“ஆழிப்பேரலை “அனுபவப்பகிர்வு*

0 0
Read Time:14 Minute, 56 Second

வழமை போலவே நிதர்சனப்பிரிவின் மாதாந்த ஒளிவீச்சுக்கான படப்பிடிப்புவேலைகளிலற் போராளிகள் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

தமிழீழ நுண்கலைப்பிரிவு நுண்கலைக்கல்லூரி மாணவர்களின் முத்தமிழ்க் கலை நிகழ்வுகளை ஒளிவீச்சுக்குக்குக் கொடுப்பது வழமை.அந்தவகையில் ஆண்டு விழாவுக்காக அரங்கேற்றப்பட்ட ஆடல் நிகழ்வு ஒன்றினைப் படப்பிடிப்புச்செய்வதற்குத் தீர்மானித்தோம்.  அந்தநிகழ்வு எல்லோருக்கும் மிகவும் பிடித்திருந்தது.நான் எழுதி இசையமைத்த அண்ணையைப்பற்றிய (தமிழீழத்தேசியத்தலைவரைப்பற்றிய)பாடலுக்கு  சாம்பவியக்கா சிறப்பான நடன அமைப்பைச்செய்திருந்தார். எனக்குள் ஒரு விருப்பம் இருந்தது.அதாவது தமிழீழத்தின் வளங்களையும் இணைத்து அந்த நடனத்தைக் காட்சிப்படுத்த வேண்டும் என்று.அதிகாலைச் சூரியோதயத்தோடான கடற்கரை,மஞ்சள்க்கதிர்குலுங்கும் வயல்கள்,பனைமரக்கூட்டம்,தென்னந்தோப்பு,குளக்கரை இப்படியான இடங்களில் படப்பிடிப்பை மேற்கொள்ள எண்ணினேன். படப்பிடிப்புக்குழுவோடு கலந்துரையாடி அவ்வாறே முடிவுசெய்யப்பட்டது. அதன்படி26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் எமது முதல் ஒளிப்பதிவைக் கடற்கரையில் மேற்கொள்ளத்திட்டமிட்டோம். நிதர்சனமகளிர்பிரிவுப்போராளிகள்  25ம் திகதி கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டு முள்ளியவளைக்குவந்து தங்கினர். 26 அன்று அதிகாலை  செம்மலைக்கடற்கரையைநோக்கி நாம் புறப்பட்டோம்.
மாணவி ஜனாவை ஆடலுக்கேற்றவாறு ஒப்பனைசெய்திருந்தார் சாம்பவியக்கா. ஹையெஸ் ரக வாகனத்தில்  ஏறும்போதே மழை தூறத்தொடங்கிற்று.விடிகாலை எமது படப்பிடிப்புக்கு ஏற்றதாயிருக்குமா என்ற கேள்வி எல்லோர்மனதிலும் எழுந்தது.ஆனாலும் பயணம் தொடர்ந்தது. மழையோ இரைத்துப்பெய்தது. வாகனம் செம்மலையை அணமித்தபோது மழைவெகுவாகக்குறைந்திருந்தாலும் வானம் மப்பும்மந்தாரமுமாய் கோபத்தில் முகத்தைத்தூக்கிவைத்துக்கொள்ளும் குழந்தையைப்போலவே இருந்தது. நேரம் 7மணியைக்கடந்திருந்தது.எங்கள் வீட்டடியில் வாகனத்தை நிறுத்தி அம்மாவிடம் காய்கறிப்பையைக்கொடுத்து “அம்மா பத்துப்பேருக்கு மத்தியானச்சாப்பாடுசமையுங்கோ ,மச்சம் ஏதும் வாங்குங்கோ.நாங்கள் படப்பிடிப்புக்குக் கடக்கரைக்குப்போறம்” என்றேன்.” பிள்ளைகள் ரீ குடிச்சிட்டுப்போங்கோ ” என்ற அம்மாவிற்கு நேரம்போச்சம்மா பிறகு வாறம்” என்று பதிலளித்தபடி எல்லோரும் ஒன்றாக விடைபெற்றோம்.
நேரம் 7.30 ஐத்தாண்டியிருக்கும்.வாகனம் கோயில் வீதியால் வந்து கடற்கரையை நோக்கித்திரும்பி வீதியின் முடிவுவரை சென்று நின்றது.ஆனால் மழை தூறிக்கொண்டிருந்ததால் என்ன செய்வது எனச் சில நிமிடங்கள் யோசித்தோம். 100 மீற்றர் தூரத்தில் கடல்.கடலின் நிறமோ நான் வாழ்க்கையில் காணாத ஒரு கடுஞ்சாம்பல் வண்ணத்தில் காணப்பட்டது.வானம் அதைவிடக்கடுமையாய்.. சூரியன் தெரிவற்கு வாய்ப்பேயில்லை. நாங்கள் நினைத்த  காட்சிக்கு நேர்மாறான நிலைமை. சரி …வந்திட்டம் கடலைப்பின்னணியாக வைத்து படப்பிடிப்பைச் செய்வோம் எனத்தீர்மானித்தோம்.பூமாக்கா ,மதி,அகல்விழி இன்னும் சிலருடன் நானும் விரைந்து பொருட்களை இறக்கி கரை மணலில் ஒழுங்குபடுத்தினோம்.நேரம் 8மணி இருக்கும் மின்பிறப்பாக்கியைக் கொஞ்சம் பின்னுக்கிருந்த பள்ளமொன்றில் வைத்து இயக்கினார் பூமாக்கா. ஏனையோர் ஒளிப்பதிவுக்கருவிகளை நிலைப்படுத்தி சிறிய மொணிற்றர் (காட்சிப்பெட்டி)யையும் வைத்து காட்சியைச்சிபார்த்தனர். மாணவி ஜனா கடலுக்கு முன்னால் நின்றபடி  எம்மைப்பார்த்தவாறே ஆடத்தொடங்கினாள்.ஏற்கனவே ஒலிப்பதிவு செய்யப்பட்ட “தமிழே பொழிமழையாய்” என்ற பாடலுக்கு மிக அழகாக ஆடினாள் சிறுமி ஜனா.சரி ஒருமுறை எடுத்துப்பார்த்தாயிற்று.இப்போ 2ம் முறை…திடீரென மின்பிறப்பாக்கி நின்றுவிட்டது.மழையும் சற்று உரக்கத்தொடங்க சாம்பவியக்கா மாணவியை வாகனத்திற்குக் கூட்டிக்கொண்டு சென்றார்.பூமாக்கா ,மின்பிறப்பாக்கியைச்சரிபார்க்க நான் ,மதி ,அகல் எல்லோரும் அவவுக்கு உதவிக்கொண்டிருந்தோம்.”புதிய ஜெனரேட்டர் ,ஏன் நிண்டதோ தெரியேல்ல “என்று பூமாக்காசொல்ல, சாம்பவியக்கா பெரிய குரலில் திடீரெனக்கத்தினா”அக்கா எல்லாரும் ஓடி…அவ்வளவுதான், கடலுக்கு முதுகுகாட்டி நின்றுகொண்டிருந்த நான் இடது புறம் தலையைத்திருப்பினேன் தரைமணலைக்காணவில்லை .எல்லா இடமும் நீர்.என்னவென்று நிதானிக்கமுன் அதேகணமே எங்களை நீர் மூடிக்கொண்டது.அதுமட்டுமல்ல நீர் எங்களை வேகமாக இழுத்துச்சென்றது.நான் மூச்செடுக்கமுடியாது கைகளை நீரில் அடித்தேன்.அப்போது வலது கையில் ஏதோ தட்டுப்பட்டது.அதைப்பிடித்தேன்.சரக் என்று கை வெட்டுப்பட்டது.அப்போது அது பனையின் கருக்குமட்டை எனப்புரிந்தது. நான்இன்னும் இறுக்கமாகப்பிடித்தபோது எனது உடல் நீரினால் வேகமாக இழுக்கப்பட, நான் அணிந்திருந்த  சுடிதாரின் பிஜாமா கழன்று நீரோடு போனது .நான் மிகச்சிரமப்பட்டு மற்றைய கையையும் எடுத்து இன்னுமொரு கருக்கைப்பிடித்தேன்.அதிலும் பலமான கருக்குவெட்டு,அவ்வாறே கால்களையும் எப்படியோ பனையில் வைத்தேன்.இன்னும் பலமாகக் கருக்கு வெட்டிற்று. இப்போ நான் கடலைப்பார்த்தவாறே பனையில் நிற்கமுடியாது நின்றுகொண்டிருந்தேன்.கைகால்களால் இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது. மற்றவர்களுக்கு என்னாச்சுதோ என மனம் பதறிக்கொண்டிருந்தது.கடலைப்பார்த்து எரிச்சலானேன்.சின்னவயதில் விளையாடிய கடற்கரையா இது?மாலை நிலாவை ரசித்த இடமா இது? நீரிலே கால்வைத்துக் கிண்டி ஏரல்  பிடித்து மகிழ்ந்த கடலா இது? ஏமாற்றம் கோபம் எல்லாம் ஒன்றாக என்னைத்தாக்கியது.
 இது என்ன சோதனை அடுத்த பெரிய அலையொன்று மேலெழுந்து வந்துகொண்டிருந்தது.அப்படி ஒரு அலையைத்திரைப்படங்களில் மிகைப்படுத்தப்பட்ட வடிவில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அவ்வளவு பயங்கரமாக,பலதலைகள் கொண்ட நாகம்போல அது எம்மை விழுங்க வந்துகொண்டிருந்தது. அப்படித்தான் எனக்குத்தோன்றிற்று.                            சரி,எனது ஊரிலேயே நான் இப்படித்தான்  சாகவேண்டும் என்பது விதி என எண்ணிக்கொண்டு  ,தலையைத்திருப்பிக் கோவில் இருக்கும் திசையைப்பார்த்து” நீ உண்மையான கடவுளென்றால் மற்ற எல்லாரையுமாவது காப்பாற்றிவிடு” என வாய்விட்டுக்கூறிக்கொண்டேன்.மீண்டும் திரும்புகிறேன் ,வந்துகொண்டிருந்த அலை அப்படியே படிந்து நீர்மட்டத்தை உயர்த்திவிட்டது. இப்போது எனது கழுத்துமட்டத்தில் கடல் நீர் .மீண்டும் திரும்பிப்பார்க்கிறேன். ஹையெஸ் வாகனம் தண்ணீரில் மிதந்துகொண்டிருக்க அதன் கதவு கழன்று நீரோடு போகிறது.அதுஒரு சினிமாக் காட்சிபோலவே உணர்ந்தேன்.கோவிற்பக்கமாக மணல் உயரமாக இருந்ததால் நீர் அதனை முட்டி மோதிக்கொண்டிருந்தது. பனங்கூடலுக்கிடையில் நீரோரமாக மதி எதையோ தேடிக்கொண்டிருந்தாள். அப்பாடி ஒருத்தி உயிரோடு இருக்கிறாள் என்று எண்ணிக்கொண்டேன்.நான் கத்தினாலும் அவளுக்குக்கேட்காது. ஏனென்றால் கடல்தான் பெரிதாக இரைந்துகொண்டிருந்ததே.
எனது கைகள் வலுவிழந்துவிட்டன. ஏற்கனவே காயப்பட்ட கைமுழுவதும் கருக்கினாற் பதம்பார்க்கப்பட்டுவிட்டது .இப்படியிருக்க நீர் திரும்பிக் கடலைநோக்கி ஓடத்தொடங்கியது.சற்று நேரத்தில் நீர்மட்டம் குறைந்துவிட்டது. நான் கீழே குதித்தேன்.நீர்மட்டம் எனது இடுப்பளவு இருந்தது. பின்னோக்கி நீரோட்டத்திற்கெதிராக நடந்து வீதியில் ஏறி நடந்தேன்.150மீற்றர் நடக்கக் கோவிலடி.அங்கே எல்லோரும் காயங்களுடன் நின்றிருந்தார்கள்.என்னைக்கண்டதும்எல்லோர்முகத்திலும் நிம்மதி தெரிந்தது.எனது மாமா ஒருத்தர் வீட்டிற்கு ஓடிச்சென்று சாறம் ஒன்றைக்கொண்டு வந்து தந்தார்.அப்போதுதான் பார்த்தேன் எனது மேற்சட்டை பல இடங்களில் கிழிந்து போயிருந்தது.உடலிலும் காயங்கள் இருப்பதை உணர்ந்தேன்.பூமாக்காவுக்கு அவரின் காயப்பட்ட கை பலத்த காயத்துக்கு இலக்காகியிருந்தது.இதற்கிடையில் என் அப்பா எங்களைத்தேடிக் கோவிலடிக்கு வந்து எல்லோரையும் விரைவாக அவ்விடத்தைவிட்டுப்பாதுகாப்பான இடத்திற்குப் போகச்சொன்னதாகவும், நான் மட்டும் அங்கு இல்லை என்பதால் அவர் கவலையுடன் திரும்பிவிட்டதாகவும் சொன்னார்கள்.
பின்பு எனக்குத்தெரிந்த ஒருவர் landmaster (லான்ட்மாஸ்டர்) கொண்டுவந்தார். நாம் அனைவரும் அதில் ஏறி பிரதானவீதிக்குவந்து அளம்பில் நோக்கிச்சென்றுகோண்டிருக்கும்போது சாம்பவியக்காவவையும் ஜனாவையும் இடையில் ஏற்றிக்கொண்டோம் அப்பா குமுளமுனையில் அம்மா தங்கச்சியை விட்டுவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தார்.எங்களைக்கண்டதும் அவருக்கு அளவற்ற நிம்மதி.அளம்பில் சந்தியில் வைத்து நண்பன் ஒருத்தன் ஹையெஸ் வானில் எங்களை ஏற்றிக் குமுழமுனையூடாக முள்ளியவளை வைத்தியசாலைக்குக் கூட்டிச்சென்றான்.அப்போதுதான் அறிந்தோம் முல்லைத்தீவு அதிகளவிற் பாதிப்படைந்துவிட்டது  என்று. முள்ளியவளையை அடைந்தபோது தான் அதிகளவு உயிர்கள்காவுகொள்ளப்பட்டுவிட்டன என்பது தெரிந்தது.முள்ளியவளை வித்தியானந்தாக்கல்லூரியில் உயிரற்ற உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. கல்லூரி வளாகம் சாவோலத்தால் கலகலத்துப்போயிருந்தது.முள்ளியவளை வைத்தியசாலை பிணங்களால் நிறைந்திதிருந்தது. குழந்தைகள்,இளையோர்,  வயதுவந்தோர் என ……எங்கள் மனநிலை எப்படியிருந்தது என்று என்னால் விவரிக்கமுடியவில்லை.
நாங்கள் மயூரி முகாமிற்குச்சென்று மருந்து கட்டிக்கொண்டோம்.பூமாக்காமேலதிக சிகிச்சைக்காக புதுக்குடியிப்புப் பொன்னம்பலம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.


குறிப்பு: ஆழிப்பேரலையின் போது எமது மக்களை மீட்கும் பணியிலும்  பின்னர் அவர்களுக்கு ஆவன செய்யும் பணியிலும் விடுதலைப்புலிகளின் பல படையணிகளும் துறைசார்போராளிகளும் பங்கெடுத்து விரைந்து செயலாற்றினர்.(காயங்கள் ஓரளவு மாறியவுடன் நாங்களும் அப்பணியில் இணைந்துகொண்டோம்.)


கி.மணிமொழி26.12.2020

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment