வலி.கிழக்கு பிரதேசசபை விவகாரம்! இலங்கைத்தீவு முழுவதும் உள்ள உள்ளாட்சி மன்றங்களின் ஜனநாயகத்தையும், சுயாதீனத்தையும் பாதுகாப்பதற்கான போராட்டம். – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு

0 0
Read Time:7 Minute, 26 Second

வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் ஆட்சி அதிகார எல்லைக்குள் வசிக்கும் மக்கள் ஒரு உண்மையை விளங்கிக்கொள்ள வேண்டும். இங்கு பிரச்சினை வீதி அபிவிருத்தி பற்றியதோ, வளப்பங்கீடுகளில் பாகுபாடு பற்றியதோ அல்ல! உள்ளாட்சி சபைகளுக்கு என்று ஏலவே  குறித்து ஒதுக்கப்பட்டுள்ள அல்லது பகிரப்பட்டுள்ள அதிகாரங்களை அந்தந்த பிரதேசசபைகள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அந்தந்த பிரதேச சபைகளின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களும் அதை முழுமையாக அநுபவிக்க வேண்டும்.  


ஆனால் கொழும்பு மத்திய அரசாங்கமோ, உள்ளாட்சி சபைகளுக்கு என்று ஏலவே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை அந்தந்த பிரதேசங்களுக்குட்பட்ட மக்கள் முழுமையாக அநுபவித்து விடாமல் எப்படி வஞ்சிக்கிறது? எப்படி கபளீகரம் செய்கிறது? எப்படி துஸ்பிரயோகம் செய்கிறது? எப்படி தடை போடுகிறது? என்பதனை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவதும்,  பறிக்கப்படும் உரிமைகளுக்காக போராடுவதும் தான் வலி.கிழக்கு பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் நோக்கமாக இருக்கிறது. நீங்கள் வாக்களித்து தெரிவு செய்த தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பிரதேசவாசிகளான உங்களது நலன் நோக்குநிலையிலிருந்து எடுக்கும் இத்தகைய நல்லெண்ண முயற்சிக்கு முழுமையான ஆதரவை நீங்கள் வழங்குங்கள். “சிறீலங்கா அரசிடம் தமிழ் மக்கள் இழந்துள்ள உரிமைகளைப் போராடிப் பெற வேண்டும். அதேவேளை இருக்கின்ற உரிமைகளை இழந்து விடாமல் பாதுகாக்கவும் வேண்டும்.” இப்படியான ஒரு போராட்டத்தை தான் உங்கள் பிரதிநிதிகளான  பிரதேசசபையின் தவிசாளரும், உறுப்பினர்கள் சிலரும் ஆரம்பித்துள்ளனர். ஆகவே அவர்களுக்கு பக்கபலமாக இருந்து பகிரப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாக அநுபவிக்க வேண்டியது வலி.கிழக்கு பிரதேசத்துக்குள் வசிக்கும் மக்கள் உங்களது தார்மீக கடமையும், உரிமையும் ஆகும்! 
வடக்கு மாகாணசபைக்கும் இதுதான் நடந்தது. அவ்வளவு ஏன் இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கும் இது தானே நடந்தது. வேண்டுமாயின் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை வலுவிழக்கச் செய்தது போலவே கொழும்பு மத்திய அரசு, உள்ளாட்சி மன்றங்களுக்கு வழங்கியிருக்கும்  அதிகாரங்களையும் வலுவிழக்கச் செய்துவிட்டு உள்ளாட்சி அதிகாரசபை எல்லைகளுக்குள் சண்டித்தனம் செய்யட்டும். காட்டாட்சி புரியட்டும். அதுவரைக்கும் பகிரப்பட்டிருக்கும் உரிமைகளையும், அதிகாரங்களையும் மத்திய அரசாங்கத்துக்கு விட்டுக் கொடுக்க முடியாது. முடிந்தால் சட்டத்தால் சுவீகரியுங்கள். அப்போதுதான் ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் இலங்கையின் நீதித்துறை என்பது சுயாதீனமாக இயங்குகிறதா? என்பதற்கும் பதில் கிடைக்கும். உள்நாட்டு நீதிபரிபாலன கட்டமைப்புகளில் நம்பிக்கை இழந்தமையினாலேயே தமிழ் மக்கள் சர்வதேச நீதியைக் கேட்டு நிற்கிறார்கள் என்பதையும் இத்தருணத்தில் கவனத்தில் கொள்ளுங்கள். ஆகவே வலி.கிழக்கு பிரதேசசபையின் போராட்டமானது இலங்கைத்தீவு முழுவதும் உள்ள உள்ளாட்சி மன்றங்களின் ஜனநாயகத்தையும், சுயாதீனத்தையும் பாதுகாப்பதற்கான போராட்டமாகவே பார்க்கப்பட வேண்டும். 
ஏற்கனவே மத்திய அரசால் இறைமை பகிரப்படாததால், நாடு மொழி மற்றும் இனம் ரீதியாக சிங்கள தேசம் என்றும், தமிழர் தேசம் என்றும் இரண்டாக பிளவுபட்டுக் கிடக்கிறது. கடந்த காலத்தில் புதிய அரசியலமைப்பு வரைபுக்கான யோசனைகள், கருத்தறியும் செயன்முறையின் போதும் கூட இலங்கையில் உள்ள சகல மாகாணசபைகளின் முதலமைச்சர்களும் கொழும்பு மத்திய அரசுக்கு கட்டுப்படாமல் சுயாதீனமாக தனித்து இயங்கவே விரும்புகிறோம் என்றும் அறிக்கை சமர்ப்பித்து விட்டார்கள். இந்நிலையில் உள்ளாட்சி மன்றங்களின் அதிகாரங்களிலும் மூக்கை நுழைத்தால் நாடு எத்தனை துண்டாக உடைய வேண்டும்? என்பதனை ஆட்சியாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். 
வலி.கிழக்கு பிரதேசசபையின் அண்மைக்கால விவகாரம் உணர்த்துவது இதைத்தான். ஆனால் இந்த உண்மைநிலையை மறைத்து, தமிழ் மக்களை தமிழ்த் தேசியத்தின் பெயரால் திரளாக்க விடாமல் சாதி ரீதியாக, மத ரீதியாக, பிரதேச ரீதியாக பிளவுபட வைத்து குறுங்குழுவாத உதிரிகளாகவே வைத்திருக்க நினைக்கும் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தின் நிகழ்ச்சிநிரலுக்கு ஒத்தோடி தமிழர் வீட்டைக் கொழுத்த கொள்ளிக்கட்டை எடுத்துக் கொடுத்து சிற்றின்பம் காணும் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட தென்னிலங்கை கட்சிகளின் முகவர்களின் நாசகார அழிவு நடவடிக்கைகள் தொடர்பில் விழிப்பு நிலையில் இருந்து, தோற்றுப் போகாத – சமரசம் இல்லாத தமிழ்த் தேசியம் காக்கும் பணியில் பற்றுறுதியுடன் தொடர்ந்தும் பயணிக்குமாறு தமிழீழ மக்களை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு கேட்டுக்கொள்கின்றது.உண்மையாய்… உரிமையாய்… உணர்வாய்…மக்கள் நலப்பணியில்,வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு
தலைவர் கோ.ராஜ்குமார் (0094 77 854 7440) ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment