திட்டமிட்டபடி நாளை பூரண கதவடைப்பும் ஆளுனர் அலுவலகம் முன் போராட்டமும் இடம்பெறும்

அனுரதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை வெள்ளிக்கிழமை 13-10-2017 அன்று பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில்
திட்டமிட்டவாறு வடமாகாணம் முழுவதும் பூரண கதவடைப்பு நடைபெறும் என்பதுடன் வடமாகாண ஆளுனர் அலுவலகம் முன்பாக எதிர்ப்புப் போராட்டமும் இடம்பெறும்.
ஆளுனர் அலுவலகம் முன்பாக பொது மக்களை காலை 9.00 மணியளவில் ஒன்றுகூடுமாறும் அழைக்கின்றோம்.

கதவடைப்பு நடைபெறும்போது அவசர வைத்திய தேவைகளுக்காக செல்லும் பொது மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்த வேண்டாம் என்றும் வீதிகளில் தடைகளை ஏற்படுத்துதல் இ ரயர்களை எரித்தல் போன்ற செயற்பாடுகளில் எவரும் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.
நாளை மறுதினம் சனிக்கிழமை யாழ்வரும் மைத்திரி மற்றும் சம்பந்தனுக்கு எதிராகவும் போராட்டம் இடம்பெறும். அது பற்றிய பொது அமைப்புக்களின் கூட்டறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பான ஊடக அறிக்கை
12-10-2017
வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த தங்களுடைய வழக்குகள் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்து, அந்த வழக்குகள் மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்னும், கோரிக்கையை முன்வைத்து தமிழ் அரசியல் கைதிகள் மூவர் கடந்த 18 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக ஒரு தீர்க்கமான முடிவெடுக்கும் அதிகாரமுடைய ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்த போதிலும் கூட இதுவரை எந்தவொரு காத்திரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேவேளை இது தொடர்பில் ஜனாதிபதியின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டிய பொறுப்பிலிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இதுவரை எந்தவொரு காத்திரமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதுடன், அரசாங்கத்தை உள்நாட்டிலும் சர்வதேசமட்டத்திலும் காப்பாற்றி வருகின்றார்.
இவ்வாறானதொரு சூழலில், தமிழ் அரசியல் கைதிகள் மூவரினதும் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதியின் மீதும் எதிர்கட்சித் தலைவர் மீதும் அழுத்தத்தை பிரயோகிக்கும் முகமாக 13.10.2017 வெள்ளிக்கிழமை அன்று, வடக்கு மாகாணம் தழுவிய வகையில் கதவடைப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கின்றோம்.
அரசியல் கைதிகள் தங்களின் உயிர்களை பணயம் வைத்து போராடிவருகின்ற நிலையில், அவர்களது நியாயமான கோரிக்கைகளை பொருட்படுத்தாது, 14.10.2017 சனிக்கிழமை அன்று, ஜனாதிபதியும் எதிர்கட்சித் தலைவரும் பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ளனர். இது தமிழ் மக்களுக்கு எந்தவகையிலும் ஏற்புடையது அல்ல என்பதுடன், வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதுமாகும்.
உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாது ஜனாதிபதியோ, எதிர்கட்சித் தலைவரோ வெறுமனே நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக வருகைதருவார்களாக இருந்தால், அவர்களுக்கு எதிராக காத்திரமான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு தமிழ் மக்கள் நிர்பந்திக்கப்படுவார்கள்.
இவ்வாறானதொரு சூழலில், அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை புறக்கணித்து ஜனாதிபதியும் சம்பந்தனும் 14.10.2017, சனிக்கிழமை அன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்வார்களாயின், அந்த நிகழ்வுகளை புறக்கணிக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோரை தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.

ஏற்பாடு.
பொது அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும்