இன்றைய நிகழ்வில் அன்றைய நிகழ்வு

0 0
Read Time:22 Minute, 14 Second


சிறிலங்காவின் ஊவாமாகாணத்தில் உள்ள புத்தள எனும் கிராமத்தில் நடைபெற்ற கம் உதாவா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சிறிலங்க ஜனாதிபதி பிரேமதாஸ அங்கேயே தனது 68 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு. மோதிலால் நேரு அங்கு சென்று திரு. பிரேமதாஸவுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

அத்துடன் 28.06.1992 திகதி சண்டே ரைம்ஸ் இதழில் சிறிலங்கா ஜனாதிபதி பிரமதாஸவை பற்றி திரு. மோதிலால் நேரு சில கருத்துக்களை தெரிவித்தார்.இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் குமார் பொன்னம்பலத்திற்கும் மோதிலால் நேருவுக்கும் இடையில் சில கருத்து முரண்பாடுகள் தோன்றின.28.07.1992 சண்டே ரைம்ஸ் இதழில் இருவரது முரண்பாடான கருத்துக்களையும் வெளியே சொல்லக் கூடியவற்றை) ஒரே பக்கத்தில் பிரசுரித்திருந்தது.இதன் மொழியாக்கத்தை நானும் படித்தேன்.
திரு. பிரேமதாஸ ஏழைமக்களின் இரட்சகர் என்ற வகையிலும் சமாதானத்திற்குமான தூதுவர் என்ற வகையுமாக திரு.மோதிலால் நேரு கருத்து அமைந்திருந்தன.அத்துடன் அவரால் எதிர்பார்க்கபடும் சமாதானத்திற்கான சொர்க்க புரியில் பிரேமதாஸாவும் தானும் கை கோர்த்து நிற்பது போன்ற உணர்வுடன் அவர் வாழ்த்துத் தெரிவித்திருப்பதை உணர முடிந்தது.எனது மக்களின் சார்பாக அவரது பிறந்த தினத்திற்கு வாழ்த்துக் கூறுவதன் மூலம் இத் தீவில் வாழும் சிறுபான்மை மக்கள் அமைதியை நிலைநாட்டும் அவரது முயற்சிற்குப் பின்பலமாக நிற்கின்றார்கள் என்பதைப் புழப்படுதத்த விழைந்தேன் என்று திரு மோதிலால் நேரு குறிப்பிட்டு இருந்தார்.
திரு குமார் பொன்னம்பலத்தின் கருத்துக்கள் எதிர்மாறனவையாக இருந்தன. நேருவின் அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்களுக்கு ஆதாரமானவற்றைப் பட்டியலிட்டுக் காட்ட முடியுமா?என்றும்
இது காலவரையில் எரியும் பிரச்சனை
குறித்த ஐனாதிபதி ஈடுபாடு பற்றி தனது ஆழ்ந்த அவதானிப்பை திரு மோதிலால் நேரு ஏன் பகிரங்கப்படுத்தவில்லை. என்று கேட்டு இருந்தார்.அத்துடன் பிரேமதாஸா பதவிக்கு வந்த பின்னர் சிறுபான்மையினர் மத்தியில் பாதுகாப்பு உணர்வொன்று முளைத்துவிடத் தொடங்கியது என்ற திரு. மோதிலால் நேருவின் கூற்றை திரு.மோதிலால் நேரு கொழுப்பு தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மூன்றாமவர்களின் சார்பில் பேச முற்படுகின்றாரா? எனக் கேட்க்க வேண்டியுள்ளது.என்று விமர்சித்து இருந்தார் அவர்.திரு பிரேமதாஸா ஒரு சிங்கள பௌத்தராகவேதான் இனங்கண்டதாக குறிப்பிட்டார்.தனது கருத்தை வலியுறுத்தும் வகையில் தினசரி தொலைக்காட்சிச் செய்திகளை அவதானிக்கும் எவரும் நான் என்ன கூறுகின்றேன் என்பதை புரிந்துகொள்ள முடியும். என்று கூறினார்.
இன்னமும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருக்கும் திரு.பொன்னம்பலத்தின் மேற்படி கூற்றும் (தினசரி தொலைக்காட்சிச் செய்தி பற்றியது) திரு மோதிலால் நேருவின் கருத்துக்களும் தமிழீழத்தின் யதார்த்த நிலையை இருவரும் முழுமையாக உணராத தன்மையைத் தெளிவுபடுத்தியது.
இதில் கவனத்திற்குரிய விடயம் என்னவென்றால் இவ்வகையான காரணம் காட்டுதல்தான் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸை திரு.மோதிலால் நேருவை வெளியேற்றும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகுகின்றது.என்ற திரு குமாரர் பொன்னம்பலத்தின் கூற்றுத்தான்.
கடந்த வெளிச்சம் இதழில் பிரசுரமாகியிருந்த இதே தலைப்பிலான எனது கட்டுரையில் 1983 ஆம் ஆண்டில் முற்பகுதியில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் சமயத்தில் நடைபெற்ற சில சம்பவங்களைத் குறிப்பிட்டிருந்தேன்.தமிழ் காங்கிரஸ் கட்சியின் இரட்டையர்களான திரு.குமார் பொன்னம்பலத்தையும் திரு மோதிலால் நேருவையும் சீலன், பண்டிதர், ரகு, நான், ஆகிய நால்வரும் சென்று இத்தேர்தலிலிருந்து உங்கள் கட்சி விலகிக் கொள்ளும்படி கேட்டிருந்தோம்.என்று குறிப்பிட்டு இருந்தேன்.எந்த நேரத்தில் இதை நான் எழுதினேனோ அந்த அச்சு மை காய்வதற்குள் இந்த இரட்டையர்களுக்குள் இப்பிடி ஒரு நிலை மீண்டும் 1983 ஆம் ஆண்டு நாங்கள் இந்த இருவரையும் சந்தித்த காட்சி நினைவுக்கு வந்தது.
ரகுவின் மாமாதான் மோதிலால் நேரு (தாயின் சகோதரர்) ஆகவே இந்தச் சந்திப்புக்காக பெரிய சிரமமெதும் ஏதும் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கவில்லை.சந்திப்பு நடந்த இடம் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைமை காரியாலத்துடன் இணைந்ததாக இருந்த திரு.பொன்னம்மாபலத்தின் இல்லமாகும் இந்த இல்லத்தில் இருந்து கால் மையில் தூரத்திலேயே பொதுநூலகம் எரிப்பின் மூலம் புகழ்பெற்ற யாழ் காவல் நிலையம் இருந்தது. சிறிலங்கா காவல்படையினர் பயமின்றி இன்றி நடமாடும் பகுதி இது.இதற்குள்ளேயே எமது சந்திப்பு நிகழ்ந்தது.எமது தேசிய வாகனமான மிதிவண்டிகளிலேயே நாம் சென்றிருந்தோம்.சில நாட்களுக்கு முன்னர்தான் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த மூவர்(இரு தலைமை வேட்பாளர்கள் ஒரு அமைப்பாளர்)எம்மால் சுட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர்.அதனாலோ என்னவோ மிகுந்த பக்தியும் வரவேற்கப்பட்டோம்.
ஆசனங்களில் அமருமாறு திரு.குமார் பொன்னம்பலம் கேட்டுக்கொண்டார்.நட்பு கலந்த சிரிப்புடன் அமர்ந்தோம்.அவர்கள் தரப்பில் திரு.குமார் பொன்னம்பலமும் திரு.மோதிலால் நேருவும் மட்டுமே எம்முடன் பேசுவதற்கு இருந்தனர்.பால் தேனீர் வந்தது அதைக் குடிக்குமாறு குமார் பொன்னம்பலம் வேண்டிக்கொண்டார். அந்த காலத்தில் நாம் பொதுவானத் தேனீர் அருந்துவதில்லை (கட்டுப்பாடு என்று எதுவும் இல்லை ) ஆதலால் நாங்கள் ரீ குடிக்கிறதில்லை என்று நட்புடன் மறுத்தோம்.அவ்வளவுதான் குமார் பொன்னம்பலத்தின் முகம் மாறிற்று.என்னட்டை ரீ குடிக்கப் பயப்பீடுறீங்களோ? வேணுமெண்டா நான் ஒண்டைக் குடிச்சுக் காட்டுறன் என்றவாறு ஒரு கோப்பை தேனீரை எடுத்துக் குடித்தார். இதென்னடா வம்பாய்ப் போச்சு என்ற நினைப்புடன் அப்பிடியேல்லாம் ஒன்டுமில்ல நாங்கள் வழமையாகக் குடிக்கிறேல ஆனா நீங்கள் இப்படிச் சொல்றதால குடிக்கிறம் என்றவாறே பண்டிதர் முதல் கோப்பையை எடுத்தார்.அதை தொடர்ந்து நாமும் எடுத்துப் பருகினோம்.(நீண்ட நாட்களின் பின் நாம் குடித்த தேனீர் அது) உரையாடல் தொடர்ந்தது.சீலன் பேச்சை ஆரம்பித்தான்.நாங்கள் ஏன் இந்த தேர்தலை பகிஷ்கரிக்கச் சொல்கிறோம் என்ற காரணங்களை அடுக்கடுக்காக -தெளிவாக எடுத்துச் சொன்னான். அவர்களது உலகத்திற்கும் எமது உலகத்திற்கு நீண்ட தூரம் இடைவெளி இருந்தாலும் பொறுமையாக கேட்டுக்கொண்டு இருந்தனர் இருவரும்.
அந்தச் சந்திப்பிலிருந்து திரு. குமார் பொன்னம்பலம் சரளமாகத் தமிழில் பேசுவதற்கு சிரமப்படுகின்றார் என்பதை புரிந்துகொண்டோம்-அவர் கற்ற கல்வி வாழ்ந்த சூழல் ஆங்கிலத்தை முழுமையாகக் கொண்டதால் அந்த நிலை ஏற்பட்டது என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. சீலன் குமார்பொன்னம்பலத்துடன் கதைத்துக்கொண்டிருக்கும்போது மோதிலால் நேரு இடையிடையே பண்டிதருடனும் ரகுவுடனும் கதைத்துக்கொண்டிருந்தார்.சீலன் சொல்வதை புரிந்து கொள்ள குமார் சிரமப்படுகின்றான் என்பதை நான் புரிந்துகொண்டேன்.அதை உறுதிப்படுத்துமாப்போல் கேளும் கேளும் என்று அடிக்கடி நேருவிடம் சொல்லிக்கொண்டிருந்தார் குமார்.சொல்வதை விளங்காத நிலையில்தான் எல்லாவற்றிற்கும் சம்மதித்து விடுவேனா? என்ன வில்லங்கம் வருமோ என்ற பயத்தை விளங்கிக்கொள்ள முடிந்தது. இறுதியாக நீங்கள் எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறம் அந்த நம்பிக்கையோடதான் வந்தனாங்கள் என்று கூறினார் சீலன்.குமாரும் நேருவும் தங்களுடைய உலகத்திற்கு வந்தனர்.
நீங்கள் சொல்லுறது சரி எங்களுக்கு உள்ள பிரச்சினை கூட்டணிதான்.நாங்கள் இந்த எலகஷனில் இருந்து வாபஸ் வாங்கினால் அவங்கள்தானே எல்லா இடத்துக்கும் வருவாங்கள்? அவங்கள் கள்ளங்கள் போன மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தல்லையும் ஏமாத்தி பேப்பட்டம் கட்டிப்போட்டாங்கள். இப்ப பப்ளிக் லைபிறறியேல்லாம் எரிஞ்சு கலவரம் வந்த நிலையில நாங்களும் அவங்களும் சந்திச்சத சாட்டா வைச்சு கொங்கிறஸ் எலகஷனில இருந்து வாபஸ் வாங்கீட்டுது என்று கதையை கட்டிவிட்டாங்கள்.நாங்கள் எங்கட நிலையை விளங்கப்படுத்த அவகாசம் இருக்கேல கடைசில முழுச்சீற்றையும் அவங்கள் எடுத்துப்போட்டாங்கள்.அதுதான் பிரச்சனை
இப்பவும் அந்த மாதிரிதான் நடக்குதுபோல இருக்குது.நாங்கள் வாபஸ் வாங்கிவுடன அவங்கள் எல்லா சீற்றையும் பிடிக்கப்போறாங்கள்?
அதுதான் எங்களுக்கு பிரச்சனை குமாருடனான ஆங்கில உரையாடலுக்குப் பின் எங்களிடம் இவ்வாறு கேட்டார் நேரு.அதற்கு நாம் குறிப்பாக( சீலன் பண்டிதர் ) கூட்டணிக்காறரை சிம்மாசனத்தில் ஏத்திறதுக்காக நாங்கள் இந்த பகிஷ்கரிப்பு கோரிக்கையை முன்வையில்ல சிறீலங்கா அரசு நிர்வாகத்திற்கான சகல தேர்தல்களையும் நாங்கள் நிரகாரிக் கேக்றம் சொல்லப்போன கூட்டணியோட மோதிர பலப்பரீட்சைதான் இது. இதில ஆற்ற பக்கம் நிக்க வேணும் எண்டதை நீங்கள் தீர்மானியுங்கோ என்றோம் இதை கேட்டதும் (கூட்டணியுடன் மோதுவது) அவர்கள் இருவருக்கும் மகிழ்ச்சி தாளவில்லை என்றாலும் அவர்களுக்கு ஒரு சந்தேகம் எல்லாரும் எலஷ்சனில வாபஸ் வாங்கினாலும் கூட்டணி தனியப் போட்டியிடும் எலக் ஷனும் நடக்கும். அப்ப இந்த எலக் ஷன உங்களால் நிப்பாட்ட முடியுமோ? முடியுமெண்டா கைபோடுங்கோ என்று கையை நீட்டினார் மோதிலால் நேரு உடனே அவர் நீட்டும் கைக்கு எங்களில் ஒருவர் கைபோட்டுவிட்டால் என்று….?என்று கருதிய சீலன் எங்கள்பக்கமாக ஒரு கையால் தடுத்தவறே பகிஷ்கரியுங்கோ எண்ட கோரிக்கையை நாங்கள் உங்களிட்ட வைக்கிறம் எங்களை மதிச்சு அது ஏற்கிறதும் ஏற்காமல் விடுறதும் உங்களைப் பொறுத்தது.எங்களை பொறுத்தவரை இந்த எலக் ஷனை நிப்பாட்டுறதுக்கு எங்களால ஆன ஆகக் கூடிய முயற்சிகளை மேற்கொள்ளுவம் என்றான். இதற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை அவர்களுக்கு கொஞ்ச நேரம் சிந்தித்த பின் தேர்தலில் இருந்து வாபஸ் வாங்குவதாகத் தீர்மானித்தனர் இருவரும். அது பற்றி குமார் சொன்னார் சரி தம்பிமார் காட்டிலையும் மேட்டிலயும் கஷ்டப்படுகிற நீங்கள் கேக்கிறபோது நாங்கள் சம்மதிக்காமல் இருக்க முடியாது உங்களுக்கா நாங்கள் இந்த எலக் ஷனில் நிக்காமல் வாபஸ் வாங்குறம் ஆனால் நீங்கள் எங்களுக்கு ஒண்டு செய்யவேணும் எலக் ஷனுக்குப் பிறகு.உங்களுடைய சிம்பல்(இலச்சினை)போட்டு நீங்கள் மக்களுக்கு வெளியிடுற நோட்டீசில எங்களுடைய பகிஷ்கரிப்பு கோரிக்கையை ஏற்றுக் தேர்தலில் இருந்து வாபஸ் வாங்கிய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கும் எமது நன்றிகள் எண்டு சொல்லீட்டு சீலன் முகத்தைப் பார்த்தார். சீலன் மெல்லிய புன்னகையுடன் அப்பிடி நாங்கள் அடிச்சுவிடமாட்டோம்.
எங்களை மதிக்கிறதா இருந்தா வாபஸ் வாங்குங்கோ என்று திட்டவட்டமாகக் கூறினான்.அவர்கள் இருவருக்கும் யோசனை என்னடா இது ஒரு வழியிலும் இவங்களை இழுக்க முடியாமல்கிடக்குதே சரி தீர்மானித்தாயிற்று தேர்தலில் இருந்து வாபஸ் வாங்குவதாக.
இனி அடுத்தகட்டம் ஏனைய மாவட்டங்களிலும் இந்த முடிவை அறிவிப்பது எப்பிடியென்று இண்டைக்கே அறிவியுங்கோ என்றான் சீலன் அதற்கும் சம்மதித்தனர்.பத்திரிகைக்கும் அறிக்கை விடுவதாக கூறினார் எல்லாம் சுபம்.
இதற்கு அடுத்த கட்டம் நீங்கள் வாபஸ் வங்குறதெண்ட முடிவோட தேர்தலை பகிஷ்கரிக்க வேணும் எண்டு ஒரு பத்தாயிரம் நோட்டிஸ் அடிச்சு குடுத்தா என்ன ?ஆலோசனை மாதிரியே வேண்டுகோள் விடுத்தான் சீலன்.முழுக்க நனைந்தாயிற்றாம் இனி முக்காடு எதற்கு ?அதற்கு சம்மதித்தனர் இருவரும் ஆனால் அவர்களுக்கு ஒரு சங்கடம்.சங்கடமென்ன அவர்களை பொறுத்தவரை அதுதான் உலகமகா பிரச்சனை அடித்த நோட்டீஸை கொடுக்க ஆள் வேண்டுமே குமாரும் நேருவும்தான் அங்கு சகலதுமே யார் யாரோ கைக் காலைக் பிடித்து வேட்பாளராக நிக்க சம்மதம் வாங்கியாயிற்று அவர்களைபோய் நோட்டீஸ் கொடு என்றால் கொடுப்பார்களா?ஆனால் அதை எங்களிடம் எப்பிடிச் சொல்வது?நெளிந்தார்கள்.
இருவரும் சரி தம்பி இந்த அடிச்ச நோட்டீசை என்று இழுத்தார் குமார்.எங்களுக்கு விசயம் விளங்கினாலும் விளங்கியதுமாதிரி காட்டிக்கொள்ளவில்லை அடிச்ச நோட்டீசை குடுக்குறதென்ன பிரச்சனையோ?நோட்டீஸ் குடுக்கேக்கை கூட்டணிக்காறங்கள் தலையிட்டா எங்களிட்டச் சொல்லுங்கோவன் நாங்கள் பாப்பம் என்றான் சீலன் எதையுமே விட்டுக்கொடுக்கவில்லை ஒவ்வொரு வலையாக வீச வீச அதை லாவகமாக சுழற்றிக் கொண்டே இருந்தான் சீலன் எதிலும் சிக்கவில்லை இந்த மீன்.இந்த அரசியல் அவர்களுக்கு புதிது எல்லோரையும் கவர்ந்தீழுக்கும் ஆற்றல் சீலனுக்கு உண்டு என்பதை குமார் ஒப்புக்கொண்டார்.
உமக்கு சரியான இரும்பு இதயம் எதுக்குமே வளைஞ்சு குடுக்கமாட்டீர் நட்புணர்வுடன் பாரட்டினார் ஒன்று மட்டும் நிச்சயம் நாங்கள் அந்த வாசலை மிதிக்கும் வரை அவர்கள் புலிகள் பற்றி என்ன கணிப்பைக் கொண்டிருந்தார்களோஅது நாங்கள் போய்வரும்போது அடியோடு மாறிவிட்டது.ஒரு மனநிறைவுடன் நாமும் அங்கிருந்து புறப்பட்டோம் சீலன் போகும்போது அவர்களிடம் கேட்டான் நோட்டீஸ் எப்ப அடிக்கிறீங்கள் அதற்கு நாளைக்கே என்று பதில்கிடைத்தது.சரி அது சம்மந்தமா இவர் அடிக்கடி வந்துபார்ப்பார் என்று என்னைக் காட்டினான்.
அடுத்தநாள் அங்கு சென்றேன் நோட்டீஸ் அடிச்சாச்சா?இல்லை
நாளைக்கு
அடுத்த நாளும் சென்றேன்-கொஞ்சம் சுணங்கும் நாளைக்கு முடிஞ்சிடும். அடிக்கடி நான்போய் கேட்பதால் அதை நாங்கள் விநியோகிக்க ஆர்வம் கொண்டுள்ளோம் என்று கருதிக்கொண்டார்கள் அடுத்த நாள் காலை மீண்டும் அங்கு சென்றேன் பின்னேரம் 4:00 மணிக்கு முடிஞ்சிடும் அப்ப வாங்கவன்.நோட்டீஸ் சம்மந்தமான ஒவ்வொரு முன்னெற்றத்தையும் என்னிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட சீலன் பின்னேரம் 4:00 மணிக்கு முடிஞ்சிடும் என்ற பதிலைக் கேட்டதும் சொன்னான் இனி அங்கை போகாதை.எப்படியோ அடிச்ச நோட்டீசை அவை குடுக்கத் தானை வேணும் இந்த நாட்களில் பின் ஒரு செய்தி கிடைத்தது.வல்வெட்டிதுறையில எலக் ஷனை பகிஷ்கரிக்க சொல்லிக் கொங்கிறஸ் ஒரு நோட்டீஸ் குடுக்குது.குமார்தான் வான் ஓடுகின்றார்:மோதிலால் நேரு நோட்டீஸ் கொடுக்கின்றார்.
மொழிபெயர்க்கப்ட்ட சண்டே ரைம்ஸ் செய்தியை மீண்டும் படிக்கிறேன் இவ்வகையான காரணம் காட்டுதல்கள்தான் அகில இலங்கை தமிழ் காங்கிரசை திரு.நேருவை வெளியேற்றும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்குறது.
ஒரு கையால் வாகனத்தை சொலுத்தியபடி மறுகையால் நோட்டீஸ் கொடுக்கும் காட்சி என் மனதில் தெரிகிறது.

வெளிச்சம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment