சுவிற்சர்லாந்தில் 31.05.21 முதல் மேலும் தளர்வுகள்?

0 0
Read Time:9 Minute, 17 Second

இன்னும் இரண்டு கிழமைகளில் நிலவும் நோய்த்தொற்றுச் சூழலிற்கு அமைய புதிய தளர்வுகளை சுவிற்சர்லாந்து அறிவிக்கலாம் என சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே 12. 05. 21 ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்தார்.

  1. 21 அறிவிக்கப்படக்கூடிய புதிய தளர்வுகள் சுருக்கமாக:

மீண்டும் திறக்கப்படலாம்

உணவகங்கள் மற்றும் மதுநிலையங்கள் உள்ளரங்கில் (கட்டடத்திற்குள்) விருந்தினர்களை அனுமதிக்கலாம். சுடுநீர்த்தடாகம் மற்றும் நலவாழ்வுக் குளியல் நிலையம் என்பன திறக்கப்படலாம்

பொது நிகழ்வுகள்

இதுவரை 50 ஆட்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி வரம்பு 100ஆக உயர்த்தப்படலாம்
வெளியரங்கில் 100 ஆட்கள் பொது நிகழ்விற்கு ஒன்றுகூடலாம் எனும் வரம்பு 300ஆக உயர்த்தப்படலாம்.

உயர்பாடசாலைகள்

நேரடியாக நடைபெறும் வகுப்புக்களில் ஆகக்கூடியது 50 ஆட்கள் எனும் தடை நீக்கப்படலாம். இதற்கு உரிய காப்பமைவு வரையப்படவேண்டும் என்பது கட்டுநிலை (நிபந்தனை) ஆகும்.

வீடுகளில் இருந்தபடிபணி

வீட்டில் இருந்தபடி பணி ஆற்ற வாய்ப்பு அமையும் எனின் அதனைத் தொடர்வது என்பது இதுவரை கட்டாயமாக இருந்தது. ஆனால் இது இப்போது வெறும் முன்மொழிவாகின்றது. இதன்படி பணியாளர்கள் நேரில் பணி ஆற்றலாம். கிழமைக்கு ஒரு நோய்த்தொற்றுப் பரிசோதனை செய்துகொண்டால்போதும்.

குறுநேரப்பணி

நிறுவனங்கள் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பாது அவர்களைத் தொடர்ந்து வேலை ஒப்பந்தத்தில் வைத்துக்கொண்டு குறைந்தநேரப்பணி அளித்து 80வீத ஊதியமும் அல்லது 80 வீத ஊதியத்துடன் விடுப்பளித்து வருகின்றது

இதற்கு சுவிற்சர்லாந்து நடுவன் அரசு மானிய ஈடு வழங்கி வருகின்றது. இதன் உதவிக்காலத்தை 24 மாதங்களாக உயர்த்துமாறு சுவிற்சர்லாந்துப் பாராளுமன்றமும் பொருளாதார-, கல்வி மற்றும் ஆய்வுத்திணைக்கழகங்கள் வேண்டியிருந்தன. சுவிஸ் அரசு இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.இதன்படி மகுடநுண்ணிப் பெருந்தொற்று (கோவிட் 19) தொடங்கிய காலம் முதல் ஆகக்கூடியது 24 மாதங்களுக்கு தொழிலகங்களால் குறுநேரப்பணியில் ஈடுபடுத்தப்படும் பணியாளர்களுக்கு ஈடு வழங்க சுவிற்றசர்லாந்து அரசு முடிவெடுத்துள்ளது

தொடரும் நடைமுறைகள்

அனைவரும் தொடர்ந்து நோய்த்தொற்று நலவாழ்வு முறைமைகளைக் கடைப்பிடிப்பதுடன், முகவுறை அணியவேண்டும், உரிய இடைவெளி பேணவேண்டும்.

இரண்டு கிழமைகளில் இறுதி முடிவு

இன்றைய முன்னறிவிப்புக்கள் மாநில அரசுகளுக்கும், பாராளுமன்றக் குழுக்களுக்கும் சமூகப்பங்காளர்களான நிறுவனங்களுக்கும் கலந்தறிந்து அறிவுரை பெறுவதற்கு அனுப்பி வைக்கப்படுகின்றது

உணவகங்கள்

நோய்த்தொற்றுச்சூழல் கட்டுக்குள் இருக்குமானால் 31.05.21 திங்கள் முதல் உணவகங்களின் உள்ளிடங்களிலும் விருந்தினர்கள் இருக்க அனுமதிக்கப்படுவர். ஒரு மேசைக்கு ஆகக்கூடியது 4வர் என அனுமதி அளிக்கப்படும். விருந்தினர்களது தரவுகள் பதியப்பட வேண்டும். புதிய வரையறையாக 100 ஆட்கள் வரை உள்ளரங்கில் இருக்கையில் இருக்கலாம்.

நிகழ்வுகள்

பொதுநிகழ்வுகளில் பங்கெடுக்கும் ஆட்களின் தொகை கூட்டப்படுகின்றது. இதன் படி இதுவரை 50 ஆட்களுக்கு அளிக்கப்பட்ட ஒப்புதல் புதிதாக 100ஆக உயர்த்தப்படுகின்றது.

இது தொழில்சாராத விளையாட்டுப் பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கும் செல்லுபடியாகும். இதுவரை வெளியில் 15 ஆட்கள் இணைந்து விளையாட்டில் ஈடுபடலாம் என இருந்தது. புதிய அறிவிப்பின்படி இது 30ஆக உயர்த்தப்படலாம்.

பண்பாடு

பண்பாட்டு செயற்பாடுகளில் குழுநிலை ஆட்கள் தொகை 30ஆக உயர்த்தப்படுகின்றது. ஒத்திகை மற்றும் மேடை நிகழ்வு என்பவற்றில் பங்கெடுக்கும் ஆட்கள் தொகை உள்ளரங்கிலும் வெளியிரங்கிலும் 50 என உயர்த்தப்படும். ஊதுவாத்தியக் கருவிகளுக்கு இதுவரை 25 சதுர மீற்றருக்கு இடைவெளி அறிவிக்கப்பட்டது அது 10 சதுரமீற்ரர் ஆகக் குறைக்கப்படுகின்றது. வெளியரங்கில் மட்டும் குழுவிசை மீண்டும் அனுமதிக்கப்படும்.

விளையாட்டு

அணிகளுக்கிடையிலான தேசிய மற்றும் உள்ளூர் சுற்றுப்போட்டிகளில் குழுவின் அளவு 50 ஆக உயர்த்தப்படும். இவ்வகை விளையாட்டுப் போட்டிகள் வெளியரங்கில் மட்டும் அனுமதிக்கப்படும். ஆரவாரமற்ற அமைதியான விளையாட்டுக்கள் உள்ளரங்களில் 15 ஆட்கள் ஒருவருக்கு 10 சதுர மீற்ரர் எனும் அளவில் அனுமதிக்கப்படுவர்.

தனிமைப்படுத்தல்

நோயில் இருந்து நலமடைந்தோர், தடுப்பூசி இட்டுக்கொண்டவர்கள் பயணத்தடை மற்றும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவர். எவ்வகை தடுப்பூசிக்கு எவ்வகை விதிவிலக்குகள் அளிக்கப்படும் என்பது இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. 16 வயதிற்கு உட்பட்டோர் அனைவருக்கும் பயணக்கட்டுப்பாட்டு தனிமைப்படுத்தல் விதி முழுமையாக நீக்கப்படும்.

நீச்சல்

சுடுநீர்த்தடாகம் மற்றும் நலன்பேணும் குளியல்நிலையங்கள் என்பன தொற்றுத் தொகை குறைவதற்கு அமையவும், மருத்துவமனைகளின் பழுக்குறைவிற்கு, உற்றுழி  (தீவிரிசிகிச்சை) படுக்கைகள் பயன்பாட்டுக் குறைவிற்கு அமையவும் ஆயப்பட்டு முடிவெடுக்கப்படும். முகவுறை அற்று நீச்சலில் ஈடுபடலாம், ஆனால் போதியளவு இடைவெளி பேணப்படவேண்டும். ஒருவருக்கு 15 சதுரமீற்றர் அளவு கணக்கிடப்பட வேண்டும்.

மூன்றுகட்ட நிலைகள்

பாதுகாப்புக்கட்டம்

இன்றைய அறிவிப்பின்படி சுவிற்சர்லாந்து அரசு தனது நோய்த்தடுப்பு மற்றும் முடக்கத் தளர்வு மூலோபாயமாக மூன்றுகட்ட நிலைகளை தேர்வு செய்துள்ளது.

இதன்படி முதற்கட்டம் இம்மாத நிறைவுக்குள் தடுப்பூசி இட்டுக்கொள்ளத் தயாராக உள்ள அனைவருக்கும் ஊசி இடுவது, இக்கட்டத்தை பாதுகாப்பு கட்டமாக சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.

நிலையானகட்டம்

பாதுகாப்பு கட்டத்திற்கு அடுத்து நிலையான கட்டமாக ஊசி இடப்பட்ட பின்னர் முடக்கத் தளர்வுகளை மெல்ல நீக்கி திறக்கப்பட படிநிலைநோக்கி நகர்வது ஆகும். இன்றைய கலந்தாய்விற்குப்பின் 31.05.21 முதல் இப்படி நிலைநோக்கி சுவிஸ் நகரவுள்ளது.

இயல்புநிலை திரும்புதல்

தடுப்பூசியிட விரும்புவோர் அனைவருக்கும் தடுப்பூசி இட்ட பின்னர், நோய்ப் பெருந் தொற்று சுழல் கட்டுக்குள் வந்தவுடன், மகுடநுண்ணி தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் நீக்கக்கூடிய சூழல் அமையும்போது அதனை இயல்புநிலை திரும்பும் நிலையாக சுவிஸ் அரசு கருதுகின்றது. இதனையே சுவிற்சர்லாந்து அரசு தனது அடைவு இலக்காக தீர்மானித்துள்ளது.

தொகுப்பு: சிவமகிழி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment