
அன்புக் குழந்தையே
பாலச்சந்திரா
நீ மலர்ந்த நாள் இன்று!
உச்சி முகர்ந்து
உலகாளு எனக் கூறி
உவகையுடன் வாழ்த்துரைக்க
உன்னைத் தேடுகிறோம்…
கட்டியணைத்து
கண்ணே நீ வாழ்க என
களிப்புடனே வாழ்த்துரைக்க
உன்னைத் தேடுகிறோம்…
எங்கையா போய்விட்டாய்..?
முத்துப் பல் தெரிய
முழுதாக விழி விரித்து
முகைவிரித்த மலராக
முழுநிலவாய் சிரிப்பவனே
உன்னைத் தொலைத்துவிட்டு
உட்கார்ந்து தேடுகிறோம்
பாவிகள் நாம் என் செய்வோம்
பாழுலகம் வாழ்கின்றோம்..!
தந்தைதாய் திருமண நாள்
நீ மலர வரம் பெற்றாய்
தன்மான வீரர் மடி
நீ தவழ வரம் பெற்றாய்
இடையில்
எங்கிருந்து நுழைந்தது
இந்தக் கொடிய விதி..?
இல்லையில்லை
அது வலிய சதி…!
வேண்டாம் ஐயா
எங்கள் குரல் கேட்டு
வந்துவிடாதே ஓடி
விண்ணகத்தில் நிம்மதியாய்
உறங்கியிரு சிலகாலம்
ஏனெனில்
உயிர்கள் மலிவான
உயரிய பூமியிது இப்போது
மனிதநேயமற்ற
மாய உலகம் இது இப்போது
உன்னைப் போல்
பால்வடியும் பிஞ்சுகளின்
பஞ்சுப் பாதம் பட
உகந்தது அல்ல இந்த
ஊமை உலகு.
கொஞ்சம் பொறுத்திரு
இன்னும் சில காலம்தான்
எல்லாமே மாறிவிடும்
எங்களது நேரம் வரும்
நரவேட்டை மனிதர்களின்
நாட்கள் முடிந்துவிட
கண்டிப்பாய் விடியும் எம் தேசம்
அப்போது வா மகனே
அள்ளியணைத்து
அகம் மகிழ துடிக்கின்றோம்
அதுவரை காத்திருப்போம் உனக்காக…!
மது நோமன்.