ஈழத்தமிழ்ப் பெண்களின் எழுச்சியின் வடிவம் 2ஆம் லெப். மாலதி! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

ஆண்டாண்டு காலமாக சமூகத்தில் நிலவிவந்த பெண்கள் தொடர்பான வரையறைகளை புதுப்பித்தெழுதியதுடன் ஈழத்தமிழ்ப் பெண்களின் எழுச்சியின் வடிவமாகவும் 2ஆம் லெப். மாலதி அவர்கள் திகழ்கின்றார். தமிழீழ பெண்கள் எழுச்சி தினத்தை முன்னிட்டு வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கையில்..,

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் புதிய அத்தியாயத்தின் பிறப்பிற்கான முதல் விதையாக 2ஆம் லெப். மாலதி அவர்கள் தன்னையே ஆகுதியாக்கிய நாளாகிய ஒக்டோபர்-10 தமிழீழ பெண்கள் எழுச்சி நாளாகும்.

அன்றைய எமது சமூகக்கட்டமைப்பின் இரும்புப்பிடிக்குள் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட பேதுருப்பிள்ளை சகாயசீலி மாலதியாக புதிய வடிவம் எடுத்திருந்தாள். அடுப்பங்கரைக்குள் முடங்கிக்கிடப்பதற்காகவே பிறப்பெடுத்தவர்கள் பெண்கள் என்ற வரலாற்றை திருத்தியெழுதி பெண்களாலும் எதையும் சாதிக்க முடியும் என்பதை உலகிற்கு உணர்த்திய தருணமாக 2ஆம் லெப். மாலதி அவர்களின் வீரச்சாவு அமைந்திருந்தது.

புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் இலக்கியங்களில் பெண்கள் தொடர்பாக கட்டியெழுப்பப்பட்டிருந்த தவறான விம்பத்தை சுக்குநூறாக உடைத்தெறிந்து புதிய வரலாறு படைத்த பெண் புலிகள் சரித்திரத்தின் நீட்சியாக தாய் மண் விடிவிற்கும் தமிழ் மக்களின் மீட்சிக்குமாக தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் எமது பெண்கள் பேரெழுச்சி கொண்டு ஓயாது போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கேட்டு இருநூறு நாட்களைக் கடந்து தாயகத்தின் பல பகுதிகளில் எமது பெண்கள் உறுதியுடன் போராடிவருகின்ற அதே வேளை எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி புலம்பெயர் தேசமெங்கும் ஈழத்தமிழ் பெண்களும் எழுச்சியுடன் போராட்டங்களில் பங்கேற்று வருகின்றமை பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது.

தமிழர்களை அழித்தொழித்து அடக்கியாளும் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தின் வழியே நாம் எதிர்கொண்டு வரும் அத்தனை இன்னல்களில் இருந்தும் எம்மையும் எமது வருங்காலத் தலைமுறையையும் காப்பாற்றும் போராட்டத்தை ஜனநாயக வழியில் மேலும் தீவிரப்படுத்த இன்றைய நாளில் உறுதியேற்போம்.