உயிர் உள்ளவரை நினைவில் உள்ள தமிழ்ச்செல்வன் அண்ணா

0 0
Read Time:12 Minute, 12 Second

அன்று அதிகாலை ஏறக்குறைய ஏழு மணி இருக்கும் எமது தங்ககத்துக்கு கிடைத்த வான்வெளி தாக்குதலுக்கான சமிக்ஞையை அடுத்து நாங்கள் எங்களை தற்காத்து கொள்வதற்காக பதுங்குகுழிகளில் மறைந்து கொள்கிறோம்.

எமக்கு அருகில் குறித்த சில நிமிட இடைவெளியில் இலங்கை வான்படை பலத்த தாக்குதலை செய்கிறது. எமது பதுங்குகுழி தாக்குதலின் வேகம் தாங்க மாட்டாது அதிர்கிறது. அப்போதே புரிந்தது அருகில் இருக்கும் எதோ ஒரு முகாம் மீதே இந்த தாக்குதல் ஆனாலும்  நமக்கு அப்போது எமது தமிழ்செல்வன் அண்ணாவின் முகாம் தான் அங்கே சிதைக்கப்படுகிறது என்று தெரிந்திருக்கவில்லை.

தாக்குதல் நடந்து சில நிமிடங்களில் எங்கள் தங்ககத்தை விட்டு வீதிக்கு வந்த போது வீதியே வெளித்து போய் கிடந்தது. எந்த அசைவும் அற்று அந்த கிளிநொச்சி மண் கிடந்தது. சில மனித நடமாட்டங்கள் இயக்க வாகனங்கள் பலவற்றின் உறுமல்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தன. ஆனால் என்ன நடந்தது என்பதை ஊகிக்க முடியாத நிலை
அப்போதுதான் எனது நண்பன் ஒருவன் அவ்வழியே வருகிறான். 
“டாங்கோ சேராவுக்காம் அடிச்சவன் ஆள் உள்ள இருந்ததாம் “
உள்ளம் அந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள தடுமாறியது. அவனது உந்துருளி என்னையும் சுமந்து கொண்டு அவரது தங்ககம் நோக்கி நகர்கிறது. 
அப்போது அங்கே குழுமி இருந்த போராளிகளின் உதடுகள் ஒவ்வொன்றும் உரைத்த வார்த்தைகள் மனதை கனமாக்கின. 
“பங்கர் மூடிட்டுதாம் ரீ.எஸ் அதுக்க தான் இருந்திருக்கணும் ஆளின்ர தொடர்பு இல்லையாம்.” 
மனம் ஒரு கணம் அதுவரை நினைக்காத கடவுளை வேண்டி கொள்கிறது. தமிழ்ச்செல்வன் அண்ணாவுக்கு ஒன்றும் ஆகி இருக்க கூடாது. அவர் இல்லை என்றால் சர்வதேச விவகாரங்கள் மற்றும் அரசியல் செயற்பாடுகள் முடக்கப்பட்டுவிடும் என்று மனம் எண்ணத் தொடங்கியது. ஆனாலும் எந்தக் கடவுளும் கை தரவில்லை. நாம் நினைத்ததுக்கு மாறாக அது நடந்தே விடுகிறது. அவருடன் கூட இருந்து முக்கிய பணியாற்றிய அரசியல்துறைப் போராளிகள் அதை உறுதிப்படுத்தினார்கள். 
வித்துடல்கள் மூடி போன பதுங்ககழியில் இருந்து மீட்கப்படுகிறன. சாவிலும் புன்னகைத்தபடி எங்கள் அண்ணன் வீழ்ந்திருந்தார். அவரை காத்திட அவரை அணைத்தபடி அவரது போராளிகள் அறுவரும் விழிமூடி போயிருந்தார்கள். அப்போதும் மனம் ஏற்க மறுத்துவிடுகிறது. தமிழ்செல்வன் அண்ணாவின் உடலம் இல்லை அது என்று இவர்கள் கூற மாட்டார்களா என்று ஏங்க வைத்தது அவரது வீரச்சாவு. ஆனாலும் அது பொய்யாகாது உறுதிப்படுத்தப்பட்டு தலமைச்செயலகத்தால் பிரிகேடியர் தமிழ்செல்வன் உட்பட ஆறு போராளிகள் வீரச்சாவு என்பதான செய்தியை புலிகளின்குரல் சுமந்து வந்தது.
சோக இசையுடன் கூடிய அந்த கறுப்பு செய்தியை கேட்டு துடித்து போனது தமிழீழம். தமது பிள்ளையை இழந்ததை தாங்க முடியாது சோகத்தில் வீழ்ந்து விடுகிறது. நானும் அவரை முதன்முதலாக சந்தித்த அந்த நினைவை மீட்டுக்கொள்ள எனது பழைய  நாட்குறிப்பேடுகளை திறந்து பார்க்கிறேன். அதில் ஒன்று “அன்புடன் கவிக்கு ” என்று குறிப்பிடப்பட்டு கீழே தனது அழகான எழுத்துருக்களால் அன்புடன் சு.ப.தமிழ்செல்வன் என்று கையெழுத்திடப்பட்டிருந்த அந்த நாட்குறிப்பேட்டை எடுத்து கொள்கிறேன். கையெழுத்தை ஒரு முறை தடவி பார்த்து கொள்கிறேன். எனது கல்வி காலம் அது அந்த நேரத்தில் ஒரு பணியாற்றிய திருப்தியில் அவரை சந்தித்த போது அதை எனக்கு அவர் அன்பாக தந்திருந்தார். அதிலே பல விடையங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும். முதல் பக்கத்தில் இருந்த அந்த வார்த்தைகள் மீதே எனது கண் நிலைத்து விடுகிறது. 
தினேஷ் என்ற பெயரை கொண்ட இந்த புனிதன் இயக்கப் போராளிகள் அனைவரும் தமிழ்ப் பெயர்களை மாற்ற வேண்டும் என்ற நிலை வந்த போது “தமிழ்செல்வன்” தனது சொந்தப் பெயரையே இயக்க பெயராகவும் கொண்டு வாழத் தொடங்கினார். இந்த செய்தி அவரது வீரச்சாவு வரை யாருமே அறியாத ஒன்று தமிழ் பற்று கொண்ட இவரது தந்தை தனது மகனின் விடுதலைப் பற்றை பிறந்தவுடனேயே அறிந்திருப்பார் என்று நினைக்கிறேன். அன்றே அந்த புனிதப் பெயரை அவர் சூட்டிஇருந்தார். 
தமிழ்செல்வன் அண்ணாவின் உறுதியான போராட்ட வாழ்க்கையில் போராளிகளுக்கு இருக்க வேண்டிய அதுவும் முக்கியமாக தளபதி ஒருவனுக்கோ அல்லது பொறுப்பாளர் ஒருவருக்கோ இருக்க வேண்டிய முக்கிய பண்புகளில் ஒன்றான நேரம் தவறாமை என்பது அவரிடம் நிறையவே இருந்தது. இல்லை எனில் தனி மனிதனாக ஒரு பெரும் மரபு வழி இராணுவமாக வளர்ந்து முப்படைகளையும் வைத்திருந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒரு பெரிய பிரிவான அரசியல் துறையை பொறுப்பாளன் என்ற நிலையில் இருந்து வழிநடத்துவது என்பது சாத்தியமற்றதாகி விடும். 
கிட்டத்தட்ட அரசியல்துறைக்குள் உருவாக்கப்படுத்தப்பட்டிருந்த 54 கிளைப் பிரிவுகளை மட்டுமல்லாது. சர்வதேச அரசியல் மற்றும் உலகநாடுகளுடனான நட்புறவு என்று பரந்து விரிந்த பொறுப்பை மட்டுமல்லாது அரசியற்றுறை படையணியின் சிறப்புத் தளபதியாகவும் செயற்படுவது என்பது சாதாரண ஒரு போராளியால் முடியாத காரியம். இதை தனது சாவு வரை சீராக செய்து உறங்கி போனவர் தமிழ் செல்வன் அண்ணா. 
பலர் அவரைப் பற்றிய பத்திகளில் பலத்தை குறிப்பிட்டு இருந்தாலும் எனக்கு குறிப்பிட வேண்டிய ஒன்றாக படுவது அவரது நேரம் தவறாமை என்ற பண்பையே அதற்கு எடுத்துக்காட்டாக எனது நாட்குறிப்பேடு ஒரு செய்தியை தாங்கி நின்றது இப்படித்தான் அவர் எங்களுக்கு பல வாழ்வியலின் நியாங்களை விதைத்து சென்றார். அதனால் தான் அவர் தேசியத் தலைவருக்கு அருகில் இருக்க முடிந்தது அவரது நம்பிக்கைக்குரியவனாக விருப்பத்துக்கு உரியவனாக வாழ முடிந்தது இதனால் தான்  எங்கள் தேசியத்தலமை அவரை தனது தம்பியாக நெருக்கமாக வைத்திருந்ததாக குறிப்பிடுகிறார். 
“தமிழ் செல்வன்” நான் அவனை ஆழமாக அறிந்து, ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். இலட்சியப் போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக, அனைத்துலகோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல்மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவன் வளர்ந்திருந்தான். “
உண்மையில் தமிழ்செல்வன் அரசியல் துறையின் பொறுப்பாளனாக பொறுப்பெடுத்த காலத்தில் இருந்து அரசியலில் எமது மக்களுக்கான தேவைகளை இனங்கண்டு அவற்றினூடாக எமது போராட்டத்தின் தேவைகளை நிவர்த்தி செய்வதில் வெற்றி கண்டிருந்தார். மக்கள் மனங்களில் அப்பழுக்கற்ற மனிதனாக உறங்கி கிடந்தார். இதை அவரது வீரச்சாவு நிகழ்வில் எமது மக்களின் மனதில் இருந்து எழுந்த வலி அலைகள் எமக்கு உரைத்து நின்றன. 
ஊரெங்கும் தமிழ்செல்வன் என்ற நாமம் மட்டுமே ஒலித்து வலிகளால் எங்கள் விழிகள் நிரம்பியிருந்த நேரம் சமாதான புறாவாக சர்வதேசம் எங்கும் பறந்து கொண்டிருந்த புன்னகை மன்னனை திட்டமிட்டுச் சாகடித்த பெருமையில் துள்ளிக்குதித்து கொண்டிருந்தது அன்றைய சிங்களதேசம். அதை கண்டும் காணாது மௌனம் சாதித்தது இந்தியா வல்லாதிக்க சக்தி உட்பட்ட சர்வதேசம். ஆனால் எமது மக்கள் உறுதி கொண்டே இருந்தார்கள். இறுதி நிகழ்வுகள் கிளிநொச்சி மண்ணில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போது தாயகம் எங்கும் இருந்து குவிந்த சனத்தொகையை தாங்க முடியாது கிளிநொச்சி நகரம் நிறைந்து கிடந்தது. 
குழந்தைகள் தொடக்கம் வயதானவர்கள் வரை தமிழீழ நிழலரசின் நிர்வாக நகராக இயங்கிய கிளிநொச்சியில் கூடி நின்றார்கள். நகரில் இருந்து  துயிலும் இல்லம் வரை இருந்த 2-3 கிலோமீட்டர் தூரம் மக்களின் இறுதி வணக்கத்துக்கான நகர்வால் நிறைந்து கிடந்தது. எமக்காக வாழ்ந்த புனிதனை இறுதியாக வழியனுப்பிவிட தமிழீழம் அழுதபடி காத்திருந்தது. அப்போது மீண்டும் மீண்டும் வானில் வந்து வட்டமிட்டுக் கொண்டிருந்த மிக் மற்றும் கிபிர் விமானங்களின் அச்சுறுத்தலால் அன்று தமிழீழத்தை ஒன்றுமே செய்ய முடியவில்லை. நீ மிரட்டும் வரை மிரட்டு வருவதை பார்ப்போம் என்று தமிழீழம் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் நினைவுகளில் நிறைந்து நின்றது. 
நினைவோடு எழுதியது : இ.இ.கவிமகன்நாள் : 02.11.2020

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment