் ஒன்றைச்செய்யவேண்டியிருந்தது.அந்நேரம் ஒலிப்பதிவாளர் நித்தியண்ணா நாட்டுப்பற்றாளராகிவிட்டார் .நிதர்சனம் தர்மேந்திராக்கலையகப்பொறுப்பாளர், ஒலிப்பதிவாளர் கிருபா அப்பாடல்வரியை மீள் ஒலிப்பதிவுசெய்து மாற்றியமைத்தார்.

அதுவரை நள்ளிரவு வேளையில் விளக்கேற்றி மாவீரரை வணங்கிவந்த நடைமுறை மாற்றப்பட்டு மாலை 6.05 ற்கு விளக்கேற்றி வணக்கம் செலுத்தும் வழமை ஆரம்பித்தது.அதனால் பாடலில் இடம்பெற்றிருந்த “நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாம் உமை வணங்குகிறோம்” என்ற பாடல்வரி “வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம் ” என்று மாற்றம் செய்யப்பட்டது. “மொழியாகி எங்கள் மூச்சாகி”தமிழீழத்தேசியப்பாடல்களில் ஒன்றாகப் போற்றப்பட்டு இன்றுவரை அதற்குரிய நேரங்களில் மட்டும் ஒலிபரப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருமதி.மணிமொழி கிருபாகரன்
25.11.2023

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment